FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நடுப்பக்கக் கட்டுரைகள்

பெண்ணிற் பெருந்தக்க யாவுள...

வரலாற்றில் மகாராணிகளாகவும் துறவிகளாகவும் தெய்வங்களாகவும் பெண்கள் சிறப்புப் பெற்றுத் திகழ்கின்றனர்.

Updated On : 8 ஆகஸ்ட் 2026, 6:49 am IST
(கோப்புப் படம்) - ens
பகிர்:

உலகில் பாரத தேசத்தின் நம்பிக்கைகளும் கலாசாரமும் தனித்துவம் வாய்ந்தவை. பெண்களைப் பொருத்தவரை உலகம் முழுவதும் அடிமைத்தனம் நிலவிய காலத்தில் நம் தேசத்தில் சுதந்திரம்-கல்வி என சிறந்த நிலையில் இருந்து வந்துள்ளனர் என்று வரலாறு சொல்கிறது. வரலாற்றில் மகாராணிகளாகவும் துறவிகளாகவும் தெய்வங்களாகவும் பெண்கள் சிறப்புப் பெற்றுத் திகழ்கின்றனர்.

சநாதன தர்மம் ஒவ்வொருவருக்கும் தர்மங்களை வகுத்துச் சொல்கிறது. பெண்களுக்கான தர்மங்கள் தொன்றுதொட்டு தொய்வின்றி பின்பற்றப்பட்டு வருவதாலேயே நமது சமூகத்தில் அறம் நிலைத்துள்ளது. பெண்ணை எவரும் அடக்கியாள முடியாது; அவள் தன்னைத்தானே காத்துக்கொள்ளும் வலிமையுடையவள் என்ற நம்பிக்கையில் சமூகம் நிலைபெற்றுள்ளது. அந்த அசைக்க முடியாத உண்மையே ஆணிவேராக குடும்பம் என்னும் அமைப்பை குலைந்துவிடாமல் காத்து வருகிறது.

தெய்வ நம்பிக்கையில் நிலைகொண்டுள்ள பெண், வலிமையும் ஆக்கபூர்வ சிந்தனைகளும் கொண்டவளாக இருக்கிறாள் என்கிறது சநாதன தர்மம். அவளது வலிமை அவளைச் சுற்றியுள்ள சமூகத்துக்கும் வலிமையைத் தருகிறது. அத்தகைய பெண்கள் எத்தகையவர்களாக இருப்பார்கள்?; அவர்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கும்?, சிந்தனை எத்தன்மையுடையதாக இருக்கும்?, அவளின் நோக்கம் யாதாகும்?

Advertisement

Advertisement

பெண் அசாத்திய வலிமை உடையவள், ஆனால், தனது வலிமையை நிரூபிப்பதற்காக எந்நாளும் அவள் தனது மென்மையை இழக்க மாட்டாள். பிறரது பாராட்டுகளுக்காக அவள் தன்னை நல்லவளாகக் காட்டிக் கொள்வதில்லை. பயம், அகந்தை போன்ற எதிர்மறை நிலைகளைத் தாண்டி அவளுடைய மனம் மிக ஆழமாக இருக்கிறது. அவள் அமைதியானவளாக இருக்கிறாள். ஆனால், அவளே இல்லத்தின் அதிகாரியாகவும் இருக்கிறாள். தனது வலிமையை ஓங்கிய குரலில் அவள் வெளிப்படுத்துவதில்லை என்றாலும் எவரும் எளிதில் அவளைக் கடந்துவிட முடியாது.

பெண், பாரதத்தில் தாய் ஸ்தானத்திலேயே எப்போதும் தன்னை வைத்துக் கொள்கிறாள். அவளின் உள்ளார்ந்த நேர்மை மட்டுமே அவளை வழிநடத்துகிறது. அவளது நோக்கம் தன்னலமற்று, காக்கும் கருணையுடன் தெய்விகமானதாகவே இருக்கிறது.

பெண்ணின் இயல்பு எல்லாரையும் மகிழ்ச்சியாக வைத்து கொள்வதும் மற்றவர்களுக்காகத் தன்னைச் சுருக்கிக் கொள்வதும் என்று எண்ணும் வழக்கம் இங்கே இருக்கிறது. இது தவறான புரிதல். உண்மையில் பெண் தனக்கென கடமை இருப்பதாகக் கருதுகிறாள். சுய விருப்பங்களைக் காட்டிலும் தனது கடமையில் எத்தகைய சமரசமும் கூடாது என்ற அவளது சிந்தனை, அவளை அடையாளப்படுத்துகிறது.

அன்பைப் பெறுவதில் விருப்பம் கொண்டவள் என்றாலும், அன்பைத் தருவதில் எதிர்பார்ப்புகள் அற்றவளாக இருக்கிறாள். அதற்காகத் தன்னைத் தாழ்த்திக் கொள்ளவும் அவள் விரும்புவதில்லை. ஆசைகளை நோக்கி சிந்திப்பதைக் காட்டிலும் தனது நேசத்தை அப்பழுக்கற்றதாக வைத்துக் கொள்வதையே பெண் விரும்புகிறாள். தாய்மை தனது அடையாளம் என பாரதப் பெண்ணின் மனம் செல்வதாலேயே அவள் சிறப்புப் பெறுகிறாள்.

