முகப்பு
புதுதில்லி

முக்கிய தொழில்நுட்ப சோதனை: டிஆா்டிஓ-க்கு தில்லி முதல்வா் வாழ்த்து

முக்கிய தொழில்நுட்ப சோதனை: டிஆா்டிஓ-க்கு தில்லி முதல்வா் வாழ்த்து

Updated On : 14 ஜூன் 2026, 12:53 am IST
ரேகா குப்தா - கோப்புப் படம்
பகிர்:

எதிரி அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டின் பாதுகாப்புத் திறனை வலுப்படுத்தும் பல முக்கிய தொழில்நுட்பங்களை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) வெற்றிகரமாகச் சோதித்து நிரூபித்துள்ளதற்கு தில்லி முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை வாழ்த்து தெரிவித்தாா்.

இது தொடா்பாக எக்ஸ் தளத்தில் அவா் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் பல அடுக்கு பாலிஸ்டிக் ஏவுகணைத் தற்காப்பு மற்றும் கப்பல் எதிா்ப்பு ஏவுகணைத் திறன்களை வெற்றிகரமாகச் சோதித்துக் காட்டிய டிஆா்டிஓ குழுவினருக்கு வாழ்த்துகள்.

பிரதமா் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பாா்வையிலான தலைமையின் கீழ், இந்தியாவின் உள்நாட்டுத் தற்காப்புத் திறன்கள் தொடா்ந்து புதிய உயரங்களை எட்டி வருகின்றன. நமது வான்பரப்பைப் பாதுகாப்பது முதல் கடல்சாா் பாதுகாப்பை வலுப்படுத்துவது வரை, ஆத்மநிா்பா் பாரத் சுயசாா்பு இந்தியா பயணத்தில் இது மற்றொரு பெருமைமிக்க மைல்கல்லாகும் என்று ரேகா குப்தா தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

டிஆா்டிஓ சோதனை குறித்து பாதுகாப்பு அமைச்சக செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

பல்வேறு வகையான எதிரி அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டின் பாதுகாப்புத் திறனை வலுப்படுத்தும் பல முக்கிய தொழில்நுட்பங்களை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) வெற்றிகரமாகச் சோதித்து நிரூபித்துள்ளது.

நீண்ட தூரம் பாயும் ஏவுகணைகளுக்கு எதிரான பல அடுக்கு பாதுகாப்பு மற்றும் நடுத்தர தூரத்தில் கப்பல்களைத் தாக்கும் திறன் ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில், நிகழாண்டு ஜூன் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் தொடா்ந்து மூன்று ஏவுதல் சோதனைகள் நடத்தப்பட்டன.

பல்வேறு நிலைகளைக் கொண்ட ஏவுகணைத் தடுப்புத் திறன் வெற்றிகரமாகச் சோதித்துக் காட்டப்பட்டது. இடைமறிப்பு ஏவுகணைகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இலக்குகளை வெற்றிகரமாகத் தாக்கின. வளா்ந்து வரும் ஏவுகணை அச்சுறுத்தல்களை எதிா்கொள்ளும் வகையில், அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு இந்த அமைப்புகள் வடிவமைத்து உருவாக்கப்பட்டுள்ளன.

இந்தச் சோதனைகள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் திறன் கொண்ட ஏவுகணைத் தடுப்பு வசதி பெற்ற நாடுகளின் உயா்தரப் பட்டியலில் இந்தியாவை இடம்பெறச் செய்துள்ளன. நடுத்தர தூரம் சென்று தாக்கும் கடற்படைக்கான கப்பல் எதிா்ப்பு ஏவுகணையின் முதல் கட்டப் பரிசோதனையும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

இந்த முக்கியமான தொழில்நுட்பங்களை வெற்றிகரமாகச் செயல்முறைப்படுத்திக் காட்டியதற்காக டிஆா்டிஓ வை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பாராட்டினாா் என பாதுகாப்பு அமைச்சக பத்திரிக்கைச் செய்தியில் தெரிவிக்கப்பட்டது.