முகப்பு
சென்னை

பச்சையப்பன் அறக்கட்டளை விவகாரம்: நிர்வாகக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

பச்சையப்பன் அறக்கட்டளையை நிர்வகிக்க நிபுணர் குழுவை அமைக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு அறக்கட்டளையின் நிர்வாகக்குழு இரண்டு வார

Updated On : 26 டிசம்பர் 2018, 4:11 am IST
பகிர்:


பச்சையப்பன் அறக்கட்டளையை நிர்வகிக்க நிபுணர் குழுவை அமைக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு அறக்கட்டளையின் நிர்வாகக்குழு இரண்டு வார காலத்துக்குள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
சென்னை உயர்நீதிமன்றத்தில், ஓய்வுபெற்ற நீதிபதி கே.பி.சிவசுப்பிரமணியன், வழக்குரைஞர் எஸ்.துரைசாமி ஆகியோர் தாக்கல் செய்த மனு:
நாங்கள் பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள். இந்தக் கல்லூரி தேர்ந்தெடுக்கப்பட்ட அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, ஓய்வுபெற்ற நீதிபதி பி.சண்முகம் இடைக்கால நிர்வாகியாக நியமிக்கப்பட்டு அவரது கண்காணிப்பில் அறக்கட்டளை நிர்வாகம் இயங்கி வருகிறது. தர்ம காரியங்கள் மற்றும் கல்வி மேம்பாட்டுக்காக நிறுவப்பட்ட பச்சையப்பன் அறக்கட்டளை தற்போது முற்றிலும் வணிகரீதியாக மாறியுள்ளது. அறக்கட்டளையின் கீழ் செயல்படும் பச்சையப்பன் மற்றும் கந்தசாமி நாயுடு கல்லூரிகளில் உள்ள விளையாட்டு மைதானங்களில் திருமண மண்டபங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதற்கு அறக்கட்டளை நிர்வாகமும் அனுமதியளித்துள்ளது.
இதற்காக உயர்நீதிமன்றத்திடம் இருந்து எந்தவிதமான முன்அனுமதியும் பெறவில்லை. அதே போல காலியிடங்கள் கடைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. திருமண மண்டபங்கள், கடைகள் கட்டுவதில் பல்வேறு நிதி முறைகேடுகள் நடந்துள்ளன. இடைக்கால நிர்வாகியும், தணிக்கை அதிகாரிகளும் அறக்கட்டளை நிதிநிலை மோசமாக இருப்பதாக அறிக்கை அளித்துள்ளனர். எனவே இந்த அறக்கட்டளையை நிர்வகிக்க மூன்று பேர் அடங்கிய நிபுணர் குழுவை அமைத்து உத்தரவிட வேண்டும். மேலும் அறக்கட்டளை நிர்வாகம் தொடர்பான விதிமுறைகளிலும் தகுந்த சட்டத் திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும் என கோரியிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.கல்யாணசுந்தரம், இந்த மனு தொடர்பாக பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகக்குழு இரண்டு வார காலத்துக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments