பொறுப்புணர்வு வீடுகளில் இருந்து தொடங்கட்டும்!
குழந்தைகள், பெண்கள் விஷயத்தில் கேவலம் செய்யும் எவருக்கும் தூக்குத் தண்டனை வழங்குவதற்கு நீதிமன்றங்கள் தயங்கவே கூடாது.
பெ.நா. மாறன்
பயணங்களின் போது, ஓர் அழகான குழந்தையைப் பார்த்தால், அதனுடைய துருதுருப்பும் செயல்பாடுகளும், பார்வையும் கவர்ந்திழுக்கும் போது, நம்மிடம் இருக்கும் சாக்லேட்டை அந்தக் குழந்தையிடம் தர முடிவதில்லை. அந்தக் குழந்தையை வாங்கி தூக்கிக் கொள்ள ஆசையாக இருக்கிறது. கேட்பதற்கு பயமாக இருக்கிறது.
அறிமுகமில்லாத இடங்களை விடுங்கள்; பக்கத்து வீட்டில், எதிர் வீட்டில் புத்திசாலித்தனமாக சேட்டை செய்யும் ஏழெட்டு வயது குழந்தைகளை, "என் வீட்டுக்கு வா நிறைய விளையாட்டுப் பொருள்கள் இருக்கின்றன' என்று அழைத்து வர முடிவதில்லை.
Advertisement
Advertisement
பழைய தலைமுறை நபர்களுக்கு ரத்த சம்பந்தம் இல்லாத ஏகப்பட்ட அத்தை, மாமாக்கள், சித்தப்பா, பெரியப்பாக்கள், சித்தி, பெரியம்மாக்கள் இருந்தார்கள். எப்போதெல்லாம் வாடகை வீடு மாறிப் போகிறோமோ, புது இடங்களிலெல்லாம் புதுப்புது உறவுகள் கிடைத்தார்கள். "சமையல் செய்ய விடாமல் தொந்தரவு பண்ணுகிறாள்; இவளைக் கொஞ்சம் உங்கள் வீட்டில் வைத்திருங்கள்' என்று உரிமையுடன் பக்கத்து வீட்டிலோ, எதிர்வீட்டிலோ தம் குழந்தையைக் கொடுத்து விட்டு, சுதந்திரமாக சமையல் செய்த தாய்மார்கள், அப்போது இருந்தார்கள். உறவுக்கார மரணம் ஏதும் திடீரென்று ஏற்பட்டால், பள்ளிக் குழந்தைகளை அழைத்துப் போவதற்குத் தயங்கி, அவர்களைப் பக்கத்து வீட்டில், எதிர் வீட்டில் விட்டுவிட்டுச் சென்றார்கள். ஓரிரு நாள்கள் கூட அடுத்த வீட்டில் நம் பெண் குழந்தைகள் தங்குவது இயல்பாக இருந்தது. இன்றைய பிள்ளைகளை நாடு முழுவதும் சுற்றி வர அனுப்பும் துணிச்சல் இருக்கும் பெற்றோருக்கு, அவர்களை அடுத்த வீட்டுக்கு அனுப்ப துணிச்சல் இல்லை.
நம் வீட்டு வாசலில் நிற்கும் இருக்கும்போது, சாலையில் சைக்கிளிலோ மோட்டார் சைக்கிளிலோ யாராவது இரண்டு முறை கடந்து போனால் அச்சம் வருகிறது. சிசிடிவி கேமராக்கள் வைக்க வேண்டிய அவசியம் காவல் துறைக்கு மட்டும் அல்லாமல், வீடுகளுக்கும் அவசியமாகி விட்டது.
பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்வதாக இருந்தால், மிளகுத்தூள், மிளகாய்த்தூள் என்று பாதுகாப்பு சாதனங்களுடன் செல் என்று பெற்றோர் சொல்ல வேண்டி இருக்கிறது. வயதுக்கு வந்த நம் பெண்ணோ பையனோ, தங்கள் வயதொத்த ஒரே ஒரு பையனுடனோ பெண்ணுடனோ பழகினால், அதைக்கூட இயல்பாக எடுத்துக்கொள்ள முடியாத அளவுக்கு பெற்றோருக்கு அழுத்தம் இருக்கிறது. நிறையப் பேருடன் பழகினாலும் வேறு வித பதற்றம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. பிள்ளைகளின் முகங்களிலும் நடைமுறைப் பாவனைகளிலும் வித்தியாசத்தையோ, அழுத்தத்தையோ பார்த்தால்கூட, அவர்களை அருகே அழைத்து, என்ன ஏது என்று இயல்பாகக் கேட்க முடிவதில்லை.
சூடான பாலை ருசித்த தெனாலி ராமனின் பூனை நிலையில் இருக்கிறது நம் இன்றைய வாழ்க்கை. நம்பிக்கை துரோகம் செய்யும் மனக்கசடுகள் நிறைந்த கயவர்களால் அந்த அளவுக்கா நிறைந்திருக்கிறது சமூகம்? சரி செய்ய முடியாத அளவுக்கா போய் விட்டது நிலைமை? இல்லை. எதிர்கால சமூக ஆரோக்கியத்துக்காக அண்மைக்காலமாக நாம் கண்டுகொள்ளாமல் கடந்து போய்விட்ட சிறிய காரணி ஒன்றைக் கண்டறிந்து சரி செய்ய முயற்சிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
போதை மட்டுமே மனிதனை மனிதத் தன்மையை மறக்க வைக்கும் ஒரே விஷயம். மனிதத் தன்மையை இழந்தால் மட்டுமே எந்தக் கயவனாலும் சக பெண்ணைத் தவறான எண்ணத்துடன் பார்க்க முடியும். அப்படிப்பட்டோரை அடையாளம் காண்பது கடினம். "மக்களே போல்வர் கயவர்' என்றாரே வள்ளுவர். (கயவன் மனிதனே அல்லன்; ஆனால், துரதிருஷ்டவசமாக அவனும் மனிதனைப் போலவே இருப்பான் என்று எவ்வளவு ஆழமான பொருளில் சொல்லி இருக்கிறார்.)
கயவன் உருவாவதற்கும், கயவனிடம் பாதிப்படைவதற்கும் ஒரே அடிப்படைக் காரணம் அன்புக்கான ஏக்கம் என்பதை உணர வேண்டும்.
அடுத்தவர் மீது அன்பும் பாசமும் கொள்வதென்பது நம்முடைய மரபணுக்களில் ஊறிய ஒரு விஷயம். எந்த விலங்கும் தன்னுடைய வாரிசுக்கு சுயமாக உணவு தேடிக் கொள்ளும் பக்குவம் வந்த பிறகும் அதை ஒட்டித் திரிவதில்லை. அதற்கு உதவ வேண்டுமே என்று தன்னை இழந்து, அதை வாழ வைத்து ஏக்கத்தில் மடிவதில்லை. அந்த இயல்பு மனிதனுக்குள் மட்டுமே இருக்கிறது.
ஆனால், அந்த இயல்புக்கு மாறாக வாழ்வின் ஆதாரம் பொருள் மட்டுமே என்ற பொருளாதார சிந்தனையில் மூத்த தலைமுறை தம்மை இழக்கத் தொடங்கியதுதான் இளைய தலைமுறை அன்புக்கு ஏங்குவதும், கயவர்களிடம் ஏமாறுவதும், முகம் மட்டுமே தெரிந்த திரையுலகப் பிரபலங்களிடம் சிந்தனையைத் தொலைப்பதும், போலி முகங்களுடன் உலாவரும் சமூக வலைதள நண்பர்களிடம் தம்மை இழப்பதும், அதையும் தாண்டி, இழப்புகளை மறந்து ஒரு கற்பனை உலகத்தில் மிதந்தபடியே இருப்பதற்காக போதைக்கு அடிமையாவதும் தொடர்வதற்கு காரணம்.
எவரிடமோ ஏமாந்துபோய் வாழ்க்கையைத் தொலைத்த பெரும்பாலோர், தம் பெற்றோருக்கும் தமக்கும் ஏற்பட்டிருந்த இடைவெளியும், தம் அழுத்தங்களைப் பகிர்ந்து கொள்ள நம்பகமான நட்பு கிடைக்காததும்தான் இந்த நிலைக்குக் காரணம் என்கிறார்கள். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரத்துக்கு வரும் பெற்றோர் தவறாமல் சொல்வது, "இவனுக்கு, இவளுக்கு நாங்கள் என்ன வசதி செய்து தரவில்லை; இப்படி சீரழிந்து போவதற்கு நாங்கள் எப்படிப் பொறுப்பாக முடியும்?' என்பது. எது தேவையோ அதை இவர்கள் கொடுக்காததும், அதை அவர்கள் தவறான இடத்தில் தேடப் போன அவலமுமே அனைத்துக்கும் காரணம்.
அந்தத் தவறான இடங்களைக் கண்டறிந்து சரிசெய்யும் தீவிர முயற்சியில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசு ஈடுபட்டிருப்பது பாராட்டுக்குரிய ஒன்று. போதைக் கலாசாரத்தின் ஊற்றுக் கண்களாகிய விநியோகப் புள்ளியைக் கண்டறிந்து அழிப்பதும், பாதிக்கப்பட்டோர் நலன்களுக்கான நடவடிக்கைகள் எடுப்பதும் இணையாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்.