நம் நாட்டில் பெண்கள் தன்னை அலங்காரப் பொருளாகவோ போகத்தின் அடையாளமாகவோ உணர்ச்சிகளின் வடிவமாகவோ சித்தரிப்பதை விரும்புவதில்லை. உண்மையில் அதை அவமானம் என்றே ஒவ்வொரு பெண்ணும் கருதுகிறாள். சுயமரியாதை என்ற பண்பை உலகம் கற்றுக்கொண்டதே இந்தியப் பெண்களின் வாழ்வியலில் இருந்து தான்.

தர்மத்தின் பாதையிலிருந்து விலகும் எந்தச் செயலையும் பெண்கள் பாவம் என்று கருதுவதால் மட்டுமே குடும்ப அமைப்பும் அதன் மூலம் அமைதியான சமூகமும் மகிழ்ச்சியான வாழ்வும் சாத்தியமாயிருக்கிறது. குடும்பங்களின் வளர்ச்சி தேசத்தின் வளர்ச்சியாக விரிகிறது. பெண் தனக்குத் தானே வகுத்துக் கொண்டிருக்கும் எல்லைகள் கசப்பானவை அல்ல; அவை, அவள் அறத்துக்கு வழங்கும் மதிப்பாகும்.

ஒரு பெண், தனது வாழ்க்கைத் துணை, குடும்பத்தினர் மீது ஆதிக்கம் செலுத்தி ஆட்சி செய்ய வேண்டிய அவசியம் இருப்பதில்லை. ஆனாலும், அவளது வட்டத்துக்குள் அவர்கள் தாமே கட்டுப்பட்டு நிற்கும் நிலை ஒவ்வொரு இந்தியக் குடும்பத்திலும் கண்கூடு. பெண்ணின் உள்ளுணர்வு அவளை வழிநடத்துகிறது. அவள் எதையும் உணர்ந்து கொள்ளும் திறன் கொண்டவள். எந்த ஒரு தவறையும் வெளிப்படையாகத் தெரிய வருவதற்கு முன்பே ஏதோ தவறு இருக்கிறது என்று உணர்ந்து எச்சரிக்கும் ஆற்றல் உடையவளாக பெண் இருக்கிறாள்.

பாரதப் பெண்களின் சிந்தனை, தீர்மானங்கள், செயல் அனைத்தும் நன்மையை நோக்கிய நேர்மறையானதாக இருப்பதால், அவர்களின் ஆற்றல் அளப்பரியதாக இருக்கிறது. அவர்கள் பாராட்டுகளுக்காகவும் அங்கீகாரத்துக்காகவும் எதையும் செய்வதில்லை. மனச்சான்றின் மீது மட்டுமே நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்.

அதனால்தான் தமிழோ, வடமொழியோ அல்லது இந்திய மொழிகளில் எந்த மொழியாயினும் பெண்ணை, தாயை உயர்வாகவே பேசுகிறது. தமிழில் பெண்ணின் பெருமையைக் குறள் தெளிவாக விளக்குகிறது. 'பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பெனும் திண்மை உண்டாகப் பெறின்'-இங்கே கற்பு என்பதைப் புரிந்து கொள்வதில் திரிபு வாதங்கள் மேற்கத்திய சிந்தனையின் தாக்கத்தால் முன்வைக்கப்படுகின்றன.

கற்பு என்பதன் பொருளை ஒளவை எளிதாகவும் ஆழமாகவும் விளக்குகிறார்:- "கற்பெனப்படுவது சொல்திறம்பாமை'- அதாவது நேர்மை. நேர்மையாக இருப்பதே கற்பு. இப்போது திருக்குறளைப் புரிந்துகொள்வது சுலபமாகும். நேர்மைத் திறம் கொண்ட பெண்ணின் பெருமையைக் காட்டிலும் சிறப்புடையது இந்த உலகில் எதுவும் இல்லை.

மேற்கூறிய அத்தனை இயல்புகளும் கொண்டவராக ஒவ்வொருவருக்கும் உடனே நினைவில் வருவது அவரவர் அன்னைதான். நம் வீட்டில் அம்மா எந்த வேலையைத் தன்னுடைய மகிழ்ச்சிக்காக செய்து கொள்கிறார்? குடும்பத்தின் மகிழ்ச்சி மட்டுமே அவர்களின் குறிக்கோளாக இருக்கிறது என்பதை நாம் அறிவோம். அதிலே மாற்றுக்கருத்து எவருக்கும் இருக்க முடியாது.

