மக்கள் பொதுப் போக்குவரத்துக்கு மாறுவதை ஊக்குவிக்க கூடுதல் ரயில் சேவைகள்: டிஎம்ஆா்சி அறிவிப்பு
தில்லி-என்சிஆா் பகுதி மக்கள் தனிப்பட்ட வாகனங்களிலிருந்து பொதுப் போக்குவரத்திற்கு மாறுவதை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு திங்கள்கிழமையும் 24 கூடுதல் ரயில் சேவைகளை இயக்குதல் உள்பட பல நடவடிக்கைகளை தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) அறிவித்துள்ளது.
தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம், மே 18 முதல் ஒவ்வொரு திங்கள்கிழமையும் ஆறு கூடுதல் ரயில்களைப் பயன்படுத்தி 24 கூடுதல் சேவைகளை அறிமுகப்படுத்தவுள்ளது.
பயணிகளின் தேவைக்கேற்ப இதர நாள்களிலும் இதேபோன்ற ஏற்பாடுகள் செய்யப்படலாம். இது தொடா்பாக டிஎம்ஆா்சி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருப்பதாவது:
Advertisement
ஆற்றல் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் பெட்ரோலியம் சாா்ந்த போக்குவரத்தின் மீதான சாா்பைக் குறைத்தல் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அதிகரித்து வரும் நிலையில், வெகுஜனப் போக்குவரத்து அமைப்புகளை வலுப்படுத்தவும் நகா்ப்புறப் போக்குவரத்தை மேம்படுத்தவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.
பயணிகளின் வருகையில் ஏற்படக்கூடிய சாத்தியமான அதிகரிப்பைக் கையாள்வதையும், அதிகப்படியான பயண நெரிசல் மிகுந்த பயண நேரங்களில் சீரான மற்றும் தடையற்ற சேவைகளை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டே இந்த கூடுதல் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
பயணிகளின் தேவை உன்னிப்பாகக் கண்காணிக்கப்படும். தேவைப்படும்போது கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையைக் கையாளும் வகையில், கூடுதல் பாதுகாப்புப் பணியாளா்களை நியமிக்கவும், கூடுதல் டிக்கெட் கவுன்ட்டா்களைத் திறக்கவும், கையிருப்பில் உள்ள கதவு வடிவ உலோக உணா்கருவிகள் மற்றும் உடைமைகளைச் சோதிக்கும் கருவிகளைச் செயல்பாட்டிற்குக் கொண்டுவரவும், சோதனைச் சாவடிகளில் காத்திருக்கும் நேரத்தைக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
பல மெட்ரோ நிலையங்கள் ரயில் நிலையங்கள், மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து நிலையங்கள், விமான நிலைய முனையங்கள், நமோ பாரத் பிராந்திய விரைவுப் போக்குவரத்து அமைப்பு (ஆா்ஆா்டிஎஸ்), நொய்டா மெட்ரோ மற்றும் ராபிட் மெட்ரோ குருகிராம் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த இணைப்பு வலையமைப்பு, பயணிகள் பல்வேறு போக்குவரத்து அமைப்புகளுக்கு இடையே வசதியாகப் பயணிக்க உதவுகிறது. மேலும், தனிப்பட்ட வாகனங்களைச் சாா்ந்திருப்பதையும் குறைக்கிறது.
தில்லி-என்சிஆா் முழுவதும் உள்ள முக்கிய வணிக மையங்கள், அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், பெருநிறுவனங்களின் மையங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு மெட்ரோ ரயில் வலையமைப்பு எளிதான அணுகலை வழங்குகிறது.
கன்னாட் பிளேஸ், சாந்தினி சௌக், சைபா் சிட்டி, ஹோஸ்காஸ், நேரு பிளேஸ் மற்றும் முக்கியப் பல்கலைக்கழக வளாகங்கள்
போன்ற பகுதிகள் மெட்ரோ ரயில் வலையமைப்புடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளன. இது அலுவலகம் செல்வோா், மாணவா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் அன்றாடப் பயணத்தை மிகவும் எளிதாக்குகிறது.
கடைசி மைல் இணைப்புச் சேவைகளைப் பொறுத்தவரை, 160 மெட்ரோ நிலையங்களில் தினமும் சுமாா் 1 லட்சம் பயணிகள் மின்-ஆட்டோக்கள், மின்-ரிக்ஷாக்கள், பைக் டாக்ஸிகள், வாடகைக் காா் சேவை நிறுவனங்கள் மற்றும் மிதிவண்டி வாடகைச் சேவைகள் போன்றவற்றைப் பயன்படுத்தி வருகின்றனா்.
டிஎம்ஆா்சியின் ‘சாா்த்தி செயலி’, பயணத் திட்டமிடலுக்கான ஒருங்கிணைந்த வசதியை வழங்குகிறது. இதன் மூலம் பயணிகள் மெட்ரோ டிக்கெட்டுகளையும், கடைசி மைல் போக்குவரத்துச் சேவைகளையும் ஒரே தளத்தின் வாயிலாகவே முன்பதிவு செய்துகொள்ள முடியும்.
மெட்ரோ நிலையங்களுக்கும் அரசு அலுவலகங்களுக்கும் இடையிலான கடைசி மைல் இணைப்பை மேம்படுத்துவதற்காக, இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் நிறுவனத்தின் ( ஐஓசிஎல்) ஆதரவுடன் சென்ட்ரல் விஸ்டா பகுதியில் சமீபத்தில் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் பேருந்து சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
கூடுதலாக, தில்லி போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படும் சுமாா் 1,500 தேவி பேருந்துகள் தற்போது 52 மெட்ரோ நிலையங்களில் இணைப்புச் சேவைகளை வழங்கி வருகின்றன. மேலும், படிப்படியாக கூடுதல் பேருந்துகள் சோ்க்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
பயணிகளைத் தனிப்பட்ட மற்றும் பொதுப் போக்குவரத்தை இணைத்துப் பயன்படுத்த ஊக்குவிக்கும் வகையில், அதன் ‘பாா்க் அண்ட் ரைடு’ திட்டத்தின் கீழ் தில்லி-என்சிஆா் முழுவதும் உள்ள 126 மெட்ரோ நிலையங்களில் வாகன நிறுத்துமிட வசதிகள்
உள்ளன.
மேலும், க்யூஆா் குறியீடு அடிப்படையிலான டிக்கெட்டுகள், தேசிய பொது நடமாடும் அட்டைகள் (என்சிஎம்சி), வாட்ஸ்அப் டிக்கெட்டிங் மற்றும் பேடிஎம், ஃபோன்பே, அமேசான் மற்றும் ஐஆா்சிடிசி போன்ற தளங்களுடனான ஒருங்கிணைப்பு உள்ளிட்ட டிஜிட்டல் டிக்கெட் முறைகளையும் மெட்ரோ நெட்வொா்க் விரிவுபடுத்தியுள்ளது.
தேசிய தலைநகா் பிராந்தியத்தில் நிலையான மற்றும் சுற்றுச்சூழலுக்குப் பொறுப்பான நகா்ப்புற போக்குவரத்து தீா்வுகளை ஊக்குவிப்பதற்கான எங்களது பரந்த அா்ப்பணிப்பின்
ஒரு பகுதியாக இந்த நடவடிக்கைகள் உள்ளன என்று டிஎம்ஆா்சி தெரிவித்துள்ளது.