முகப்பு
தமிழ்நாடு

வள்ளுவரைக் களங்கப்படுத்தாதீர்! - அமைச்சர் அருண்ராஜ்

திருவள்ளுவர் குறித்து அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தது குறித்து...

திருவள்ளுவர் படம், அமைச்சர் அருண்ராஜ் - கோப்பிலிருந்து...
பகிர்:

திருவள்ளுவரைக் களங்கப்படுத்த வேண்டாம் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் பங்கேற்ற விழா மேடையில் வைக்கப்பட்டு இருந்த பதாகையில், திருவள்ளுவர் காவி உடை அணிந்து, நெற்றியில் திருநீறு பூசி கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்திருப்பது போன்ற புகைப்படம் இடம்பெற்றிருந்தது.

முந்தைய ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்ற அரசு நிகழ்வுகளில் இதுபோன்ற புகைப்படங்கள் இடம்பெற்று சர்ச்சை எழுந்த நிலையில், ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் பங்கேற்ற அரசு விழாவில் திருவள்ளுவரின் காவி உடை தொடர்பான சர்ச்சை மீண்டும் எழுந்துள்ளது

Advertisement

Advertisement

இதற்கு, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக அமைச்சர் அருண்ராஜ் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”திருவள்ளுவர் உலகப் பொதுமறை தந்தவர். அவரை ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளோ அல்லது குறிப்பிட்ட அடையாளத்திற்குள்ளோ சுருக்குவது என்பது உலகளாவிய அவரது சிந்தனைகளை சிறுமைப்படுத்துவதற்குச் சமம்.

லோக்பவனில் (அல்லது எந்தவொரு அரசு/பொது இடங்களிலும்) திருவள்ளுவருக்குக் காவி உடை அணிவிப்பது தவறு!

திருவள்ளுவர் எந்தவொரு மதத்திற்கும், சாதிக்கும், இனத்திற்கும், நாட்டிற்கும் தன்னைச் சுருக்கிக் கொள்ளவில்லை. அவரது ‘திருக்குறள்’ மனித குலம் முழுமைக்கும் பொதுவான வாழ்வியல் நெறிகளைப் பேசுகிறது.

கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் கூட அவர் ‘ஆதி பகவன்’, ‘மலர்மிசை ஏகினான்’, ‘அறவாழி அந்தணன்’ என்று பொதுவான சொற்களையே பயன்படுத்தினாரே தவிர, எந்தவொரு குறிப்பிட்ட மதக் கடவுளின் பெயரையும் அவர் குறிப்பிடவில்லை.

அவரே தன்னை ஒரு பொதுவானவராக நிலைநிறுத்தும்போது, அவருக்கு ஒரு குறிப்பிட்ட மதத்தின் அடையாளமாகப் பார்க்கப்படும் வண்ணத்தைப் பூசுவது அவரது உலகளாவிய தத்துவத்திற்கு முரணானது.

வள்ளுவர் நமக்குக் கற்றுக்கொடுத்தது "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற சமத்துவத்தை தான். வள்ளுவரை ஒரு குறிப்பிட்ட வண்ணத்திற்குள் அடைக்க நினைப்பது கடலை ஒரு குடத்திற்குள் அடைக்க நினைப்பதற்குச் சமம். அவர் உலக மக்கள் அனைவருக்கும் வழிகாட்டும் ஒரு பேரொளி. அவருக்குக் காவி பூசுவதும், அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட முயல்வதும் எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல.

அவரது உடைகளின் நிறத்தை மாற்றுவதை விடுத்து, அவரது குறள் காட்டும் நல்வழியில் நடக்க முயல்வதே அவருக்கு நாம் செய்யும் உண்மையான மரியாதை. வள்ளுவரை களங்கப்படுத்தாதீர்கள்!

summary

Minister for Health and Family Welfare K.G. Arunraj has stated that Thiruvalluvar should not be politicized.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.