சகோதரி, மகள் என மற்ற உறவுகளையும்கூட அன்புடையவர்கள் என்று சொல்வதற்கு, அம்மாபோல என்றோ இரண்டாவது தாய் என்றோதான் குறிப்பிடுகிறோம். கணவர்கள் கூட அன்பான மனைவி அமைந்தால் மற்றுமொரு தாய் என்று சொல்கிறார்கள். ஆக, நம் சமூகத்தில் அனைவருக்கும் தன்னலமற்ற அன்பை, அறத்தின் நேர்மையை அடையாளம் காணத் தெரிந்தே இருக்கிறது.

இப்போது, தொடர்ந்து பேசுபொருளாக இருக்கும் மேலை சித்தாந்தங்களை, பெண்ணுரிமை கருத்துகளை சிந்தித்தால் அவை நமது கலாசாரத்துடன் வாழ்வியல் முறையுடன் பொருந்தாமல் நிற்பதைப் புரிந்து கொள்ளலாம். இந்தப் பெண்ணுரிமைக் கருத்துகள் பெண்களுக்கு அவர்களின் விருப்பங்கள் மறுக்கப்படுவதாக வாதாடுகின்றன. குடும்பம், குழந்தைகள், பெண்களின் விருப்பங்களுக்கும், சுதந்திரத்துக்கும் எதிரானவையாக இருக்கின்றன என்றும், குடும்ப அமைப்பு என்னும் பிடியில் பெண்கள் சிக்கித் தவிப்பதாகவும் பேசுகின்றன.

பெண்ணிய சிந்தனையை ஆதரிக்கும் பெண்கள் ஒன்றைத் தெளிவுபடுத்த வேண்டும். இந்தப் பெண்ணிய சிந்தனைகள் அவர்களின் அன்னையருக்கும் பொருத்தமானவையா? நமது தாய், குடும்பம் என்ற அமைப்பைத் தனக்கு சுமை என்று கருதியிருந்தால் நாம் வாழ்வில் நல்ல நிலையை அடைந்திருப்போமா?, இன்றைக்கும் நமது தேவைகளுக்காகத் தியாகம் செய்ய நமது அன்னையை நாம் கேட்பதில்லையா?, வேலைக்குச் செல்லும் பெண்கள் தங்கள் தாயிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள்?, வேலைப்பளுவை பகிர்ந்து கொள்ளக் கேட்கிறோமே?.

அம்மா, தியாகம் செய்கிறார் என்று நாம் நினைக்கிறோம். ஆனால், அம்மா இதைத் தியாகம் என்று என்றைக்கும் நினைப்பதில்லை. தனது பிள்ளைகளின் பளு குறைந்ததால் ஆசுவாசம் அடைகிறார். அம்மா சிறப்பானவள் என்று சிந்தித்தால் அடுத்த தலைமுறையில் நாம் ஏன் அம்மாவின் பாதையை விட்டு விலக வேண்டும்?

அம்மா பயணிக்கும் பாதை தவறானது, அவள் சுயநலம் அற்றவளாக இருப்பது அவளது தோல்வி என்று யாரோ நமக்குச் சொல்ல நாம் அதை நம்புவது எத்தகைய முட்டாள்தனம்? எதனால் இந்தக் கருத்து நம்மிடம் தொடர்ந்து திணிக்கப்படுகிறது? ஒருவேளை நாம் நமது அன்னையைப் போல இல்லாமல் குடும்பம் என்ற அமைப்பை உடைத்துவிட்டால் நமது பாதுகாப்பு, கண்ணியம், உணர்வுபூர்வ அன்பு- இவற்றையெல்லாம் எது உறுதி செய்யும்?

பாரத தேசத்தின் பெண்களின் அக்கறைதான் குடும்பம், சமூகம், தேசம் அனைத்துக்கும் ஆதாரமாக இருக்கிறது. அதுவே அனைவருக்குமான பாதுகாப்பு அரணாகவும் விளங்குகிறது. பெண்களின் மனநிலையில்- நம்பிக்கையில் மாற்றத்தைக் கொண்டு வந்துவிட்டால் தொன்றுதொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வரும் அறம் சார்ந்த வாழ்வியல் முறையை சிதைத்துவிட்டால் குடும்பம், அதன் அடிப்படையிலான சமூகம், சமூகத்தின் பங்களிப்பால் தேசம் முன்னேற்றம் காண்பது பாதிப்படையும். இதுவே அயலாரின் தேவையாக இருக்கலாம். அதற்கு இடம் கொடுத்துவிடாமல் இருப்பது நமது கடமை.

எனில், நாம் செய்ய வேண்டியது யாது? அன்னையின் அன்பை, அறத்தை அடையாளம் காணத் தெரிந்த நாம், அதை இன்னும் ஆராதிக்கப் பழக வேண்டும். பெண்களின் வலிமையை, அறத்தை, நேர்மையை தியாகத்தைக் கொண்டாடும் சமூகம் மேலும் வலிமையும் உயர்வும் அடையும். பெண்கள் அன்னையின் தவ வாழ்க்கை அவளது வெற்றி மட்டுமல்ல, அடுத்த தலைமுறைக்குமான வெற்றி என்பதை உணர வேண்டும்.

கட்டுரையாளர்:

ஊடகவியலாளர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments