முகப்பு
சிறப்புக் கட்டுரைகள்

விதவைகள் நாள்: துணை இழந்தவர்களுக்கு தோள் கொடுத்த லூம்பா!

விதவைகள் நாள் உருவாகக் காரணமாக இருந்த ராஜ் லூம்பா பற்றியும் இன்றைக்கு விதவையரின் நிலை குறித்தும்...

Updated On : 23 ஜூன் 2026, 8:00 am IST
ராஜ் லூம்பா - TNIE
பகிர்:

ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 23 ஆம் தேதி சர்வதேச விதவைகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. 2010 ஆம் ஆண்டு முதல் விதவையர் நாளை ஐக்கிய நாடுகள் அவை அங்கீகரித்திருந்தாலும், இதற்கு முழுமுதற் காரணமாக இருந்தவர் பஞ்சாபைச் சேர்ந்தவரும் பிரிட்டனில் வாழ்பவருமான தொழில்முனைவோர் ராஜ் லூம்பாதான். 5 தலைமுறைகளாக லண்டனில் வசித்துவரும் இவர், லண்டன் மேலவையின் உறுப்பினராகவும் உள்ளார்.

தற்போது 83 வயதாகும் இவர், விதவைகள் மற்றும் அவர்கள் குழந்தைகளின் மறுவாழ்வுக்காகவும் உரிமைகளுக்காகவும் அயராது பாடுபட்டு வருவதால் விதவைகளுக்கான போராளி என அழைக்கப்படுகிறார்.

விதவைகளுக்காக அரும்பாடுபடும் இவரின் குணத்திற்கு அடித்தளமாக அமைந்தது சோகம் படிந்த இவரின் இளமைக்கால நாள்கள்தான். 1954 ஆம் ஆண்டு ராஜ் லூம்பாவுக்கு 10 வயது இருக்கும்போது இவரின் தந்தை ஜாகிரி லால் லூம்பா காசநோயால் அவதிப்பட்டு ஜூன் 23 ஆம் தேதி காலமானார்.

Advertisement

Advertisement

அன்று தெரியாது இவரின் மறைவு நாள்தான் சர்வதேச விதவைகள் நாளாக பிற்காலத்தில் உருவாகப் போகிறதென்று. தந்தையின் மறைவின்போது இவரின் தாய் புஷ்பவதிக்கு 37 வயது. ராஜ் லூம்பாவோடு சேர்த்து 7 பிள்ளைகள்.

தந்தை இறந்துவிட்டதால் வளையல், நகைகள், பொட்டு என எதுவும் அணிய அவரின் தாயாரை சமுதாயம் அனுமதிக்கவில்லை. வகை வகையாய் புடவைகள் இருந்தும் வெறும் வெள்ளைப் புடவை அணிய மட்டுமே இவரின் தாய் அனுமதிக்கப்பட்டார். தந்தை இறந்த சோகத்தைவிடவும், தாயாரைத் தன்னுடைய பாட்டி நடத்தும் விதம் ராஜ் லூம்பாவின் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது.

இந்த பாதிப்பின் தாக்கம் மேலும் பெரிதானது லூம்பாவின் திருமணத்தில்தான். லூதியாணாவைச் சேர்ந்த வீணா செளத்ரி என்பவரை ராஜ் லூம்பா திருமணம் செய்துகொண்டார். இவரின் திருமணத்தின்போது, மணமேடையில் இருந்த தாயாரை கீழே இறங்குமாறு புரோகிதர் வற்புறுத்தியுள்ளார். விதவைகள் மணமேடையில் இருப்பது துரதிருஷ்டத்தைக் கொடுக்கும் என்பதால் விதவைத் தாயை கீழே இறங்குமாறு கூறியுள்ளனர்.

வலி பொறுத்துக்கொண்டு பிறப்பு கொடுத்து, நன்முறையில் வளர்த்து, கல்வி கொடுத்து சான்றோனாக்கி, மகனின் வளர்ச்சியை மட்டுமே விரும்பும் தாய் எப்படி மகனின் திருமண மேடையில் இருப்பது துரதிருஷ்டமாகும்? என்ற கேள்வி இவருக்குள் எழுந்தது.