அந்தப் பொறுப்பு அரசுக்குத்தான் என்று ஒதுங்காமல், பொதுமக்கள், தமது குடும்பத்திலேயே கயவர்களோ, அவர்களால் பாதிக்கப்பட்டவர்களோ இருப்பார்களென்றால், குடும்ப கெüரவம் என்ற போலித்தனமான சமாதானத்துக்குள் ஒளிந்து கொள்ளாமல், காவல் துறையிடமோ மனநல மருத்துவர்களிடமோ ஒப்படைக்கும் துணிச்சலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். உடலுக்குள் வளர்ந்தது என்பதற்காக புற்றுக் கட்டிகளை மறைத்துக் கொண்டா வாழ்கிறோம்? மருத்துவரிடம் சொல்லி வெட்டி எடுத்து விடுவதில்லையா? குடும்பத்துக்குள் வளரும் புற்றுநோய்களைக் கூச்சமில்லாமல் வெளியே சொல்லி வெட்டி எறியும் பொறுப்புணர்வு இல்லை என்றால், சமூகம் என்கிற உடலின் ஆரோக்கியமான மற்ற அங்கங்களையும் அந்தப் புற்று பாதித்து உடல் மொத்தமும் அழுகிப் போய் விடும்.
மிகக் கடுமையான சட்டங்களால் மட்டுமே கயவர்களின் மனதில் ஓரளவுக்காவது அச்சத்தை உண்டாக்க முடியும். குழந்தைகள், பெண்கள் விஷயத்தில் கேவலம் செய்யும் எவருக்கும் தூக்குத் தண்டனை வழங்குவதற்கு நீதிமன்றங்கள் தயங்கவே கூடாது. அந்தக் கைதிகள் மேல்முறையீடு என்று போவதாக இருந்தாலும், அவர்களுக்கு பிணை வழங்கப்படுவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். பிணையில் வெளியே வந்து அதே தவறைச் செய்த சில சம்பவங்களையும் நாம் பார்த்து விட்டோம்.
என் கணவருடைய, மகனுடைய, மகளுடைய தனிமனித நடவடிக்கைகளில் சந்தேகம் இருக்கிறது என்று ரகசியமாகவாவது எவரும் துணிந்து புகார் அளிக்கும் ஏற்பாடுகளை அரசு முன்வந்து செய்ய வேண்டும். சிங்கப் பெண் அதிரடிப்படை திட்டத்தில் இதையும் ஓர் அங்கமாக்க வேண்டும். குப்பைத் தொட்டியில் இருந்து தங்கச் சங்கிலியை எடுத்துக் காவல் நிலையத்தில் ஒப்படைக்கும் பெண் எந்த அளவுக்குப் பாராட்டப் படுகிறாரோ, அந்த அளவுக்கு இப்படிப் புகார் தந்து தம் குடும்பத்தின் களையை வெளிக்கொணரும் பெண்ணோ- ஆணோ போற்றப்பட வேண்டும்.
தம் வாரிசுகளை நல்ல சமூக அலகாக உருவாக்க வேண்டியது, தம்முடைய பொறுப்பு என்கிற அக்கறை, பெரியோர்களுக்கு முதலில் வேண்டும். அவர்கள் செய்ய வேண்டிய ஒரே விஷயம் பிள்ளைகளுக்காக நேரம் ஒதுக்குவது மட்டுமே. நேரம் இல்லாதவர்களுக்கு எதற்கு வாரிசுகள்?
கருத்தரிப்பு சோதனையில் வென்று எதிரே உட்கார்ந்திருக்கும் இளம் பெற்றோரிடம் கரு ஆரோக்கியமாக வளர ஆலோசனைகளையும் மாத்திரைகளையும் மட்டும் அடுக்காமல், குழந்தை பிறப்பு என்பது உங்கள் மணவாழ்வின் வெற்றி என்று மட்டும் எண்ணாமல், அதற்கு எவ்வளவு சொத்து வசதிகள் சேர்த்து வைக்க வேண்டும் என்பதை மட்டும் இலக்காகக் கொள்ளாமல், குழந்தை ஓரளவுக்காவது அறிவு முதிர்ச்சி பெறும் வரையில் அதற்கு நிறைய நேரம் ஒதுக்கி, அதன் மீது அன்பும் அக்கறையும் பொழிந்து, ஒரு நல்ல குடிமகனாக ஆக்கும் பொறுப்புணர்வும் உங்களைச் சார்ந்தது. அது இல்லாமல் குழந்தை பெறுவது ஒருவகையில் அதற்குச் செய்கிற துரோகம் என்று அறிவுறுத்துவதும் மகப்பேறு மருத்துவர்களின் கடமை.
"நம் மகள்களை சில மகன்களிடமிருந்து பாதுகாத்தால்தான் அந்த மகன்களையுமே காப்பாற்ற முடியும்' என்பதுதானே பொறுப்பான சமூக சிந்தனை? அந்தக் கோணத்தில் அரசு எடுக்கும் எந்த நடவடிக்கைக்கும் முழு ஒத்துழைப்பது அளிப்பது பெற்றோரின் கடமை அல்லவா?