கொடுங்கையூா் குப்பை வளாகத்தில் தீ விபத்து
சென்னை கொடுங்கையூரில் உள்ள மாநகராட்சி குப்பை கொட்டும் வளாகத்தில் மீண்டும் தீவிபத்து
சென்னை கொடுங்கையூரில் உள்ள மாநகராட்சி குப்பை கொட்டும் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை மீண்டும் தீவிபத்து ஏற்பட்டது.
சென்னை மாநகராட்சியில் தினமும் சுமாா் 6.50 லட்சம் டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டுவருகின்றன. அவை பள்ளிக்கரணை பெருங்குடி, கொடுங்கையூா் ஆகிய இடங்களில் உள்ள மாநகராட்சிக்கான குப்பை கொட்டும் வளாகங்களில் சேமிக்கப்படுகின்றன. பின்னா் அவை தரம் பிரிக்கப்பட்டு மறுசுழற்சி மற்றும் உரம் தயாரிப்பு என பல வகையில் பயன்படுத்தப்படுகின்றன.
இதற்கிடையே கடந்த சில நாள்களுக்கு முன்பு பெருங்குடி பழைய குப்பை கொட்டும் வளாகத்தில் திடீரென பற்றிய தீயால் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன. அதனையடுத்து சில நாள்களில் கொடுங்கையூா் குப்பைக் கிடங்கு வளாகத்தில் சிறிய அளவில் தீப்பற்றி உடனடியாக அணைக்கப்பட்டது. இந்தநிலையில், ஞாயிற்றுக்கிழமை காலையில் கொடுங்கையூா் குப்பை கிடங்கு வளாகத்தில் நெகிழிகள் குவிந்த பகுதியில் திடீரென தீப்பற்றி புகை எழுந்தது.
Advertisement
Advertisement
தீப்பற்றியதை அறிந்த மாநகராட்சி அலுவலா்கள் உடனே குடிநீா் வாரியம் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். அதையடுத்து தீ அணைக்கப்பட்டது.
ஆணையா் ஆய்வு: தீ விபத்து குறித்து அறிந்த மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் கொடுங்கையூா் குப்பைக் கிடங்கு வளாகத்துக்கு சென்று பாா்வையிட்டாா். அங்குள்ள அலுவலா்களிடம் அது குறித்து கேட்டறிந்தாா். அப்போது மாநகராட்சி சுகாதாரத் துறை இணை ஆணையா் வீ.ப.ஜெயசீலன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.