திருக்குறளில் சிந்தனையை முதலீடு செய்ய வேண்டும்: இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை
நமது வாழ்வியலுக்கான மூலதனம் திருக்குறள். இதில் அனைவரும் சிந்தனையை முதலீடு செய்ய வேண்டும் என்று இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.
நமது வாழ்வியலுக்கான மூலதனம் திருக்குறள். இதில் அனைவரும் சிந்தனையை முதலீடு செய்ய வேண்டும் என்று இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.
பெங்களூரு திருவள்ளுவர் சங்கம், தாய்மொழி கூட்டமைப்பு, புனித வளனார் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் சார்பில் பெங்களூரில் உள்ள புனித வளனார் பல்கலைக்கழக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 7-ஆவது உலகத் திருக்குறள் மாநாட்டை தொடங்கிவைத்து, கன்னடத்தில் எழுதப்பட்டுள்ள திருக்குறள் மழலையர் நூல், "திருக்குறள் உணர்த்தும் உலக அமைதியும், மாந்தநேய மாண்புகளும்' என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு நூலை வெளியிட்டு, அவர் பேசியதாவது:
பெங்களூரில் உலகத் திருக்குறள் மாநாடு நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அதற்காக பாடுபட்ட திருவள்ளுவர் சங்கத் தலைவர் எஸ்.டி.குமார், அவருக்கு ஒத்துழைத்த அனைவரையும் பாராட்டுகிறேன். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட திருக்குறள், அன்றைய வாழ்க்கைக்கு ஏற்றவகையில் எழுதியிருந்தாலும், இன்றைக்கும் பொருந்துவதாக அமைந்துள்ளது தான் சிறப்பாகும்.
Advertisement
Advertisement
சமுதாயத்தின் கண்ணாடியாக திருக்குறள் எழுதப்பட்டிருக்கிறது. தொலைநோக்கு சிந்தனையோடு திருக்குறள் எடுத்தாளப்பட்டுள்ளது. ஒருவருடைய வாழ்க்கையை திருக்குறளை படிப்பதற்கு முன், பின் என்று பிரிக்கலாம்.
லியோ டால்ஸ்டாய் வழியாக அண்ணல் காந்தியடிகள் திருக்குறளை அறிந்துகொண்டார். திருக்குறளை படித்தறிய தமிழை கற்றுக்கொள்ள காந்தி விரும்பினார். திருக்குறளைப் படிக்க தமிழ் தெரியவில்லை என்பதை குறையாக நினைத்தார்.
ஆனால், திருக்குறளை அதன் மூலமொழியான தமிழில் படிக்க நமக்கு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. திருக்குறளை இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்க வேண்டும். பாடத்திட்டத்தின் வழியாக திருக்குறளை கொண்டுசேர்க்க விரும்புகிறேன். அனைவரும் வாழ்நாள் முழுவதும் கற்கவேண்டிய நூல் திருக்குறள்.
தினம் தினம் திருக்குறளை கற்கவேண்டும். நமது வாழ்க்கையை பல கோணங்களில் செம்மையாக்கக்கூடிய திருக்குறளை படித்தறிய வேண்டும். இளைஞர்களிடம் நம்பிக்கையோட்டத்தை உருவாக்க திருக்குறளை அவர்களிடம் கொண்டுசேர்க்க வேண்டும். நமது வாழ்வியலுக்கான மூலதனம் திருக்குறள். இதில் அனைவரும் சிந்தனையை முதலீடு செய்ய வேண்டும். வெவ்வேறு மொழிகளை சேர்ந்தவர்களும் திருக்குறளை பொதுமறையாக ஏற்றிருக்கிறார்கள். அதனால்தான் பலமொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
அடுத்த தலைமுறை நல்ல தலைமுறையாக இருக்க வேண்டும். அதற்கு அவர்களின் கையில் திருக்குறளை கொண்டுசேர்க்க வேண்டும் என்றார்.
தாய்மொழிக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், பெங்களூரு திருவள்ளுவர் சங்கத் தலைவருமான எஸ்.டி.குமார் பேசுகையில், "பெங்களூரில் செயல்பட்டுவரும் புனித வளனார் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கு, திருவள்ளுவர் சங்கம் மற்றும் தாய்மொழி கூட்டமைப்பின் சார்பில் ரூ.10 லட்சம் நன்கொடை வழங்கப்படும்' என்றார்.
பல்கலைக்கழக இணைவேந்தர் கிறிஸ்டோ வி.செல்வம் முன்னிலை வகிக்க எஸ்.டி.குமார், முன்னாள் துணைவேந்தர் சி.சுப்பிரமணியம், கு.மோகனராசு, த.ஞானசேகரன், சி.ராஜேந்திரன், சேயோன் முருகன், ஆர்.உமாபாரதி, சாய்கீதா ஹெக்டே, சிவகுமார் கோபால், மு.ஞானமூர்த்தி, டாக்டர் இ.ஸ்ரீநாத் ஆகியோர் திருக்குறள் குறித்து உரையாற்றினர். திருக்குறள் வளர்ச்சி குறித்த நூலை வலைத்தமிழ் ஆசிரியர் சா.பார்த்தசாரதி வெளியிட, மெய் சித்ரா பெற்றுக்கொண்டார்.
விழாவில் கன்னியாகுமரி திருவள்ளுவர் அறக்கட்டளை, மதுரை திருவள்ளுவர் கழகம், தென்காசி திருவள்ளுவர் கழகம், பெங்களூரு திருவள்ளுவர் சங்கம், தாய்மொழி கூட்டமைப்பு போன்ற அமைப்புகளின் நிர்வாகிகள் பாராட்டப்பட்டனர்.
திருக்குறளை கன்னடமொழியில் மொழிபெயர்த்த மு.பசுமலையரசு, கொங்கணி மொழியில் மொழிபெயர்த்த ஸ்வேதாபாய், கொரகா மொழியில் மொழிபெயர்த்த பங்கபாபு ஆகியோர் சிறப்பு செய்யப்பட்டனர்.
சேர, சோழ, பாண்டியர் அரங்கங்களில் கு.மோகனராசு, க.திலகவதி, இராம.இளங்கோவன் ஆகியோர் தலைமையில் ஆய்வரங்கங்கள் நடைபெற்றன. இதில் 86 ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுக் கட்டுரைகளை படித்தளித்தனர். அவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள், பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, கர்நாடகத் தமிழ்ப்பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட திருக்குறள் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது.
கர்நாடகத்தில் செயல்பட்டுவரும் 30 தமிழ் அமைப்புகள், 100 கவிஞர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நிறைவில், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை பெங்களூரு திருவள்ளுவர் சங்கத் தலைவர் எஸ்.டி.குமார் தலைமையில் புனித வளனார் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் விக்டர் லோபோ, பதிப்பாளர் சையத் வாஜீத், அயலகப் பிரிவுத் தலைவர் கிறிஸ்டோ வி.செல்வன், இந்திய மொழிகள் துறைத் தலைவர் அருள்மணி, இணை இயக்குநர் பி.வேணுகோபால், தமிழ்த் துறை தலைவர் சரளா ராஜகோபால், தன்னுரிமை மனமகிழ் மன்றத் தலைவர் ராஜசேகர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
இந்த மாநாட்டில் கர்நாடகம் மட்டுமல்லாது, தமிழகம், மகாராஷ்டிரம், கோவா, தில்லி, மேற்கு வங்கம், தெலங்கானா, ஆந்திரம், சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங், பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள், நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான அறிஞர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
உலக அளவில் மொழிபெயர்க்கப்பட்ட பல்வேறு மொழிகளில் திருக்குறள் நூல்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்தன. 7,000 வகையான திருக்குறள் நூல்கள் விற்பனைக்கு கிடைத்தன. இந்த நூல்களை பங்கேற்பாளர்கள் ஆர்வமாக வாங்கிச் சென்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.