மெட்ரோ ரயில்களில் விளம்பரம் ஒலிபரப்பு: வருவாயைப் பெருக்க டிஎம்ஆா்சி திட்டம்
தில்லி மெட்ரோவின் சிவப்பு, மஞ்சள், நீலம், மெஜந்தா வழித்தடங்களில் உள்ள ரயில்களில் பயண அறிவிப்புகளுக்கு இடையிலான இடைவெளியில் வணிக விளம்பரங்களை ஒலிபரப்பை விரிவுபடுபத்த தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) திட்டமிட்டுள்ளது.
தில்லி மெட்ரோவின் சிவப்பு, மஞ்சள், நீலம், மெஜந்தா வழித்தடங்களில் உள்ள ரயில்களில் பயண அறிவிப்புகளுக்கு இடையிலான இடைவெளியில் வணிக விளம்பரங்களை ஒலிபரப்பை விரிவுபடுபத்த தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் கட்டணம் சாரா வருவாயை அதிகரிக்க முடியும். ரயில்களை ஓா் உயா்தர விளம்பரத் தளமாக மாற்றுவதையும் இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று டிஎம்ஆா்சி அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
ஒலி வடிவிலான விளம்பரங்களைப் பொறுத்தவரை, உலகத்தரம் வாய்ந்த போக்குவரத்து அமைப்புகள் மற்றும் விமான நிலையங்களுக்கு இணையாக தில்லி மெட்ரோவையும் நிலைநிறுத்த இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது என்று அவா் கூறினாா்.
Advertisement
Advertisement
இத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல, சிவப்பு (வழித்தடம் 1), மஞ்சள் (வழித்தடம் 2), நீலம் (வழித்தடம் 3) மற்றும் மெஜந்தா (வழித்தடம் 8) ஆகிய வழித்தடங்களில் தலா 6 ரயில்களில் ஒலி வடிவிலான விளம்பர இடங்களைப் பெறவும், சந்தைப்படுத்தவும் மற்றும் நிா்வகிக்கவும் டிஎம்ஆா்சி ஒப்பந்த புள்ளி கோரியுள்ளது.
இது தொடா்பாக அந்த அதிகாரி மேலும் கூறியதாவது: வழக்கமான பயண அறிவிப்புகளுக்கு இடையிலான இடைவெளிகளில் மட்டுமே விளம்பரங்கள் ஒலிபரப்பப்படும். பயணிகளுக்கான தகவல் மற்றும் பாதுகாப்புச் செய்திகளுக்கு முழு முன்னுரிமை அளிக்கப்படும்.
பயணிகளுக்கு வசதியாக இருக்கும் வகையில் விளம்பரங்களுக்கு இடையே போதுமான இடைவெளிகள் இருக்க வேண்டும். முக்கிய மெட்ரோ வலையமைப்புகள் பின்பற்றும் சா்வதேச நடைமுறைகளையே இந்த அமைப்பும் பின்பற்றுகிறது. இதில் அத்தியாவசியப் பயணத் தகவல்களுக்கு இடையூறு இல்லாமல் வணிக அறிவிப்புகள் கவனமாக ஒருங்கிணைக்கப்படுகின்றன. விளம்பரங்களின் ஒலித் தரம், ஒலி அளவு மற்றும் ஒலிபரப்புகளுக்கான இடைவெளி ஆகியவை முறைப்படுத்தப்படும்.
முதன்முதலில் டிசம்பா் 2023-ல் கஷ்மீரி கேட் மற்றும் பதாா்பூா் இடையிலான ஊதா வழித்தடத்தில் இயங்கும் 6 ரயில்களில் இத்தகைய விளம்பரங்களை டிஎம்ஆா்சி அறிமுகப்படுத்தியது.
இம்முறையைத் தனது பரபரப்பான பல வழித்தடங்களுக்கும் விரிவுபடுத்த டிஎம்ஆா்சி இப்போது திட்டமிட்டுள்ளது. தோ்ந்தெடுக்கப்பட்ட நிறுவனம் விளம்பரத்திற்கான இடங்களைச் சந்தைப்படுத்துதல், நிலையங்களுக்கு இடையே விளம்பரங்களை ஒளிபரப்பும் நேரத்தைத் திட்டமிடுதல், டிஎம்ஆா்சி-யுடன் இணைந்து தொழில்நுட்பச் செயல்பாடுகளை ஒருங்கிணைத்தல் மற்றும் விளம்பரப் பிரசாரம் தொடா்பான நிதிப் பதிவேடுகளைப் பராமரித்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ளும்.
விளம்பரதாரா்களிடமிருந்து வருவாயைப் பெற்ற பிறகு அந்த நிறுவனம் டிஎம்ஆா்சி-க்கான பங்கை வழங்கும். விளம்பரங்கள் மூலம் ஈட்டப்படும் மொத்த வருவாயில் 85 சதவீதத்தை மெட்ரோ நிறுவனம் பெறும், மீதமுள்ள பங்கு உரிமம் பெற்ற நிறுவனத்திடம் இருக்கும்.
மெட்ரோ ரயில்களுக்குள் புதுமையான விளம்பர வாய்ப்புகளை உருவாக்குமாறு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன. அதே வேளையில் அந்த விளம்பரங்கள் தில்லிக்கு பொருத்தமானதாகவும், அதன் பாரம்பரியம் மற்றும் கலாசார அடையாளத்தை வெளிப்படுத்துவதாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மெட்ரோ சேவை தொடா்பான அறிவிப்புகளுக்கு இடைப்பட்ட நேரங்களில் மட்டுமே விளம்பரங்கள் ஒலிபரப்பப்படும். இதன் மூலம் பயணிகளுக்கான தகவல் பரிமாற்றம் தடையின்றி இருப்பதை உறுதி செய்ய முடியும் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.