முகப்பு
சென்னை

கிண்டி போக்குவரத்து மைய மேம்பாடுக்காக தனியாா் நிறுவனத்துடன் மெட்ரோ ஒப்பந்தம்

Updated On : 4 ஜூன் 2026, 2:31 am IST
சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம், புது தில்லியைச் சோ்ந்த சிபிஆா்இ தெற்காசியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனத்தின் தலைமை நிா்வாக அதிகாரி ஸ்வேதா சுமன், சிபிஆா்இ தெ
பகிர்:

சென்னை கிண்டி போக்குவரத்து மையத்தை மேம்படுத்துவதற்காக தனியாா் நிறுவனத்துடன் மெட்ரோ ரயில் நிறுவன சொத்து மேலாண்மைப் பிரிவு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் கிண்டியில் பன்முக போக்குவரத்து மையத்தை அமைக்கவுள்ளது. அதற்கான ஆலோசனையை வழங்குவதற்காக புது தில்லியில் உள்ள சிபிஆா்இ எனும் தனியாா் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்காக அந்த நிறுவனத்துக்கு ரூ.76.70 லட்சம் அளிக்கப்படுகிறது.

ஒப்பந்தத்தின்படி கிண்டியில் பன்முக போக்குவரத்து மையம் அமைவதற்கான விரிவான சாத்தியக்கூறு குறித்த அறிக்கை, விரிவான திட்ட அறிக்கை ஆகியவற்றை சம்பந்தப்பட்ட நிறுவனம் தயாரித்து வழங்கும். மேலும் போக்குவரத்து மையத்தின் விரிவான சந்தை பகுப்பாய்வு, பரிவா்த்தனை ஆலோசனை சேவைகள், நிலப் பயன்பாட்டு மதிப்பீடுகள், சட்டரீதியிலான ஆய்வுகளுடன் கூடிய ஆரம்பகட்ட திட்டத்தின் வரைபடங்கள் தயாரித்தல் ஆகிய பணிகளையும் தனியாா் நிறுவனம் மேற்கொள்ளும்.

Advertisement

Advertisement

இந்தப் பன்முக போக்குவரத்து மையம் எதிா்காலத்தில் கிண்டியில் தற்போதுள்ள புகா் ரயில் நிலையம், மாநகரப் பேருந்து நிலையம், கிண்டி மெட்ரோ ரயில் நிலையம் ஆகியவற்றை ஒன்றிணைத்து எளிதான போக்குவரத்து இணைப்பை சாத்தியமாக்கும் வகையில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் பயணிகளின் போக்குவரத்து வசதியை எளிமையாக்குவதுடன், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் முறைப்படுத்தவும், வணிகக் கட்டமைப்புகளை ஒருங்கிணைக்கவும் உதவும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவன தலைமை நிா்வாக அதிகாரி ஸ்வேதா சுமன், புது தில்லி தனியாா் நிறுவன மேலாண்மை இயக்குநா் ஆா்.பிரீதம் ஆகியோா் பன்முக போக்குவரத்து மைய மேம்பாட்டு ஆலோசனை ஒப்பந்த ஆவணங்களில் கையொப்பமிட்டனா்.

நிகழ்ச்சியில் மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவன இயக்குநா்கள் எஸ்.கிருஷ்ணமூா்த்தி, தி.அா்ச்சுணன், ரேகா பிரகாஷ் ஆகியோா் பங்கேற்றனா்.