அந்தக் கேள்விக்கான பதிலாக, விதவைகள் மற்றும் அவர்கள் குழந்தைகளுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக குரல் எழுப்புவதன் மூலம் கண்டடைந்தார்.

இதனால், தாயாரின் மறைவுக்குப் பிறகு 1997 ஆம் ஆண்டு மனைவியுடன் சேர்ந்து ஸ்ரீமதி புஷ்பவதி லூம்பா அறக்கட்டளையைத் தொடங்கினார். இதுவே தற்போது லூம்பா அறக்கட்டளையாக நன்கு அறியப்படுகிறது. விதவைகள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கான உரிமைகள், கல்வி, மேம்பாடு, சட்ட உதவி போன்றவற்றை இந்த அறைக்கட்டளை வழங்கி வருகிறது.

இந்தியாவில் ஒரு விதவைத் தாயின் மகனால் தொடங்கப்பட்ட இந்த அறைக்கட்டளை, ஸ்காட்லாந்து, அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, கென்யா, ருவாண்டா, கனடா ஆகிய நாடுகளில் செயல்பட்டு வருகிறது. விதவைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக அரசுடன் நேரடியாகத் தொடர்புகொள்வது, வேலை வாய்ப்புகளை உருவாக்குவது, அவர்கள் குழந்தைகள் கல்வி பெற உதவுவது போன்ற பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த அறக்கட்டளையின் தரவுகளின்படி, நாடு முழுவதும் 25,333 விதவைப் பெண்கள் மற்றும் அவர்களின் 16 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு உதவிக்கரம் நீட்டப்பட்டுள்ளது. 10,000க்கும் அதிகமான விதவைக் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் 11,630 விதவைப் பெண்களுக்கு தையல் இயந்திரம் கொடுக்கப்பட்டு அவர்கள் சொந்தக்காலில் முன்னேற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

2005 ஜூன் 23 ஆம் தேதி விதவைகளுக்காக மற்றொரு முன்னெடுப்பை மேற்கொண்டார் ராஜ் லூம்பா. அதுதான் சர்வதேச விதவைகள் நாள் என்ற அறிவிப்பு. விதவைகள் நாளின் மூலம் விதவைகள் மற்றும் அவர்களின் குழந்தைகள் சந்திக்கும் இன்னல்கள் குறித்து சர்வதேச கவனத்தை ஈர்க்க முடியும் என நினைத்தார். இதற்காக அவர் மேற்கொண்ட தொடர் முயற்சிகள் பலன் அளித்தன.

5 ஆண்டுகள் கழித்து 2010 டிசம்பர் 21 ஆம் தேதி, 65 வது பொதுப்பேரவைக் கூடுதலின்போது ஜூன் 23 ஆம் தேதியை சர்வதேச விதவைகள் நாளாக அனுசரித்தது ஐக்கிய நாடுகள் அவை.

இதன் பிறகு சர்வதேச விதவைகள் நாளைக் குறிக்கும் முதல் மாநாடு 2011 ஜூன் 23 ஆம் தேதி லூம்பா அறக்கட்டளையின் தலைமையிடமான நியூயார்க் நகர கட்டடத்தில் நடைபெற்றது. ஐக்கிய நாடுகள் அவையின் அப்போதைய பொதுச்செயலாளர் பான் கி மூன் இதற்குத் தலைமை வகித்தார். அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் விதவைகள் மற்றும் அவர்கள் குழந்தைகளின் நலனுக்காக ஜூன் 23 ஆம் தேதி, சர்வதேச விதவைகள் நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்திய விதவைப் பெண்களின் நிலை?

2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 4.3 கோடி பெண்கள் கணவரை இழந்து விதவைகளாக உள்ளனர். நாட்டில் உள்ள மொத்த பெண்களின் எண்ணிக்கையில் இது 7.3%. தமிழகத்தில் மட்டும் 38.56 லட்சம் பெண்கள் விதவைகளாக உள்ளதாக 2011 புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இந்த எண்ணிக்கை தேசிய அளவிலும் தமிழ்நாட்டிலும் அதிகரித்திருக்கும் எனக் கருதப்படுகிறது. கரோனாவுக்குப் பிறகு சர்வதேச அளவில் விதவைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அவை குறிப்பிடுகிறது.

