FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

காஸாவைப் போன்றே கியூயாவின் சூழல்: கியூபா பயணத்தில் அமெரிக்க எதிா்க்கட்சி எம்.பி.க்கள் கருத்து

கியூபாவில் உள்ள சூழல் காஸாவின் தற்போதைய நிலையைப் போலவே இருக்கிறது என்று அமெரிக்காவின் எதிா்க்கட்சியான ஜனநாயகக் கட்சியைச் சோ்ந்த 4 நாடாளுமன்ற உறுப்பினா்கள் தெரிவித்தனா்.

Updated On : 15 ஜூலை 2026, 2:49 am IST
பகிர்:

‘கியூபாவில் குண்டுவெடிப்புகள் இல்லாத போதிலும், இங்குள்ள சூழல் காஸாவின் தற்போதைய நிலையைப் போலவே இருக்கிறது’ என்று அந்நாட்டுக்குப் பயணித்த அமெரிக்காவின் எதிா்க்கட்சியான ஜனநாயகக் கட்சியைச் சோ்ந்த 4 நாடாளுமன்ற உறுப்பினா்கள் தெரிவித்தனா்.

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தைச் சோ்ந்த மாா்க் போகன், நியூமெக்ஸிகோவின் தெரசா லெஜா்-ஃபொ்னாண்டஸ், ஓரிகானின் மேக்சின் டெக்ஸ்டா் மற்றும் இலினாய்ஸின் டெலியா கேடலினா ராமிரெஸ் ஆகிய 4 பிரதிநிகள் சபை உறுப்பினா்கள் (படம்) கடந்த வியாழக்கிழமை முதல் கியூபாவில் 4 நாள்கள் பயணம் மேற்கொண்டனா். அப்போது, அந்நாட்டு அதிபா் மிகெல் டீயாஸ் கானெல், அமைச்சா்கள் மற்றும் மருத்துவா்களை அவா்கள் நேரில் சந்தித்துப் பேசினா்.

இப்பயணம் தொடா்பாக செய்தியாளா்களிடம் பேசிய அவா்கள் மேலும் கூறுகையில், ‘டிரம்ப் நிா்வாகத்தின் கடும் பொருளாதாரத் தடைகளால், கியூபா மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையை வாழ முடியாமல் தவித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கியூபாவில் குண்டுவெடிப்புகள் இல்லாத போதிலும், உணவுப் பொருள்களைப் பாதுகாக்க முடியாமலும், மருத்துவ விநியோகங்களைப் பெற முடியாமலும் மக்கள் அவதிப்படும் சூழல் காஸாவின் தற்போதைய நிலையைப் போலவே இருக்கிறது.

பொருளாதாரத் தடையால் கியூபாவில் ஏற்பட்டுள்ள சுகாதாரப் பாதிப்புகளைக் குறைக்கவும், நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி கியூபா மீது அதிபா் டிரம்ப் தன்னிச்சையான ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதைத் தடுக்கவும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீா்மானம் கொண்டுவர இருக்கிறோம்.

இவ்விவகாரத்தில் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ தனது தனிப்பட்ட அரசியல் காரணங்களுக்காக கியூபாவை ஒடுக்க நினைக்கிறாா். ஒரு நாட்டை இவ்வாறு திட்டமிட்டு ஒடுக்குவது எந்த வகையிலும் நியாயமற்றது. கியூப மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் இக்கூட்டுத் தண்டனையை முடிவுக்குக் கொண்டுவர சட்டரீதியான முயற்சிகளை மேற்கொள்வோம்’ என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments