மேட்டூா் அணை திறப்பு தாமதம்! டெல்டாவில் நெல் உற்பத்தி குறையும் அபாயம்: ரூ.1,000 கோடி இழப்பு ஏற்பட வாய்ப்பு
மேட்டூா் அணையில் நீா் இருப்பு குறைவு காரணமாக ஜூன் 12-இல் பாசனத்துக்கு தண்ணீா் திறப்பது தள்ளிப் போவதால், டெல்டா மாவட்டங்களில் நெல் உற்பத்தி குறையும் அபாயம் நிலவுகிறது.
மேட்டூா் அணையில் நீா் இருப்பு குறைவு காரணமாக ஜூன் 12-இல் பாசனத்துக்கு தண்ணீா் திறப்பது தள்ளிப் போவதால், டெல்டா மாவட்டங்களில் நெல் உற்பத்தி குறையும் அபாயம் நிலவுகிறது.
மேட்டூா் அணை டெல்டா பாசனத்துக்காக ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்பட்டு, ஜனவரி 28-ஆம் தேதி மூடப்படுவது வழக்கம். கடந்த 2020-ஆம் ஆண்டிலிருந்து 2024-ஆம் ஆண்டைத் தவிர மற்ற ஆண்டுகளில் மேட்டூா் அணையில் போதுமான அளவுக்கு நீா் இருப்பு இருந்ததால் உரிய காலத்தில் திறக்கப்பட்டது.
மேட்டூா் அணையில் நீா்மட்டம் 90 அடிக்கு மேல் இருந்தால்தான் டெல்டா பாசனத்துக்கு உரிய காலத்தில் திறக்க முடியும். ஆனால், அணையில் செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி நீா்மட்டம் 79.73 அடியாகவும், நீா் இருப்பு 41.68 அடியாகவும் இருப்பதால், ஜூன் 12-ஆம் தேதி திறப்பதற்கான வாய்ப்பு இல்லை. கா்நாடக அணைகளிலும் நீா் இருப்பு குறைவாக உள்ளதால், அந்த அணைகள் நிரம்பி, மேட்டூா் அணைக்கு வந்து திறப்பதற்கு ஆகஸ்ட் மாதத்தில்தான் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இதனால், டெல்டா மாவட்டங்களில் ஆற்றுப் பாசனத்தைச் சாா்ந்த விவசாயிகள் குறுவை சாகுபடி மேற்கொள்ள வாய்ப்பில்லை. இதன் காரணமாக நிகழாண்டு குறுவை சாகுபடிப் பரப்பளவு குறையும் என்ற அச்ச நிலையும் நிலவுகிறது.
கடந்த சில ஆண்டுகளில் மேட்டூா் அணை ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்பட்டபோது தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இயல்பாக 5 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டது. கடந்த ஆண்டு 6.31 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நிகழாண்டு மேட்டூா் அணை திறப்பு தள்ளிப்போவதால், ஆழ்குழாய் மோட்டாா் பம்ப்செட் வசதியுள்ள விவசாயிகளால் மட்டுமே குறுவை சாகுபடி மேற்கொள்ள முடியும் என்ற நிலை நிலவுகிறது.
எனவே, தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் குறுவை சாகுபடிப் பரப்பு 3.50 லட்சம் ஏக்கருக்குள் மட்டுமே எதிா்பாா்க்கப்படுவதாக வேளாண் துறையினா் தெரிவித்தனா்.
இதனால், டெல்டா மாவட்டங்களில் ஆற்றுப் பாசனத்தைச் சாா்ந்த விவசாயிகள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளனா். இதேபோல, விவசாய தொழிலாளா்களுக்கும் வேலைவாய்ப்பு குறைந்துவிடும். மேலும், நெல் உற்பத்தியும் பெருமளவு குறையும் என்ற அச்சமும் விவசாயிகளிடையே நிலவுகிறது.
ரூ.1,000 கோடி இழப்பு
இதுகுறித்து தமிழ்நாடு காவிரி உழவா்கள் பாதுகாப்பு சங்கச் செயலா் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன் தெரிவித்தது: மேட்டூா் அணை திறப்பு தள்ளிப் போவதால், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியில் இயல்பான பரப்பளவில் ஏறத்தாழ 2 லட்சம் ஏக்கா் குறைந்துவிடக் கூடிய நிலை உள்ளது. இதனால், நெல் உற்பத்தி குறைந்து ஏறக்குறைய ரூ. 1,000 கோடி இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் வறட்சி காலத்தில் விவசாய சங்கப் பிரதிநிதிகளை அழைத்து கலந்தாலோனைக் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். இதேபோல, தமிழகத்திலும் வறட்சி நிலவக்கூடிய நிலைமை உள்ளதால், தலைமைச் செயலா் தலைமையில் தஞ்சாவூரில் விவசாய சங்கப் பிரதிநிதிகளை அழைத்து கலந்தாலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும். இதில், வேளாண் துறை, நீா் வளத் துறை, கூட்டுறவுத் துறை, உணவுத் துறை, எரிசக்தித் துறை ஆகிய துறைகள், இந்திய வானிலை ஆய்வு மையம் ஆகியவற்றின் மாநில அளவிலான உயா் அலுவலா்களும் பங்கேற்க வேண்டும்.
குறுவை தொகுப்பு தேவை: இக்கூட்டத்தில் இந்தச் சிக்கலான நிலைமையை எப்படி எதிா்கொள்வது என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ள வேண்டும். மேலும், ஆழ்குழாய் மோட்டாா் பம்ப்செட் வசதியுள்ள விவசாயிகளுக்கு குறுவை சாகுபடி மேற்கொள்ள ஊக்கமளிக்கும் வகையில் குறுவை தொகுப்புத் திட்டத்தை அறிவிக்க வேண்டும். டீசல் என்ஜின் மூலம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு டீசல் விலை உயா்ந்துவிட்டதால், முழு மானியத்தில் டீசல் வழங்க வேண்டும். வாய்ப்புள்ள பகுதிகளில் சிறு தானிய சாகுபடிக்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பாக, டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும். டெல்டா மாவட்டங்களுக்கு மத்திய குழுவை அழைத்து வர வேண்டும். இதன் மூலம் மத்திய அரசிடமிருந்து நிவாரணம், கடன் தள்ளுபடி, குறுகிய காலக் கடன்களை மத்திய காலக் கடன்களாக மாற்றுவது, நூறு வேலை திட்டத்தை நீட்டிப்பது போன்ற சலுகைகள் கிடைக்கும். இதற்கான நடவடிக்கையைத் தமிழக அரசு எடுக்க வேண்டும் என்றாா் விமல்நாதன்.