பள்ளிக்கரணையில் அடிப்படை வசதிகள் கோரி ஆர்ப்பாட்டம்
பெருநகர சென்னை மாநகராட்சியின் பெருங்குடி மண்டலத்துக்கு உள்பட்ட பள்ளிக்கரணையில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி அப்பகுதி மக்கள்
பெருநகர சென்னை மாநகராட்சியின் பெருங்குடி மண்டலத்துக்கு உள்பட்ட பள்ளிக்கரணையில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெருநகர சென்னை மாநகராட்சியின் பெருங்குடி மண்டலத்துக்கு உள்பட்ட பள்ளிக்கரணை கடந்த 2011-ஆம் ஆண்டு மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. இந்தப் பகுதியில் பாதாளச் சாக்கடை, குடிநீர் இணைப்பு, சாலை வசதி ஆகியவை முறையாகச் செய்யப்படாததைக் கண்டித்து அப்பகுதி மக்கள் சார்பில் மாநகராட்சியின் 189-ஆவது வார்டு அலுவலகத்தின் முன் பள்ளிக்கரணை நலச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதுகுறித்து பள்ளிக்கரணை நலச் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் என்.சுந்தரம் கூறியதாவது: பள்ளிக்கரணை பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக பாதாளச் சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்படாமல் உள்ளது. இதனால், சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளதால் கடும் அவதிக்குள்ளாகி வருகிறோம். இதுவரை பள்ளிக்கரணையில் உள்ள குடியிருப்புகளுக்கு போதிய அளவில் குடிநீர் இணைப்பு கொடுக்கப்படவில்லை. மேடவாக்கம் முதல் பாலாஜி பல் மருத்துவக் கல்லூரி வரையிலான சாலையை அகலப்படுத்தும் பணி நீண்ட நாள்களாக நடைபெற்று வருகிறது.
இதனால், அச்சாலையைப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. பள்ளிக்கரணை பகுதியில் மழை நீர் வடிகால் விரைவில் அமைப்பதுடன், இப்பகுதியில் சுற்றித்திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்த மாநகராட்சி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக பள்ளிக்கரணை மாநகராட்சி வார்டு அலுவலகம் முன்பு போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.