பதவி உயர்வு ஆசை...
பிரபல நிறுவனமான 'லீன் இன் மக்கென்ஸி' நடத்திய புதிய ஆய்வில், பதவி உயர்வு பெற பெண்களுக்கு ஆசை இல்லை என்றும், ஆசை இல்லாதத் தன்மையே அவர்களிடம் இருக்கிறது என்றும் கூறுகிறது.
பிரபல நிறுவனமான 'லீன் இன் மக்கென்ஸி' நடத்திய புதிய ஆய்வில், பதவி உயர்வு பெற பெண்களுக்கு ஆசை இல்லை என்றும், ஆசை இல்லாதத் தன்மையே அவர்களிடம் இருக்கிறது என்றும் கூறுகிறது.
பொதுவாக, 80 சதவீதம் பெண்கள் தங்கள் பதவியில் அடுத்த இடத்துக்கு உயர்வு பெற விரும்புவதாகவும், ஆண்கள் 86 சதவீதம் உயர்வு பெறத் துடிப்பதாகவும் ஆய்வு கூறுகிறது.
இதுவே தலைமைப் பண்பிலோ பெண்களிடத்தில் 69 சதவீதமாகவும், ஆண்களிடத்தில் 80 சதவீதமாகவும் இருக்கிறது. ஆனால் ஆச்சரியப்படும்படி பெண்களிடத்தில்தான் 'பர்ன் அவுட்' எனப்படும் அதிக மன அழுத்தச் சோர்வு, மன உளைச்சல் உள்ளிட்டவை ஆண்களைவிட அதிகமாகக் காணப்படுகிறது.
Advertisement
Advertisement
வட அமெரிக்காவில் யேல் பல்கலைக்கழகம் 30 ஆயிரம் பேரிடம் சில வருடங்களுக்கு முன் ஆய்வு ஒன்று நடத்தியது. அதில், பெண்களே வேலைத்திறனில் அதிக மதிப்பெண்களைப் பெற்றனர். இருந்தாலும், பதவி உயர்வில் பெண்களின் திறமையை அளக்கும் குழுக்கள் எதை வைத்து திறமையை அளக்கின்றனர் என்ற கேள்வி எழுந்துள்ளது. நிர்வாகிகள் தங்கள் கீழ் வேலை பார்க்கும் பெண்களைப் பற்றிய சரியான பின்னூட்டத்தைத் தருகிறார்களா? என்ற கேள்வியை பெண்கள் எழுப்புகின்றனர்.
ஆணா, பெண்ணா என்ற பாலின வேறுபாட்டை மறந்துவிட்டு, திறமை மட்டும் உரிய அளவுகோல்களால் ஆய்வு செய்யப்பட்டால், நிறைய பெண்கள் பதவி உயர்வு பெறுவார்கள் என்று எம்.ஐ. டி. பேராசிரியை டேனியல் லி கூறுகிறார். மேலும், அதிகப் பெண்களை வேலையில் அமர்த்த வேண்டும் என்றும், திறமையை மேஜையில் அநியாயமாகத் தக்க வைத்து விடாதீர்கள் என்றும் அவர் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அறிவுரை கூறுகிறார்.
ஆண் மேலாதிக்க மனப்பான்மையை பன்னாட்டு நிறுவனங்கள் கைவிட வேண்டிய தருணம் வந்து விட்டது. ஒரு பெண் மிகத் திறமையுடன் வேலை செய்து வெற்றி பெற்றால், அதை 'அதிர்ஷ்டம்' என்று பட்டம் சூட்டுவதும், அதுவே ஒரு ஆண் வேலை செய்து வெற்றி பெற்றால், 'அபாரமான கடின உழைப்பு' என்று போற்றிப் பாராட்டுவதும் இன்றைய நிலைமையாக இருக்கிறது.
'பெண்களைக் குறிப்புப் பதிவாளராகச் செயல்பட வைப்பதும், காபி போட்டு அனைவருக்கும் தரச் சொல்வதுமான பழக்கம் நிறுத்தப்பட வேண்டும்' என்று பெண் தலைமை அலுவலர்கள் வற்புறுத்துகின்றனர்.
இந்த நிலைமையில், 'பெண்களுக்கு பதவி உயர்வு பெற ஆசையில்லை என்ற ஆய்வின் முடிவு சரியல்ல' என்று பெண்கள் கொதித்து எழுகின்றனர்.
'எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண் என்று கும்மியடி' என்றும், 'ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்' என்றும் பாடிய மகாகவி பாரதியின் வாக்கு மெய்ப்பிக்கப்பட வேண்டிய நாள் வந்துவிட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.