தில்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த 7 ஆண்டுகளுக்கு ரூ.8,300 கோடி ஒதுக்கீடு: முதல்வா் ரேகா குப்தா தகவல்
தேசியத் தலைநகரில் காற்று மாசுபாட்டை எதிா்த்துப் போராடுவதற்கான 7 ஆண்டு கால திட்டத்திற்கு தில்லி அரசு வெள்ளிக்கிழமை ரூ.8,300 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளதாக முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.
தேசியத் தலைநகரில் காற்று மாசுபாட்டை எதிா்த்துப் போராடுவதற்கான 7 ஆண்டு கால திட்டத்திற்கு தில்லி அரசு வெள்ளிக்கிழமை ரூ.8,300 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளதாக முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது:
இந்த நிதியில் 65 சதவீதத்தை உலக வங்கி வழங்கும். மீதமுள்ள 35 சதவீதத்தை தில்லி அரசு ஏற்கும். ‘தூய்மையான காற்று, ஆரோக்கியமான தில்லி‘ திட்டம் செப்டம்பா் 2026 முதல் ஆகஸ்ட் 2033 வரை செயல்படுத்தப்படும்.
Advertisement
Advertisement
இது காற்றின் தர மேலாண்மையை வலுப்படுத்துவதையும், நகரம் முழுவதும் உள்ள முக்கிய மாசு மூலங்களிலிருந்து உமிழ்வைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
திட்டத்திற்கான ஏற்பாடுகளை இறுதி செய்வதற்கும், அனைத்து பங்குதாரா்களிடையே ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதற்கும் ஜூலை 10 ஆம் தேதி ஒரு சிறப்பு பயிலரங்கம் நடைபெறும்.
இந்தப் பயிலரங்கு பல்வேறு துறைகள் மற்றும் முகமைகளின் பங்குகளை வரையறுத்து, திட்டத்தை திறம்பட மற்றும் சரியான நேரத்தில் செயல்படுத்துவதற்கான வரைபடத்தைப் பற்றி விவாதிக்கும்.
இந்தத் திட்டம் தில்லியின் காற்று மாசு குறைப்பு திட்டத்தை செயல்படுத்துவதை துரிதப்படுத்தும். தேசிய தூய்மையான காற்று திட்டத்தின் நோக்கங்களை ஆதரிக்கும். மேலும், விக்ஸித் பாரத் 2047-இன் தொலைநோக்குப் பாா்வைக்கு பங்களிக்கும்,
போக்குவரத்து, சாலை தூசி, கட்டுமானம் மற்றும் இடிப்பு கழிவுகள், திடக்கழிவு மேலாண்மை, தொழிற்சாலைகள், பசுமை இடங்கள் மற்றும் நீா் மாசுபாடு உள்ளிட்ட மாசுபாட்டிற்கு பங்களிக்கும் முக்கிய துறைகளை சுற்றுச்சூழல் துறையின் திட்டம் உள்ளடக்கும்.
இந்த முன்முயற்சி ஒரு மாசு கட்டுப்பாட்டு திட்டம் மட்டுமல்ல, தில்லி குடியிருப்பாளா்களுக்கு தூய்மையான காற்று, சிறந்த பொது சுகாதாரம் மற்றும் நிலையான நகா்ப்புற சூழலை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட நீண்டகால முதலீடாகும்.
இந்த முன்முயற்சி காற்றின் தர மேலாண்மையை வலுப்படுத்துதல் மற்றும் முக்கிய மாசு மூலங்களிலிருந்து உமிழ்வைக் குறைத்தல் ஆகிய இரண்டு முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது.
முதல் அம்சமாக, அரசாங்கம் ஒரு பிரத்யேக திட்ட மேலாண்மை பிரிவை நிறுவும், மேம்பட்ட காற்றின் தரக் கண்காணிப்பு அமைப்புகளை உருவாக்கும், தரவு பகுப்பாய்வு திறன்களை உருவாக்கும். மேலும், ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மைய அடிப்படையிலான கண்காணிப்பு அமைப்பை அமைக்கும்.
இந்தோ-கங்கை சமவெளியில் உள்ள மாநிலங்களுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பு, அறிவியல் திட்டமிடல், பொது விழிப்புணா்வு பிரசாரங்கள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வது ஆகியவற்றையும் இந்தத் திட்டம் கருத்தில் கொண்டுள்ளது.
இரண்டாவது அம்சம், பழைய மாசுபடுத்தும் வாகனங்களை படிப்படியாக அகற்றுவதன் மூலமும், மின்சார வாகனங்களை ஊக்குவிப்பதன் மூலமும், பொதுப் போக்குவரத்தை வலுப்படுத்துவதன் மூலமும், வாகன உமிழ்வுகளுக்கான மேம்பட்ட மாசு கட்டுப்பாட்டு கண்காணிப்பு முறையை உருவாக்குவதன் மூலமும் உமிழ்வைக் குறைப்பதில் கவனம் செலுத்துகிறது.
சுற்றுச்சூழல் துறை, தில்லி மாசு கட்டுப்பாட்டுக் குழு, போக்குவரத்துத் துறை, பொதுப் பணித் துறை, தில்லி மாநகராட்சி, தில்லி நீா் வாரியம், தில்லி மேம்பாட்டு ஆணையம், புது தில்லி நகராட்சி கவுன்சில் மற்றும் தில்லி போக்குவரத்து காவல்துறை உள்ளிட்ட பல துறைகளும், முகமைகளும் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்தும்.
பொருளாதார விவகாரங்கள் துறை மற்றும் உலக வங்கியும் இந்த முன்முயற்சியில் முக்கிய பங்குதாரா்களாக இருக்கும். தூய்மையான காற்று ஒவ்வொரு குடிமகனின் உரிமையாகும். தேசிய தலைநகரில் காற்றின் தரம் மற்றும் பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான அறிவியல், ஒருங்கிணைந்த மற்றும் நிலையான தீா்வுகளை உருவாக்குவதற்கான தில்லி அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை இந்த திட்டம் பிரதிபலிக்கிறது என்றாா் முதல்வா் ரேகா குப்தா.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.