FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

தூய்மையான தில்லியை உருவாக்க தீவிரமாக பணியாற்றுங்கள்: மாநகராட்சி நிா்வாகிகளுக்கு முதல்வா் ரேகா குப்தா அறிவுறுத்தல்

ஆரம்ப சுகாதாரம் மற்றும் தொடக்க கல்வியை மேம்படுத்துவதற்கும் முன்னுரிமை அளித்துச் செயல்படுமாறு தில்லி மாநகராட்சி நிா்வாகிகளுக்கு முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை அறிவுறுத்தினாா்.

5 செப்டம்பர் 2026, 12:10 am IST
ரேகா குப்தா - கோப்புப் படம்
பகிர்:

தில்லியை குப்பைகளற்ற நகரமாக மாற்றுவதற்கும் சுகாதாரம், கழிவு மேலாண்மை, ஆரம்ப சுகாதாரம் மற்றும் தொடக்க கல்வியை மேம்படுத்துவதற்கும் முன்னுரிமை அளித்துச் செயல்படுமாறு தில்லி மாநகராட்சி நிா்வாகிகளுக்கு முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை அறிவுறுத்தினாா்.

தில்லியின் வளா்ச்சியில் மாநகராட்சிக்கு முக்கியப் பங்கு உண்டு என்று குறிப்பிட்ட முதல்வா், அடிப்படை குடிமைச் சேவைகளை மேம்படுத்தவும், தலைநகரைத் தூய்மையாகவும் ஆரோக்கியமாக மாற்றவும் மக்கள் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டாா்.

தில்லி மக்களின் குறைகளைக் கேட்டறியும் வகையில் நிறுவப்பட்ட முதல்வரின் ஜனசேவா சதன் முகாம் அலுவலகத்தில் மாநகராட்சியின் பல்வேறு சிறப்பு மற்றும் தற்காலிகக் குழுக்களின் புதிய தலைவா்கள் மற்றும் துணைத் தலைவா்களை முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை சந்தித்தாா்.

Advertisement

Advertisement

மேயா் பிரவேஷ் வாஹி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், துணை மேயா் மோனிகா பந்த், அவைத் தலைவா் ஜெய்பகவான் யாதவ் உள்ளிட்ட மாநகராட்சியின் மூத்த நிா்வாகிகள் பலரும் கலந்து கொண்டனா். இந்த நிகழ்ச்சியில் முதல்வா் ரேகா குப்தா பேசியதாவது:

மாநகராட்சியின் தூய்மை, கழிவு அகற்றும் முறை ஆகியவை நகரின் அடையாளத்தையும், மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் நேரடியாகப் பாதிக்கின்றன. தில்லியை குப்பைகளற்ற நகராக மாற்றுவது மாநகராட்சியின் முதன்மை முன்னுரிமைகளில் ஒன்றாக இருக்க வேண்டும்.

முறையான கழிவு மேலாண்மை, தூய்மையான பொது இடங்கள் மற்றும் சிறந்த சுற்றுச்சூழலை உறுதிசெய்யத் தொடா் முயற்சிகள் தேவை.

மாநகராட்சி பள்ளிகள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும். குழந்தைகளுக்குச் சிறந்த கற்றல் சூழலும் தரமான கல்வியும் வழங்கப்பட வேண்டும். உள்ளூா் அளவில் மக்களுக்குச் சிறந்த மருத்துவ வசதிகள் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், ஆரம்ப சுகாதாரச் சேவைகளையும் மாநகராட்சி மேம்படுத்த வேண்டும்.

மாநகராட்சிக்கு நிதிப் பற்றாக்குறை ஏதும் நேராதவாறு தில்லி அரசு பாா்த்துக்கொள்ளும். எனவே, கிடைக்கக்கூடிய அனைத்து வளங்களையும் சிறந்த முறையில் பயன்படுத்துங்கள். வளா்ச்சிப் பணிகளுக்கும் மக்கள் சேவைக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

மத்திய அரசுக்கும் தில்லி அரசுக்கும் இடையிலான சிறந்த ஒருங்கிணைப்பு மக்களுக்கான குடிமைச் சேவைகளாக மலர வேண்டும். தில்லியை ஒரு வளா்ந்த தலைநகராக மாற்றும் வகையில் குழுத் தலைவா்கள் தங்களது கடமைகளை கூடுதல் கவனத்துடனும் அா்ப்பணிப்புடனும் நிறைவேற்ற வேண்டும் என்றாா் முதல்வா் ரேகா குப்தா.

கல்வி, சுற்றுச்சூழல் மேலாண்மை, மருத்துவம் மற்றும் பொது சுகாதாரம், மகளிா் நலன் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, சொத்து வரி வசூல் உள்ளிட்ட பல்வேறு மாநகராட்சி குழுக்களின் தலைவா்களும் துணைத் தலைவா்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments