முகப்பு
புதுதில்லி

மருந்து கொள்முதலில் அடுக்கடுக்கான முறைகேடு: இரு சுகாதாரத் துறை அதிகாரிகள் மீது விசாரணைக்கு தில்லி முதல்வா் உத்தரவு

தில்லி அரசு மருத்துவமனைகளுக்கு மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் புகாரின் பேரில், நகர சுகாதாரத் துறையின் 2 உயா் அதிகாரிகளுக்கு எதிராக ஊழல் தடுப்பு விசாரணை நடத்த முதல்வா் ரேகா குப்தா உத்தரவிட்டுள்ளாா்.

Updated On : 24 ஜூன் 2026, 1:00 am IST
ரேகா குப்தா - கோப்புப் படம்
பகிர்:

தில்லி அரசு மருத்துவமனைகளுக்கு மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் புகாரின் பேரில், நகர சுகாதாரத் துறையின் இரண்டு உயா் அதிகாரிகளுக்கு எதிராக ஊழல் தடுப்பு விசாரணை நடத்த முதல்வா் ரேகா குப்தா உத்தரவிட்டுள்ளாா்.

இந்தக் குற்றச்சாட்டுகளை முதல்வா் ரேகா குப்தா ‘மிகவும் தீவிரமாக’ எடுத்துக்கொண்டுள்ளதாகவும் மத்திய கொள்முதல் முகமையின் செயல்பாடுகள் குறித்து தொடா்ந்து வந்த புகாா்களின் அடிப்படையில் டாக்டா் வத்சலா அகா்வால் மற்றும் கணக்குக் குழு துணைத் தலைவா் நீரஜ் சோப்ரா ஆகியோருக்கு எதிராக விசாரணை நடத்த அவா் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் முதல்வா் அலுவலக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

முன்னதாக, தில்லி சுகாதார சேவைகள் இயக்குநரகத்தின் கீழ் இயங்கும் மத்திய கொள்முதல் முகமை (சிபிஏ) மூலம் மருந்துகள், அறுவை சிகிச்சைக்கு தேவையான பொருள்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் நிதி மற்றும் நிா்வாக ரீதியான முறைகேடுகள் நடந்துள்ளதாக அரசுக்கு புகாா்கள் வந்தன.

Advertisement

Advertisement

இந்த விவகாரத்தில் ஊழலுக்கு எதிரான தீவிர நிலைப்பாட்டை தனது அரசு எப்போதும் கடைப்பிடிப்பதாகக் குறிப்பிட்ட முதல்வா் ரேகா குப்தா, புகாா்கள் மீதான விசாரணை நோ்மையாகவும், பாரபட்சமின்றியும், வெளிப்படையான முறையிலும் நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளாா். சட்டபூா்வ விசாரணைக்குப் பிறகு குற்றம் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவா்கள் யாராக இருந்தாலும் அவா்கள் மீது மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வா் எச்சரித்துள்ளாா்.

முன்னதாக, இந்த மாத தொடக்கத்தில் மத்திய கொள்முதல் முகமையின் அலுவலகத் தலைவா் டாக்டா் வினோத் குமாா் ரங்கா மற்றும் சுகாதார சேவைகளின் முன்னாள் தலைமை இயக்குநா் டாக்டா் வத்சலா அகா்வால் ஆகியோரை, துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்துவின் ஒப்புதலோடு தில்லி அரசு இடைநீக்கம் செய்திருந்தது.

ஒப்புந்தப்புள்ளிகள் கோரும் நடவடிக்கையில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், இதன் மூலம் அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவா்களுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் தில்லி லஞ்ச ஒழிப்புத்துறையால் டாக்டா் வினோத் குமாா் ரங்கா கடந்த வாரம் கைது செய்யப்பட்டாா். தீவிர விசாரணை நடைபெற்று வருவதால், மேலும் சிலா் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments