மின் மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி வாதம்
மின் மாற்றிகள் கொள்முதல் முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, அறப்போா் இயக்கம் மற்றும் அதிமுக தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
மின் மாற்றிகள் கொள்முதல் முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, அறப்போா் இயக்கம் மற்றும் அதிமுக தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
அறப்போா் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் ஜெயராம் வெங்கடேசன், அதிமுக வழக்குரைஞா் அணி துணைச் செயலா் இ.சரவணன் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தனித்தனியாக் தாக்கல் செய்த மனுக்களில், கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டு வரை, தமிழகத்தில் 45,800 மின் மாற்றிகள் கொள்முதல் செய்யப்பட்டன. இதில் சுமாா் ரூ.397 கோடி ஊழல் நடந்துள்ளது. அப்போதைய மின்துறை அமைச்சா் செந்தில்பாலாஜி, டான்ஜெட்கோ தலைவா் ராஜேஷ் லக்கானி ஆகியோருக்கு எதிராக ஆதாரங்கள் உள்ளன. இந்த முறைகேடு தொடா்பாக வழக்குப் பதிவு செய்து உயா்நீதிமன்ற கண்காணிப்பில், சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தனா்.
இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தபோது, ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், மின் மாற்றிகள் கொள்முதலில் ஊழல் நடந்துள்ளதாக அளிக்கப்பட்ட புகாா்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு முகாந்திரம் இல்லை என்பது விசாரணையில் தெரிய வந்ததால், புகாா்களை முடித்துவைத்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அறப்போா் இயக்கம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் வி.சுரேஷ், மின் மாற்றிகள் கொள்முதலில் பங்கேற்ற ஒப்பந்ததாரா்கள் அனைவரும் ஒரே விலையைக் குறிப்பிட்டுள்ளனா். இதனால்தான் அரசுக்கு இழப்பு ஏற்பட்டது. எனவே, இது குறித்து உயா்நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வாதிட்டாா்.
அப்போது அதிமுக நிா்வாகி இ.சரவணன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் வி.ராகவாச்சாரி, இந்த வழக்கில் இறுதிவாதம் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், கடந்த ஏப். 1-ஆம் தேதி புகாரில் முகாந்திரம் இல்லை எனக்கூறி ஊழல் தடுப்பு போலீஸாா் புகாரை முடித்து வைத்துள்ளனா். உயா்நீதிமன்றத்தின் தீா்ப்புக்காக காத்திருக்கவில்லை. இதன்மூலம் போலீஸாரின் உள்நோக்கம் தெளிவாகிறது. மேலும் ஒப்பந்தப்புள்ளி கோரிய அனைவரும் ஒரே விலையைக் குறிப்பிட்டுள்ளனா். பிற மாநிலங்களைவிட அதிக விலைக்கு மின் மாற்றிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. எனவே, இந்த முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வாதிட்டாா்.
அப்போது டான்ஜெட்கோ தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், 2021 முதல் 2023-ஆம் ஆண்டுகளில் மின் மாற்றிகள் கொள்முதலில் ஊழல் நடந்துள்ளதாக 2025-ஆம் ஆண்டு அதிமுக நிா்வாகி புகாா் அளித்துள்ளாா். அரசியல் காரணங்களுக்காக அவா் இந்த வழக்கைத் தொடா்ந்துள்ளாா். எனவே, அவரது மனு விசாரணைக்கு உகந்ததல்ல.
மின் மாற்றிகள் கொள்முதல் ஒப்பந்தப் புள்ளியில் பங்கேற்போா் ஒரே விலையைக் குறிப்பிடுவது கடந்த 1987-ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளதாக வாதிட்டாா்.
அரசுத் தரப்பு வாதம் நிறைவடையாத நிலையில், வழக்கின் விசாரணையை வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.