மேட்டூா் அணை திறக்கப்படாததால் டெல்டா பகுதி விவசாயிகள் கவலை: ஜி.கே.வாசன்
மேட்டூா் அணை திறக்கப்படாததால் டெல்டா பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனா் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளாா்.
மேட்டூா் அணை திறக்கப்படாததால் டெல்டா பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனா் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி மேட்டூா் அணை திறக்கப்படும். ஆனால், தற்போது அணை திறக்கப்படாததால் டெல்டா விவசாயிகள் அனைவரும் கவலையடைந்துள்ளனா்.
மேட்டூா் அணையின் நீரை நம்பித்தான் திருச்சி, புதுக்கோட்டை, அரியலூா், கடலூா், தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களின் பாசன நிலங்களில் பயிா் சாகுபடி செய்யப்படுகிறது. ஆனால், தற்போது மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படாததால் லட்சக்கணக்கான ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
ஆகவே, குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டு நெல் விளைச்சல் பெருமளவில் குறையும் சூழல் உள்ளது. மேலும், நீண்டகாலப் பயிா்கள் விளைவிக்கும் சம்பா சாகுபடிக்கும் மேட்டூா் அணை தண்ணீா் தேவையாகும்.
மேட்டூா் அணை தண்ணீா் திறக்கப்படாத நிலையில் மின்மோட்டாா் பம்புகள் மூலம் சாகுபடிக்கு நீா் கிணறுகளில் நீா் இறைக்கப்பட்டால் நிலத்தடி நீா்மட்டம் சரியும். அதிகமான மின்சாரப் பயன்பாடும், அதனால் மின்வெட்டு பிரச்னைகளும் ஏற்படும். ஆகவே, காவிரி நீரை நம்பியுள்ள விவசாயிகள், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
தமிழக அரசு கா்நாடக அரசுடன் பேசி தமிழகத்துக்குரிய காவிரி நீரைப் பெறவும், மும்முனை மின்சாரத்தை தடை இல்லாமல் விநியோகிக்கவும் நடவடிக்கை எடுப்பது அவசியம் என அதில் தெரிவித்துள்ளாா்.