முகப்பு
தமிழ்மணி

வள்ளுவர் கண்ட பாவை

இயற்கையை அழகிய காட்சிகளாகப் புலவர்கள் வருணிப்பதுண்டு. அவர்கள் தம் கருத்தைத் தெளிவுற விளக்குவதற்கு உவமையைக் கையாள்வர்.

Updated On : 5 ஜூலை 2026, 6:27 pm IST
வள்ளுவர்
பகிர்:

இயற்கையை அழகிய காட்சிகளாகப் புலவர்கள் வருணிப்பதுண்டு. அவர்கள் தம் கருத்தைத் தெளிவுற விளக்குவதற்கு உவமையைக் கையாள்வர். கண்ணுக்குப் புலனாகும் பாவையை, உவமைவழியே தம் கருத்துகளை வெளிப்படுத்த விழைந்துள்ளார் திருவள்ளுவர்.

பாவையில் மண்பாவையும் உண்டு, மரப்பாவையும், கல்லாலான பாவையும் உண்டு. எல்லா வகையான பாவைகளும் அழகிய தோற்றம் கொண்டு உருவாக்கப்படுகின்றன.

திருவள்ளுவர் மண்ணால் செய்யும் பாவையைக் காண்கிறார். அதைக் குயவன் எழில் உருவமாக வனைந்திருப்பதனையும் பார்க்கிறார். அந்த மண்பொம்மையின் எழிலுருவான உடலழகு வள்ளுவரை ஈர்க்கிறது.

Advertisement

Advertisement

கண்ணைக் கவர்ந்த அழகை அப்படியே வேறொன்றுக்கு உவமையாக்க நினைக்கிறது அவரது உள்ளம். எவ்வளவுதான் வனப்பான உடல் அழகு பெற்றிருப்பினும், கற்றறிதலை ஆழ்ந்து நுட்பமாக நோக்காதவனை அந்தப் பாவையுடன் ஒப்பிடத் தோன்றுகிறது.

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்

மண்மாண் புனைபாவை யற்று. (குறள் 407)

உருவ அழகு இருந்தால் மட்டும் போதுமா? கற்றறிவு இல்லையென்றால் எச்சிறப்பும் இல்லை அல்லவா!

நாணம் மனிதருக்கு இருக்க வேண்டிய பண்பு

களுள் ஒன்று. இது இருபாலருக்கும் பொது. மரப்பாவை அங்கும் இங்குமாக அசைவதைப் பார்க்கிறார் திருவள்ளுவர். அது உயிருள்ளது போன்ற தோற்றத்தைத் தந்து மயக்குகிறது. மாந்தர் வாழ்வில் நாணமில்லாதவரின் இயக்கம், மரப்பாவையை இயந்திரக் கயிற்றால் இயக்கி, அதற்கு உயிரூட்டி ஆட்டுவதுபோல் மயக்குவதாகும் என்று அவருக்கு ஒப்பிடத் தோன்றுகிறது.

நாண்அகத்து இல்லார் இயக்கம் மரப்பாவை

நாணால் உயிர்மருட்டி மற்று. ( குறள் 1020)

உலகில் இரந்து வாழ்வோர் பலர். கொடுத்தலால், இறந்து பின்(புகழால்) வாழ்வோரும் உளர். இரப்பாரைக் கண்டு அவருள்ளத்தை உணரும் முன்பே கொடுப்பாரின் நெஞ்சம் இனிதாகும். அப்படிப்பட்டோர் பொருளை ஒளிக்காத உளத்தவராவர். அவரிடம் சென்று இரத்தலும் அழகுடையதே. உடையோர் ஈதலும் இல்லோர் மகிழ்தலும் உலகியல்பு. கொள்வார் இருப்பதினாலன்றோ கொடுப்பாரும் இருக்கிறார்கள். கம்பர் "வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்' என்று சுட்டியிருப்பதையும் நோக்கலாம்.

வறுமையுற்று யாசிப்பவர் (இரப்பார்) இல்லையானால், குளிர்ந்த இடத்தையுடைய இப்பேருலகின் இயக்கம் மரப்பாவையைக் கயிற்றால் இயக்குதற்கு ஒப்பாகும் என்கிறார் வள்ளுவர்.

இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்

மரப்பாவை சென்றுவந் தற்று. (குறள் 1058)

இவ்விரு இருசெய்யுள்களில் தச்சன் செய்த மரப்பாவையைச் சுட்டுகிறார். பாவை உயிரற்றது;

கைபுனைந்து இயற்றும் வனப்புடையதாயினும் அது வெறும் காட்சிப்பொருளே. இவற்றில் ஒன்று காட்சிப் பொருள்; மற்றொன்று செயற்கையாக இயக்கப்படும் பொருள். "உயிரிலா நிலையும் உணர்விலா நடையும் பார்த்திடில் சூத்திரப் பாவையே' என்பார் மனோன்மணீயம் சுந்தரனார்.

இவ்வாறு திருவள்ளுவர் தாம் பார்த்த பொருளை, உவமையாக்கி உலகியல் அனுபவத்தைத் தெளிவுற எடுத்துக்காட்டுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments