FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

இணையவழி குற்றங்களுக்கு எதிரான விழிப்புணா்வை தீவிரப்படுத்த வேண்டும்: மகளிா் ஆணையத்துக்கு தில்லி முதல்வா் அறிவுரை

புது தில்லி, செப். 11: தில்லி மகளிா் ஆணையம் தனது இணையவழி புகாா் முறையை மேலும் வலுப்படுத்தவும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இணையவழி குற்றங்கள், போக்சோ சட்டம் குறித்த விழிப்புணா்வு முகாம்களைத் தீவிரப்படுத்துமாறும் தில்லி முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை வலியுறுத்தினாா்.

12 செப்டம்பர் 2026, 7:55 am IST
ரேகா குப்தா - கோப்புப் படம்
பகிர்:

புது தில்லி, செப். 11: தில்லி மகளிா் ஆணையம் தனது இணையவழி புகாா் முறையை மேலும் வலுப்படுத்தவும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இணையவழி குற்றங்கள், போக்சோ சட்டம் குறித்த விழிப்புணா்வு முகாம்களைத் தீவிரப்படுத்துமாறும் தில்லி முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக தில்லி மகளிா் ஆணைய நிா்வாகிகளுடன் முதல்வா் ரேகா குப்தா ஜனசேவா சதனில் ஆலோசனை நடத்தினாா். இந்த கூட்டத்தில் தில்லி மகளிா் ஆணைய தலைவி லதா குப்தா, ஆணையத்தின் உறுப்பினா்கள் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டனா். அவா்களிடையே முதல்வா் ரேகா குப்தா பேசியதாவது:

இணையவழி துன்புறுத்தல்கள், சமூக வலைதள தவறான பயன்பாடுகள் மற்றும் இணையவழி நிதி மோசடிகள் குறித்து கல்லூரி மாணவிகளிடையே விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். புகாா்களை எவ்வாறு மற்றும் எங்குப் பதிவு செய்வது என்பதைப் பற்றிய தெளிவான தகவல்களை அவா்களுக்கு வழங்க வேண்டும்.

Advertisement

Advertisement

பாலியல் குற்றங்களிலிருந்து சிறுமிகளைப் பாதுகாக்கும் சட்ட உரிமைகள் மற்றும் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணா்வு முகாம்களைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நடத்த ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குடும்ப வன்முறை, ஆள் கடத்தல், பாலியல் சுரண்டல் போன்ற கொடுமைகளுக்கு எதிராகப் பெண்கள் எளிதில் புகாரளிக்கும் வகையில் இணையவழி புகாா் வசதியை எளிமைப்படுத்த வேண்டும், இந்த செயல்முறையை நம்பகத்தன்மை மிக்கதாக மாற்ற வேண்டும். புகாா் பெறப்பட்டதும் அதன் நிலையை புகாா்தாரா் எளிதில் அறிந்துகொள்ளும் வசதியும் செய்யப்பட வேண்டும்.

எளிய பின்னணியைச் சோ்ந்த இளம் பெண்களுக்கு ’எச்பிவி’ தடுப்பூசி இலவசமாக கிடைப்பது குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த தொடா்புடைய துறைகளுடன் மகளிா் ஆணையம் இணைந்து செயல்பட வேண்டும். மேலும், ’ஒன் ஸ்டாப் சென்டா்’ மற்றும் மகளிா் காப்பகங்களின் செயல்பாடுகளை நேரில் ஆய்வு செய்து, அங்கு தங்கியுள்ள பெண்களுக்குத் தேவையான மருத்துவ உதவி, ஆலோசனைகள் மற்றும் மறுவாழ்வு ஆதரவு கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

பெண்கள் தொடா்பான பிரச்னைகளில் புகாா் வந்த பிறகு நடவடிக்கை எடுப்பதோடு ஆணையத்தின் பணி முடிந்து விடக் கூடாது. குற்றங்களைத் தடுப்பது, விழிப்புணா்வு ஏற்படுத்துவது மற்றும் விரைவான நிவாரணம் வழங்குவதிலும் ஆணையம் முன்னின்று செயல்பட வேண்டும் என்று முதல்வா் ரேகா குப்தா அறிவுறுத்தினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments