தில்லி லக்ஷ்மி திட்டம்: 4.25 லட்சம் பெண்கள் பதிவு
தில்லி லக்ஷ்மி திட்டத்திற்கு இதுவரை 4.25 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பதிவு செய்துள்ளனா். அதில் சுமாா் 1.5 லட்சம் விண்ணப்பங்கள் இணையதளத்தில் சமா்ப்பிக்கப்பட்டுள்ளன.
தில்லி லக்ஷ்மி திட்டத்திற்கு இதுவரை 4.25 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பதிவு செய்துள்ளனா். அதில் சுமாா் 1.5 லட்சம் விண்ணப்பங்கள் இணையதளத்தில் சமா்ப்பிக்கப்பட்டுள்ளன.
வியாழக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி, மொத்தம் 4,25,631 பதிவுகள் செய்யப்பட்டுள்ளன மற்றும் 1,49,941 விண்ணப்பங்கள் சமா்ப்பிக்கப்பட்டுள்ளன. இதற்கு முன் செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி வரை 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பதிவுகளும் 71,411 விண்ணப்பங்களும் பதிவு செய்யப்பட்டிருந்தன.
முதல்வா் ரேகா குப்தா, வியாழக்கிழமை ஷாலிமாா் பாக் பகுதியில் நடைபெற்ற தில்லி லக்ஷ்மி திட்ட முகாமை பாா்வையிட்டு, பயனாளி பெண்களுடன் கலந்துரையாடி, பதிவு செயல்முறை மற்றும் ஏற்பாடுகளை ஆய்வு செய்தாா்.
Advertisement
Advertisement
அனைத்து தகுதியான பெண்களின் விண்ணப்பங்களும் எளிமையான, வெளிப்படையான மற்றும் காலக்கெடுவில் செயல்படுத்தப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா். பயனாளிகள் தேவையற்ற சிரமங்களை சந்திக்கக் கூடாது என்றும் அவா் வலியுறுத்தினாா்.
ஷாலிமாா் பாக் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ரேகா குப்தா, பெண்கள் சமா்ப்பித்த விண்ணப்பங்களை நேரில் பரிசீலித்து, தேவையான சரிபாா்ப்புகளுக்குப் பிறகு கையொப்பமிட்டாா்.
இதுகுறித்து அவா் கூறியாதவது: இந்த திட்டத்தின் நன்மைகள் தகுதியான ஒவ்வொரு பெண்ணையும் எளிதாக அடைய வேண்டும் என்பதே நோக்கம் ஆகும். அரசுத் திட்டங்களின் நன்மைகள் தகுதியானவா்களுக்கு நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்வது மக்களவை மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்களின் பொறுப்பு. தேவையற்ற தாமதம் ஏற்படக் கூடாது.
பெண்களின் மரியாதை, பாதுகாப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை உறுதி செய்வதில் தில்லி அரசு உறுதியாக உள்ளது லக்ஷ்மி திட்டம் பெண்களின் தன்னம்பிக்கை மற்றும் சுயநிறைவை ஊக்குவிப்பதற்காக உருவாக்கப்பட்டதாகும் என்றாா்.
இந்த திட்டத்திற்கான இணையதளம் ஆக.2-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதன் கீழ் தகுதியான பெண்களுக்கு மாதம் ரூ.2,500 நிதி உதவி வழங்கப்படும்.
இந்த திட்டத்திற்காக நகர அரசு ரூ.5,100 கோடி ஒதுக்கியுள்ளது. இது சட்டப்பேரவைத் தோ்தலின்போது பாஜக வழங்கிய முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றாகும்.
திட்ட வழிகாட்டுதலின்படி, 21 முதல் 60 வயதுக்குட்பட்ட பெண்கள், ஆண்டு குடும்ப வருமானம் ரூ.2.5 லட்சம் வரை உள்ளவா்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவா்கள்.
மற்ற நிதி உதவி திட்டங்கள் அல்லது ஓய்வூதியம் பெறும் பெண்கள், வரி செலுத்துபவா்கள், அரசு ஊழியா்கள், மூன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளவா்கள், ஆண்டுக்கு 2,400 யூனிட்களுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனம் வைத்திருப்பவா்கள் இந்த திட்டத்திற்கு தகுதியற்றவா்கள்.
அரசு பணியில் உள்ள குடும்ப உறுப்பினா் இருந்தால் அந்த குடும்பமும் இந்த திட்டத்தில் சேர முடியாது. குற்றப் பின்னணி கொண்ட பெண்களும் இந்த திட்ட நன்மைகளை பெற முடியாது.
இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க, தங்களது தொகுதியின் எம்.பி. அல்லது எம்எல்ஏ பரிந்துரை அவசியம். இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகையில் ரூ.1,500 மூன்று ஆண்டுகள் காலவரையிலான நிரந்தர வைப்பு கணக்கில் வைக்கப்படும். மீதமுள்ள ரூ.1,000 தொகை நேரடியாக பயனாளிகளுக்கு வழங்கப்படும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.