இந்தியாவில் விதவைப் பெண்களின் நிலை குறித்த ராஜ் லூம்பாவின் பார்வை மிகவும் தீர்க்கமாக இருந்தது. இந்தியாவில் லட்சக்கணக்கான விதவைகள் வறுமை, பாகுபாடு, பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாவதாக லூம்பா கூறுகிறார்.

’’ஒரு பெண் தனது கணவரை இழந்துவிட்டால், தனது சுயமரியாதையையும், செல்வங்களையும் இழந்தவளாகிவிடுகிறாள். வாரிசுரிமை கூட கிடைப்பதில்லை. இந்தியாவில் 4.6 கோடி விதவைகள் உள்ளனர். இவர்களில் 70 சதவிகிதம் பேர் கிராமப்புறங்களில் வசிக்கின்றனர். பலர் வறுமையில் இருப்பவர்கள். கல்வியறிவு இல்லாதவர்கள். உறவினர்களால் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் சுரண்டப்படுகிறார்கள்’’ எனக் குறிப்பிட்டார்.

’’கல்வியும், திறன் மேம்பாடும் மட்டுமே விதவைப் பெண்களின் வாழ்க்கையை மாற்றும் திறவுகோல். கிராமப்புற விதவைகள் சமூகத்தின் அங்கமாக மாறுவதற்கு கல்வி அல்லது சுயமான ஒரு தொழில் அவசியம்’’ என்பதை என்றுமே நம்பினார் லூம்பா.

ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்துகளிலும் விதவைகளுக்கான உதவி மையங்களைத் திறக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார். ’’தன் கணவரை விட அதிக காலம் வாழ்வதற்காக ஒரு பெண் தண்டிக்கப்படக் கூடாது’’ என்பதைத்தான் என்றுமே வலியுறுத்துகிறார்.

ஆண்டுகள் செல்லச்செல்ல லூம்பா அறக்கட்டளையானது இந்தியா முழுவதும் தங்கள் திட்டங்களை விரிவுபடுத்தியது. கடந்த ஆண்டுகூட, உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்திற்குட்பட்ட பிருந்தாவனம் பகுதியில் 1,000 விதவைகளுக்காக பொது சுகாதாரத் துறையில் உதவியாளர் பணிக்கான திறன் மேம்பாட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது.

இந்த அறக்கட்டளை மூலம், வாரணாசியில் 5,000 விதவைகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் திறன் மேம்பாட்டுத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்துள்ளார். நாடு முழுவதுமுள்ள 30 மாநிலங்களில் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த விதவைகளின் 10,000 குழந்தைகளுக்கு இந்த அறக்கட்டளை கல்வி அளித்து வருகிறது.

லூம்பா அறக்கட்டளையுடன் பல தொண்டு நிறுவனங்களும் விதவைகளின் மறுவாழ்வுக்காக கைகோர்த்துள்ளன. லயன்ஸ் கிளப் இன்டர்நேஷனல் ஃபவுன்டேஷனின் உதவியுடன் உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் 3,000-க்கும் மேற்பட்ட விதவைப் பெண்களுக்கு ஆதரவு அளிக்கப்பட்டுள்ளது.

ரோட்டரி இந்தியா லிட்டரசி மிஷன் உடன் சேர்ந்து தில்லி, மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், பிகார், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் மேலும் 4,000 விதவைப் பெண்கள் மேம்படுத்தப்பட்டுள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள நலிவடைந்த குடும்பத்தைச் சேர்ந்த 5,000 விதவையருக்காக திறன் வளர் பயிற்ச்சிக்காக அமெரிக்காவுடனும் ஒப்பந்தம் செய்துள்ளது.

பிகாரில் 2,000 விதவைப் பெண்களுக்கு தையல், கணினி சேவை, கைவினைப் பொருள் தயாரித்தல், உணவு பதப்படுத்துதல் போன்றவற்றில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

சுலப் இன்டர்நேஷனல் என்ற மற்றொரு அமைப்பின் உதவியுடன் பஞ்சாபில் 2,000 விதவைகளுக்கு உதவிக்கரம் நீட்டப்பட்டுள்ளது.

பஞ்சாபின் குருதாஸ்பூர், பதான்கோட், ஜலந்தர், கபுர்தலா ஆகிய மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான இளம் விதவைகளுக்கு தொழிற்பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் விதவைகளின் மறுவாழ்வுக்காக தனது வாழ்நாளையே அர்ப்பணித்துள்ளார் ராஜ் லூம்பா.

யார் இந்த ராஜ் லூம்பா?

பஞ்சாபின் கபூர்தலா மாவட்டத்தில் உள்ள தைல்வான் கிராமத்தில் 1943 நவம்பர் 13 ஆம் தேதி பிறந்தவர் ராஜ் லூம்பா. ஜலந்தரில் உள்ள டி.ஏ.வி கல்லூரியிலும், பின்னர் அமெரிக்காவில் உள்ள அயோவா மாநிலப் பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்றார்.

தொழில்முனைவோராக மாற வேண்டும் என்ற வேட்கையுடன் இருந்த லூம்பா, 1960களில் இங்கிலாந்துக்குக் குடிபெயர்ந்தார். 1964 ஆம் ஆண்டில், விட்னஸ் நகரின் சந்தையில் இருந்த கடையிலிருந்து ஆடை வணிகத்தைத் தொடங்கினார். இவ்வாறு லூம்பா குழுமத்தை உருவாக்கினார். இக்குழுமம் சார்பில் ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் சில்லறை விற்பனை நிலையங்களை உருவாக்கியுள்ளார்.

ராஜ் லூம்பாவின் பங்களிப்பு சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. லண்டனில் இவரின் பொதுச்சேவைக்காக 2008 ஆம் ஆண்டில், இரண்டாம் எலிசபெத் மகாராணியிடமிருந்து உயரிய அங்கீகாரமான கமாண்டர் விருதைப் பெற்றார்.

2013 ஆம் ஆண்டில், ஐ.நா. பெண்கள் அமைப்பு அவரை விதவைகளின் போராளி என அழைத்தது. 2014 ஆம் ஆண்டில், நியூயார்க்கில் மனிதாபிமான வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றார்.

இவரின் சமூக சேவை மற்றும் கொடைத்தன்மைக்காக வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக வழங்கப்படும் மத்திய அரசின் மிக உயரிய விருதான பிரவாசி பாரதிய சாமான் விருது வழங்கி 2015ஆம் ஆண்டு கெளரவிக்கப்பட்டார்.

விதவைகளின் உரிமைக்குரல்

தற்போது இந்தியாவில் விதவைகளின் உரிமைகளுக்காக தனிச்சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. இந்து வாரிசு உரிமைச் சட்டத்தின்படி மகன், மகள்களுக்கு சொத்தில் பங்கு இருப்பதைப்போலவே, விதவைப் பெண்களுக்கும் உரிமை உண்டு.

இந்து விதவைகள் மறுமணம் செய்துகொள்ளும் வகையில் இந்து விதவைகள் மறுமணச் சட்டம் சாத்தியப்படுத்தப்பட்டுள்ளது. திருமணமான பெண்களை பாதுகாப்பதற்காக குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் உள்ளது.

இப்படி பெண்களுக்காகவும் கணவரை இழந்து நிர்கதியாக நிற்கும்போது, அவர்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தருவதற்காகவும் சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தாலும், அவை எளிமையாக அணுகக்கூடிய வகையில் இருக்கின்றனவா? என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

கணவரை இழந்த பெண், வெள்ளைப் புடவை மட்டும்தான் உடுத்த வேண்டும் என்பது போன்ற பழமைவாதம் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறது. மறுமணங்கள் அதிகரித்து வருகின்றன. வெள்ளை ஆடை வண்ணங்களாக மாறுவதுடன், விதவைகளைச் சமுதாயம் பார்க்கும் பார்வை மேலும் மாற வேண்டும்.

விதவைகளுக்கு எதிரான நடைமுறைகள், சிந்தனைகள் ஒவ்வொன்றாக மாற வேண்டும். இந்த மாற்றம் இன்னும் விரைவாக ஏற்பட வேண்டும் என்பதுதான் நாகரிக சமுதாயத்தின் எதிர்பார்ப்பாக இருக்க முடியும்.

ஜூன் 23, இன்று - சர்வதேச விதவைகள் தினம்

summary

Widows' Day special article Lord Raj Loomba extended a helping hand to widow womens

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments