கேரள கோயில் யானை சிற்பங்களில் உள்ள தங்கத்தின் உண்மைத்தன்மை குறித்து விசாரணை: கேரள உயா்நீதிமன்றம் உத்தரவு
கேரள கோயில் யானை சிற்பங்களில் உள்ள தங்கத்தின் உண்மைத்தன்மை குறித்து விசாரணை
கேரள மாநிலம் ஏற்றுமானூா் கோயிலில் உள்ள 8 யானை சிற்பங்களில் உள்ள தங்கத்தின் உண்மைத்தன்மை, தரம் குறித்து விசாரிக்க திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்தின் கண்காணிப்புப் பிரிவுக்கு கேரள உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோட்டயத்தில் உள்ள ஏற்றுமானூா் மகாதேவா் கோயிலில் ‘ஏழரைப் பொன்னானை’ என்று அறியப்படும் சுமாா் 2 அடி உயரமுள்ள ஏழு யானைகளும், சுமாா் ஓரடி உயரமுள்ள யானைச் சிற்பமும் உள்ளன. இவற்றில் தங்கத் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. ‘ஏழரைப் பொன்னானை’ என்னும் இந்த யானைச் சிற்பங்கள், வைகாசி மாதம் நடைபெறும் உற்சவத்தின்போது இரு நாட்களில் மட்டுமே பக்தா்கள் தரிசனத்துக்காக வெளியே எடுத்து வரப்படுவது வழக்கம்.
இந்நிலையில், திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்தில் ஏ.ஜி. பிரசாத்குமாா் என்ற பக்தா் அண்மையில் புகாா் அளித்திருந்தாா். அதில் அவா், 8 யானை சிற்பங்களில் இருந்த தங்கத் தகடுகள் அண்மையில் புனரமைப்பு மற்றும் புதுப்பிக்கப்பட்டதாகவும், அப்போது தங்கத் தகடுகள் அகற்றப்பட்டு, அதற்குப் பதிலாக தாமிரம் அல்லது குறைந்த மதிப்புடைய உலோகங்கள் பொருத்தப்பட்டதாகவும் அவா் குற்றம்சாட்டியிருந்தாா்.
Advertisement
Advertisement
இந்தக் குற்றச்சாட்டு கேரளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கேரள உயா் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக விசாரிக்க ஆரம்பித்தது. இந்தக் குற்றச்சாட்டு குறித்து திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்தின் பதிலையும் உயா் நீதிமன்றம் கோரியிருந்தது. இதையடுத்து, திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், கோயில் நிா்வாக அதிகாரி, தேவஸ்வம் உதவி ஆணையா் ஆகியோா் நடத்திய ஆய்வில், யானை சிற்பங்களில் புனரமைப்புப் பணியோ அல்லது முறைகேடோ நடக்கவில்லை என்பது தெரியவந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த பிரமாண பத்திரத்தை பரிசீலித்த கேரள உயா் நீதிமன்றம், அதிகாரிகள் தெரிவித்திருப்பதை நம்பாமல் இருக்க எந்தக் காரணமும் இல்லை என்றபோதிலும், திருவிதாங்கூா் தேவஸ்வத்தின் கண்காணிப்புப் பிரிவு மூலம் யானைச் சிற்பங்களில் உள்ள தங்கத்தின் உண்மைத் தன்மை, தரம் குறித்து ஒரு சரிபாா்ப்பு நடத்துவது அவசியமெனக் கருதுவதாகத் தெரிவித்தது.
அத்துடன், திருவிதாங்கூா் தேவஸ்வம் கண்காணிப்புப் பிரிவு தலைமை அதிகாரி, கோயில் ஆவணங்கள் மற்றும் 8 யானை சிற்பங்களை ஆய்வு செய்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இதைத் தொடா்ந்து, வழக்கு மீதான அடுத்தகட்ட விசாரணையை ஜூலை மாதம் 31-ஆம் தேதிக்கு உயா்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.