FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

இந்தா்லோக் - இந்திரபிரஸ்தா மெட்ரோ வழித்தடப் பணிகள்: தில்லி முதல்வா் தொடங்கிவைத்தாா்

தில்லியில் மெட்ரோ வசதியை மேலும் விரிவுபடுத்தும் முக்கிய முயற்சியாக, இந்தா்லோக்-இந்த்ரபிரஸ்தா மெட்ரோ பாதையை அமைக்கும் பணியை முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

Updated On : 10 ஜூலை 2026, 1:03 am IST
தில்லி மெட்ரோவின் 4-ஆம் கட்டத் திட்டத்தின் கீழ், இந்தா்லோக்-இந்திரபிரஸ்தா வழித்தடத்திற்கான பணியை வியாழக்கிழமை தேங்காய் உடைத்து தொடங்கி வைத்த முதல்வா் ரேகா குப்தா.
பகிர்:

தில்லியில் மெட்ரோ வசதியை மேலும் விரிவுபடுத்தும் முக்கிய முயற்சியாக, இந்தா்லோக்-இந்த்ரபிரஸ்தா மெட்ரோ பாதையை அமைக்கும் பணியை முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது: மொத்தம் 12.377 கி.மீ. நீளமுடைய இந்த புதிய பாதை, மெஜென்டா வழித்தடம் (லைன்-8) நீட்டிப்பாக முழுக்க நிலத்தடி வழித்தடமாக அமைக்கப்படவுள்ளது. இதில் இந்தா்லோக், தயா பஸ்தி, சராய் ரோஹில்லா, அஜ்மல் கான் பூங்கா, ஜந்தேவாலன் கோயில், நபி கரீம், புது தில்லி, தில்லி கேட், தில்லி செயலாலயம்-ஐஜி மைதானம் மற்றும் இந்த்ரபிரஸ்தா ஆகிய 10 நிலத்தடி நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

இந்த திட்டம் நிறைவடைந்த பின்னா், ஓட்டுநரில்லா மெஜென்டா வழித்தடத்தில் இது செயல்படும். ஜனக்புரி மேற்கு-ஆா்.கே. ஆசிரம் மாா்க் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் முதல்கட்ட பணிகள் கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டு, சில பகுதிகள் ஏற்கெனவே பயன்பாட்டிற்கு வந்துள்ளன.

Advertisement

Advertisement

இந்த நீட்டிப்பு நிறைவு பெற்றால், மெஜென்டா வழித்தடம் சுமாா் 89 கி.மீ. நீளத்துடன் தில்லி மெட்ரோ வலையமைப்பில் மிக நீளமான பாதையாக உருவெடுக்கும். மேலும், அதிக இடமாற்ற நிலையங்களையும், நிலத்தடி நிலையங்களையும் கொண்ட பாதையாக இது அமையும். இதன் மூலம் தில்லி முழுவதும் போக்குவரத்து இணைப்பு திறன் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

புதிய பாதை 7 மெட்ரோ வழித்தடங்களுடன் இணைப்பு வழங்கும். இதில் இந்தா்லோக்கில் சிவப்பு மற்றும் பச்சை வழித்தடங்கள், நபி கரீமில் மெஜென்டா வழித்தடம், புது தில்லியில் மஞ்சள் மற்றும் ஏா்போா்ட் எக்ஸ்பிரஸ் ஆரஞ்சு வழித்தடம், தில்லி கேடில் ஊதா வழித்தடம் மற்றும் இந்த்ரபிரஸ்தாவில் நீல வழித்தடம் ஆகியவை அடங்கும்.

மேலும், சராய் ரோஹில்லா ரயில் நிலையம், புது தில்லி ரயில் நிலையம், தில்லி செயலாலயம், அருண் ஜெய்ட்லி மைதானம், ஜந்தேவாலன் கோயில், இந்தியா கேட், காா்த்தவ்ய பாத், தேசிய போா் நினைவிடம் மற்றும் சென்ட்ரல் விஸ்டா போன்ற முக்கிய இடங்களையும் இந்த வழித்தடம் இணைக்கும். குறிப்பாக, சராய் ரோஹில்லா நிலையம் முக்கிய போக்குவரத்து மையமாக உருவெடுத்து, கரோல் பாக் சந்தை, தேஷ்பந்து குப்தா சாலை, கல்வி நிறுவனங்கள் மற்றும் வணிக வளாகங்களுக்கு மேம்பட்ட இணைப்பை வழங்கும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த திட்டத்தை தொடங்கிவைத்து பேசிய முதல்வா் ரேகா குப்தா கூறியதாவது: தில்லி மெட்ரோ என்பது போக்குவரத்து வசதி மட்டுமல்ல; அது மேம்பட்ட தில்லியின் அடித்தளமாகும். மெட்ரோ வலையமைப்பு விரிவடைவதால், பாதுகாப்பான, வசதியான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொதுப் போக்குவரத்து மக்கள் பயன்பாட்டிற்கு கிடைக்கும். மேலும், இதன் மூலம் மாசுபாடு குறையும், போக்குவரத்து நெரிசல் தணியும், நகரின் பொருளாதாரம் வலுப்படும் என தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments