மருத்துவமனைகளை ஆய்வு செய்யும் நடவடிக்கைகளில் தனியார் ஆதிக்கம்
மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளை ஆய்வுக்குள்படுத்தி உரிமம் வழங்கும் நடவடிக்கைகளில் இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) ஆதிக்கம் செலுத்தி வருவதாக சுகாதார ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளை ஆய்வுக்குள்படுத்தி உரிமம் வழங்கும் நடவடிக்கைகளில் இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) ஆதிக்கம் செலுத்தி வருவதாக சுகாதார ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
தனியார் மருத்துவனைகளின் பிரதிநிதித்துவ அமைப்பாகச் செயல்படும் ஐஎம்ஏ-வில் அங்கம் வகிக்கும் நபர்கள் மருத்துவமனைகளுக்கு உரிமம் வழங்கும் குழுவில் இடம்பெற்றிருப்பது ஏற்புடையதல்ல என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
பொதுவாக மருத்துவமனைகள், கிளினிக்குகள் ஆகியவற்றுக்கு பதிவு உரிமம் பெறுவது அவசியம். அவ்வாறு உரிமம் பெற்றாலும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதனைப் புதுப்பிக்க வேண்டும். அதற்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் கடந்த மார்ச் 31-ஆம் தேதி வரை வழங்கப்பட்டது. ஆனால், 80 சதவீத மருத்துவமனைகளும், கிளினிக்குகளும் அந்த காலக்கெடுவுக்குள் உரிமம் கோரி விண்ணப்பிக்காததால் மே 31 வரை அந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
தமிழகத்தில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவமனைகளும், கிளினிக்குகளும், சிறிய அளவிலான மருத்துவ மையங்களும் செயல்பட்டு வருகின்றன. அவற்றில், இதுவரை 18 ஆயிரம் மருத்துவமனைகள், கிளினிக்குகள் மட்டுமே பதிவு உரிமம் கோரி விண்ணப்பித்திருப்பதாகத் தெரிகிறது. இந்நிலையில், உரிமம் கோரி விண்ணப்பித்த மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து மாவட்டந்தோறும் சுகாதார சேவைகள் இணை இயக்குநர் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
அதில் ஐஎம்ஏ-வைச் சேர்ந்த ஒருவர் இடம்பெற வேண்டும் என்பது விதி. அதன்படி மாவட்டக் குழுக்களில் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்களும் இணைந்து மருத்துவமனைகளில் ஆய்வு நடத்தி வந்தனர். இந்த நிலையில், அண்மையில் ஐஎம்ஏ சார்பில் மருத்துவ சேவைகள் இயக்குநருக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. ஆய்வு நடவடிக்கைகள் குறித்து முன்கூட்டியே தங்களுக்கு எந்தத் தகவலையும் அதிகாரிகள் தெரிவிப்பதில்லை என்றும், இந்த நிலை தொடர்ந்தால் வரும் நாள்களில் போதிய ஒத்துழைப்பு அளிக்க மாட்டோம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஐஎம்ஏ-வின் இந்த நடவடிக்கைக்கு சுகாதார ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:
பொதுவாக, மருத்துவமனைகளை ஆய்வு செய்து உரிமம் வழங்குவதில் தனியார் அமைப்புகளின் பங்களிப்பு தேவையில்லை. இருந்தபோதிலும், அரசாணையில் ஐஎம்ஏ-வுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதனை அந்த அமைப்பு தவறாகப் பயன்படுத்துகிறது. உரிமம் வழங்கும் நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு வழங்க மாட்டோம் எனக் கூறி அரசுக்கு அவர்கள் மிரட்டல் விடுப்பதை ஏற்க முடியாது என்று அவர்கள் தெரிவித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.