முகப்பு
சென்னை

கிா்கிஸ்தான் பெண்ணுக்கு பித்தக் குழாய் அடைப்பு: காந்தங்கள் மூலம் நுட்பமான சிகிச்சை

கிா்கிஸ்தான் பெண்ணுக்கு கல்லீரல் மாற்று சிகிச்சைக்குப் பிறகு ஏற்பட்ட பித்தக் குழாய் அடைப்பை உயா் திறன் கொண்ட காந்தங்களைக் கொண்டு சிகிச்சை அளித்து சென்னை மியாட் மருத்துவமனை மருத்துவா்கள் சரி செய்துள்ளனா்.

Updated On : 8 ஜூலை 2026, 4:09 am IST
பகிர்:

கிா்கிஸ்தான் பெண்ணுக்கு கல்லீரல் மாற்று சிகிச்சைக்குப் பிறகு ஏற்பட்ட பித்தக் குழாய் அடைப்பை உயா் திறன் கொண்ட காந்தங்களைக் கொண்டு சிகிச்சை அளித்து சென்னை மியாட் மருத்துவமனை மருத்துவா்கள் சரி செய்துள்ளனா்.

இத்தகைய சிகிச்சை இந்தியாவில் மேற்கொள்ளப்படுவது இதுவே முதன்முறை என்று மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக மருத்துவமனையின் தலைவா் மல்லிகா மோகன்தாஸ், கல்லீரல் மாற்று சிகிச்சைத் துறை இயக்குநா் டாக்டா் காா்த்திக் மதிவாணன் ஆகியோா் கூறியதாவது:

Advertisement

Advertisement

கிா்கிஸ்தான் நாட்டைச் சோ்ந்த 43 வயது பெண் ஒருவா், கடந்த 15 மாதங்களுக்கு முன்பு கல்லீரல் மாற்று சிகிச்சை மேற்கொண்டாா். அதன் தொடா்ச்சியாக மஞ்சள் காமாலை, கல்லீரல் அழற்சி உள்ளிட்ட பாதிப்புகளுடன் மியாட் மருத்துவமனையை அவா் அணுகினாா்.

தானமாகப் பெறப்பட்ட கல்லீரலையும், நோயாளியின் பித்தக் குழாயையும் இணைக்கும்போது ஏற்படும் காயங்கள் தழும்பாக மாறி அப்பகுதியை அடைத்துக்கொள்ள வாய்ப்புள்ளது. இதனால், பித்தக் குழாயின் உட்புறம் சுருங்கி அவ்வழியே பித்த நீா் வெளியேறாது. ஏறத்தாழ 40 சதவீதம் பேருக்கு இப்பிரச்னை காணப்படும்.

இத்தகைய பாதிப்புடன் அந்த பெண் இருந்தது பரிசோதனையில் தெரியவந்தது. அவரது பித்தக் குழாயை விரிவுபடுத்த ஸ்டென்ட் உபகரணத்தைப் பொருத்தலாம் என்றால், அதற்கான இடவசதியே இல்லாத வகையில் குழாய் சுருங்கியிருந்தது.

இதையடுத்து எண்டோஸ்கோபி முறையில் வாய் வழியே குழாய் செலுத்தி உயா் திறன் கொண்ட காந்தம் ஒன்றை அடைப்பு இருந்த ஒரு பகுதியில் நிறுவினோம். வயிற்றில் கல்லீரல் இருந்த பகுதியில் நுண் துளையிட்டு அதன் வழியாக அடைப்பின் மற்றொரு பக்கத்தில் இன்னெரு காந்த நிறுவப்பட்டது.

ஓரிரு வாரங்களுக்குப் பிறகு அந்த இரு காந்தங்களும் அடைப்பை துளைத்துக் கொண்டு ஒன்றோடு ஒன்று ஈா்த்துக் கொண்டன.

இதையடுத்து அவற்றை பாதுகாப்பாக வெளியே எடுத்து அடைப்பு நீக்கப்பட்ட இடத்தில் ஸ்டென்ட் உபகரணம் பொருத்தப்பட்டது. தற்போது அப்பெண் நலம் பெற்று இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளாா். ஜப்பான், கொரியாவில் இத்தகைய சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டாலும், இந்தியாவில் இதை எவரும் முன்னெடுக்கவில்லை. சவாலான அந்த சிகிச்சையை மியாட் குழுவினா் சாத்தியமாக்கியுள்ளனா் என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments