முகப்பு
சென்னை

என்னைச் செதுக்கிய புத்தகங்கள்: கு.ஞானசம்பந்தன்

சிறு வயதிலிருந்தே பயண இலக்கியங்கள், வாழ்க்கை வரலாறு படிப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம். அதுவே தற்போது எனக்கு வாழ்க்கையாகிவிட்டது

Updated On : 18 ஜனவரி 2018, 2:49 am IST
பகிர்:

சிறு வயதிலிருந்தே பயண இலக்கியங்கள், வாழ்க்கை வரலாறு படிப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம். அதுவே தற்போது எனக்கு வாழ்க்கையாகிவிட்டது. சிறுவயதில் என் தந்தையே எனக்கு பள்ளி ஆசிரியராகவும் இருந்தார். அதனால் 'நாலடியார்' , 'திருக்குறள்' போன்ற புத்தகங்களை சிறுவயது முதலே வாசிக்க அவர் கற்றுக் கொடுத்தார். நாலாடியாரும், திருக்குறளும் எனக்கு சிறகுகள் மாதிரி அல்லது துடுப்புகள் மாதிரி என்று சொல்லலாம்.
சங்க இலக்கியங்களில் என்னை மிகவும் ஈர்த்த நூல் பத்துப்பாட்டில் வரும் 'நெடுநல்வாடை' . அதுபோன்று உலக மொழிபெயர்ப்பு நூல்களும் என்னை கவர்ந்தவை. அந்த வகையில் ராகுலின் 'வால்காவிலிருந்து கங்கை வரை' என்னை மிகவும் கவர்ந்த நூல். என்னை பண்படுத்திய நூல் உ.வே.சா. வின் 'என் சரித்திரம்'. இன்றும் அதை படித்துக்கொண்டுதான் இருக்கிறேன். அதுபோன்று கல்கியின் 'பொன்னியின் செல்வன்' படித்துவிட்டு என்னை வந்தியதேவனாகவே கற்பனை செய்து கொண்டதும் உண்டு.
சுஜாதாவின் எழுத்து நடையில் வரும் வேகம் என்னை கவர்ந்தவை. 'ராமாநுஜர்' நான் எப்போதும் வாசிக்கக் கூடிய புத்தகத்தில் ஒன்று. அதுபோன்று என்னை மிகவும் பாதித்த நாவல்கள் மூன்று. நான் மேடை ஏறினாலும் விடாமல் அந்த நாவல்களைப் பற்றி பேசிக்கொண்டே இருப்பேன். அவை, வேதநாயகம் பிள்ளை எழுதிய 'பிரதாப முதலியார் சரித்திரம்', வத்தலகுண்டு ராஜநம்பியார் எழுதிய 'கமலாம்பாள் சரித்திரம்', ஆ.மாதவ ஐயர் எழுதிய 'பத்மாவதி சரித்திரம்'. பாரதியின் 'பாஞ்சாலி சபதம்' . அது குறும்படமாக்கப்பட வேண்டும் என்பது என் ஆசை.
அடுத்து நகைச்சுவை எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். எனக்குள் இருக்கும் நகைச்சுவைக்கு அடித்தளம் அமைத்தவர்கள் கல்கி, புதுமைபித்தன், சுஜாதா, பாக்கியம் ராமசாமி ஆகியோர்தான். 
வீரமாமுனிவர் எழுதிய 'பரமார்த்த குரு' கதை இதுவும் நகைச்சுவையில்தான் ஆரம்பமாகும். இதுதான் தமிழில் வந்த முதல் உரைநடை , அதுவரை எல்லாமே செய்யுளாகத்தான் வந்துள்ளது. 
டால்ஸ்டாய் போன்ற ரஷிய எழுத்தாளர்களின் எழுத்துகள் மிகவும் பிடிக்கும். சமீபத்தில் ரஷியாவுக்கு சென்றிருந்தேன். அங்கே அந்த வீதிகள் எல்லாம் பழக்கப்பட்டவையாகவே தோன்றியது. அந்தளவுக்கு ரஷிய எழுத்துகள் என்னைப் பாதித்திருந்தன. 
பத்து வயதிலிருந்து புத்தகங்கள் படித்து வருகிறேன். தற்போது நான் கண்ணாடி அணிந்து படிக்கிறேன். ஆனால் அந்த கதைகளும், கதாபாத்திரங்களும் இன்னும் இளமையாகவே இருக்கின்றன. இதுதான் எழுத்துகளுக்கான வலிமை. 
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் 'என் கதை', டி.கே. சண்முகம் எழுதிய 'எனது நாடக வாழ்க்கை', சகஸரநாமம் எழுதிய 'திரும்பி பார்க்கிறேன்' இவையெல்லாம் என்னை செதுக்கிய நூல்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments