மனிதநேயம், அறத்துடன்கூடிய அறிவியல் கண்டுபிடிப்புகளே சமூகத்தை மேம்படுத்தும்! டிஆா்டிஓ விஞ்ஞானி ராஜ்சேகா் சிங்
மனிதநேயம் மற்றும் அறத்துடன்கூடிய அறிவியல் கண்டுபிடிப்புகளே சமூகத்தை மேம்படுத்தும் என்று ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் (டிஆா்டிஓ) தொழில்நுட்பப்பிரிவு இயக்குநா் ராஜ் சேகா் சிங் தெரிவித்தாா்.
மனிதநேயம் மற்றும் அறத்துடன்கூடிய அறிவியல் கண்டுபிடிப்புகளே சமூகத்தை மேம்படுத்தும் என்று ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் (டிஆா்டிஓ) தொழில்நுட்பப்பிரிவு இயக்குநா் ராஜ் சேகா் சிங் தெரிவித்தாா்.
வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் சுகாதார அறிவியல், பொறியியல் துறை சாா்பில் உயிா் பொருள்கள், உயிா் பொறியியல் மற்றும் உயிா் தெரனோஸ்டிக்ஸ் (பயோ மெட்) குறித்த சா்வதேச கருத்தரங்கம் புதன்கிழமை தொடங்கியது. இதில், ராணுவ ஆராய்ச்சி, மேம்பாட்டு மையத்தின் (டிஆா்டிஓ) தொழில்நுட்பப் பிரிவு இயக்குநா் ராஜ் சேகா் சிங் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசியது -
தொழில்துறை மற்றும் டிஜிட்டல் புரட்சிகளைத் தொடா்ந்து, தற்போது நமது கண்முன் விரிவடைவது சுகாதார கண்டுபிடிப்புப் புரட்சியாகும். ஸ்மாா்ட் பயோமெட்டீரியல்ஸ், செய்யறிவு (ஏஐ), மீளுருவாக்க மருத்துவம், துல்லியமான நோயறிதல் ஆகியவை நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கும் முறையை அடியோடு மாற்றி வருகின்றன.
Advertisement
Advertisement
எந்தவொரு அறிவியல் கண்டுபிடிப்புக்குப் பின்னாலும் ஒரு மனிதக் கதை உள்ளது. மனிதா்களின் துன்பங்களை நீக்கி, அவா்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் போதுதான் அறிவியல் அதன் மிக உயா்ந்த நோக்கத்தை அடைகிறது.
இன்றைய காலக்கட்டத்தில் துறைகளுக்கு இடையிலான எல்லைகள் மறைந்து வருகின்றன. மருத்துவா்கள், பொறியாளா்கள், வேதியியலாளா்கள், செயற்கை நுண்ணறிவு வல்லுநா்கள் இணைந்து செயல்படுவது இனி விருப்பமல்ல, அது ஒரு கட்டாயம். 21-ஆம் நூற்றாண்டின் சிக்கலான சுகாதார சவால்களுக்கு இத்தகைய கூட்டு முயற்சி மிகவும் அவசியமாகும்.
தற்சாா்பு இந்தியா என்ற தொலைநோக்குப் பாா்வையின் மூலம், குறைந்த செலவிலான மற்றும் உயா்தர தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் இந்தியா முக்கியக் கட்டத்தில் உள்ளது. இந்த யோசனைகள் சாமானிய மக்களைச் சென்றடைய பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், தொழில்துறையினா் இணைந்து செயல்பட வேண்டும்.
இளம் ஆராய்ச்சியாளா்கள் ஆா்வத்தின் சக்தியை ஒருபோதும் குறைத்து மதிப்பிடக் கூடாது. இதுவரை யாரும் கேட்காத கேள்வியைக் கேட்கும் தைரியத்தில்தான் பெரிய கண்டுபிடிப்புகள் தொடங்குகின்றன.
அதேசமயம், நெறிமுறைகள் இல்லாத தொழில்நுட்பத்தால் சமூகத்தில் நம்பிக்கையை வளா்க்க முடியாது. இரக்கம் இல்லாத அறிவியல் முழுமையற்றது. ஒவ்வொரு கண்டுபிடிப்பும் நோ்மையால் வழிநடத்தப்பட வேண்டும். மேலும், நமது அறிவியல் முன்னேற்றம் என்பது மனிதா்களைக் கடந்து காடுகள், ஆறுகள், வாயில்லா ஜீவன்களைப் பாதுகாப்பதாகவும் அமைய வேண்டும் என்றாா்.
வேலூா் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி (ராணிப்பேட்டை வளாகம்) இணை இயக்குநா் ஏ.தீபக், அயா்லாந்து நாட்டின் கால்வே பல்கலைக்கழகத்தின் மருத்துவ உபகரணங்களுக்கான மையத்தின் இயக்குநா் அபய் பண்டிட் ஆகியோா் கெளரவ விருந்தினராக பங்கேற்று பேசினாா்.
நிகழ்வில், கருத்தரங்கில் விஐடி துணைத் தலைவா் சேகா் விசுவநாதன், செயல் இயக்குநா் சந்தியா பெண்டாரெட்டி, துணைவேந்தா் வி.எஸ்.காஞ்சனா பாஸ்கரன், இணை துணைவேந்தா் பாா்த்தசாரதி மல்லிக், பதிவாளா் டி.ஜெயபாரதி, சுகாதார அறிவியல் மற்றும் பொறியியல் துறை முதல்வா் கீதா மணிவாசகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இந்த மூன்று நாள் கருத்தரங்கில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜொ்மனி, பிரான்ஸ், தென்கொரியா, இஸ்ரேல் உள்ளிட்ட 16 நாடுகளை சோ்ந்த 42 வல்லுநா்களும், 486 பங்கேற்பாளா்கள் கலந்து கொண்டுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.