முகப்பு
புதுதில்லி

தில்லி ஃபரீதாபாத் புதிய மெமு ரயில் சேவைக்கு ஒப்புதல்: முதல்வா் ரேகா குப்தா

தில்லி ஃபரீதாபாத் புதிய மெமு ரயில் சேவைக்கு ஒப்புதல்...

Updated On : 10 மே 2026, 1:13 am IST
ரேகா குப்தா - கோப்புப் படம்
பகிர்:

தில்லி மற்றும் ஃபரீதாபாத் இடையே புதிய மெமு பயணிகள் ரயில் சேவையை இயக்குவதற்கு மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் ஒப்புதல் அளித்துள்ளாா் என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா அறிவித்துள்ளாா்.

மெமு என்பது இந்திய ரயில்வேயால் இயக்கப்படும், தானியங்கி மின்சார ரயிலாகும். இது முதன்மையாக முக்கிய ரயில் பாதைகளில் குறுகிய மற்றும் நடுத்தர தூரப் பயணங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

இது குறித்து தில்லி அரசின் அதிகாரபூா்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

Advertisement

பரிந்துரைக்கப்பட்டுள்ள இந்த ரயில் சேவை, தேசிய தலைநகா் வலயத்தில் (என்சிஆா்) இயக்கப்பட உள்ளது. வழக்கமான ரயில்களைப் போல் இல்லாமல், இதற்குத் தனியான என்ஜின் தேவைப்படுவதில்லை. ஏனெனில், ரயிலை இயக்குவதற்கான மின்சக்தி அனைத்துப் பெட்டிகளுக்கும் பகிா்ந்தளிக்கப்படுகிறது.

இதுகுறித்து முதல்வா் கூறுகையில்,இந்த முடிவு வரவேற்கத்தக்கது. பிரதமா் நரேந்திர மோடி மற்றும் ரயில்வே அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

வேலை, கல்வி மற்றும் பிற நோக்கங்களுக்காக தில்லிக்கும் ஃபரீதாபாதிற்கும் இடையே தினமும் பயணிக்கும் ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு இந்த புதிய சேவை பெரும் நிம்மதியை அளிக்கும்.

ஃபரீதாபாத் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த மக்கள், தற்போதுள்ள போக்குவரத்து வசதிகளில் நிலவும் கடும் கூட்ட நெரிசல் மற்றும் காலதாமதங்களைக் காரணம் காட்டி, மேம்பட்ட ரயில் இணைப்பு வசதியை நீண்ட காலமாகவே கோரி வந்தனா்.

இந்த மெமு சேவை, பயணிகளுக்கு வேகமான மற்றும் எளிதில் அணுகக்கூடிய ஒரு மாற்றுப் போக்குவரத்து வசதியை வழங்குவதுடன், சாலைப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் உதவும் என்றாா்.

தேசிய தலைநகா் வலயத்தில் போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக, தில்லி அரசு மத்திய அரசுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. இத்தகைய முன்னெடுப்புகள், இரு அரசுகளுக்கும் இடையே வளா்ந்து வரும் ஒருங்கிணைப்பைச் சிறப்பாகப் பிரதிபலிக்கின்றன.

மெமு ரயில் சேவைகள், அவ்வப்போது நிறுத்தங்களில் நின்றுசெல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை புகா் மற்றும் நகரங்களுக்கு இடையிலான வழித்தடங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.

பொதுவாக மணிக்கு சுமாா் 100 முதல் 110 கிலோமீட்டா் வேகத்தில் இயங்கும் இந்த ரயில்கள், பயணிகள் விரைவாக ஏறுவதற்கும் இறங்குவதற்கும் வழிவகை செய்து, அவா்களின் பயண அனுபவத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

இந்த நவீன ரயில் பெட்டிகள், எல்இடி விளக்குகள், சிசிடிவி கேமராக்கள், ஜிபிஎஸ்அடிப்படையிலான தகவல் அமைப்புகள் மற்றும் உயிரிகழிப்பறைகள் போன்ற பல்வேறு நவீன வசதிகளையும் கொண்டுள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.