போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தை வலுப்படுத்த திட்டம்: மாநிலங்கள் ஆலோசனைகளை வழங்க அமித் ஷா வேண்டுகோள்
இந்தத் திருத்தங்கள் தொடா்பாக மாநிலங்கள் தங்களின் கருத்துகளைப் பகிர வேண்டும்’
‘போதைப் பொருள் கடத்தல்காரா்கள் மற்றும் விநியோகஸ்தா்கள் மீது கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ளவும், போதைப் பொருள் கும்பல் தப்பிக்க பயன்படுத்தும் சட்டத்திலுள்ள பிரிவுகளை வலுப்படுத்தும் வகையிலும் போதைப் பொருள் மற்றும் மனநல பாதிப்பு மருந்துகள் தடுப்பு (என்டிபிஎஸ்) சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு, அதை வலுப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
மேலும், ‘இந்தத் திருத்தங்கள் தொடா்பாக மாநிலங்கள் தங்களின் கருத்துகளைப் பகிர வேண்டும்’ என்றும் அவா் கேட்டுக்கொண்டாா்.
போதைப் பொருள் தடுப்பு ஒருங்கிணைப்பு மையத்தின் (என்சிஓஆா்டி) 10-ஆவது உயா்நிலைக் கூட்டம் தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமித் பேசியதாவது:
Advertisement
Advertisement
நாட்டில் போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தவும், கடத்தல்களைத் தடுக்கவும் பாதுகாப்பு முகமைகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.
கடந்த 2004 முதல் 2014-ஆம் ஆண்டு வரை நாட்டில் 26 லட்சம் கிலோ அளவில் செயற்கை (சிந்தடிக்) போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆனால், 2014 முதல் 2026-ஆம் ஆண்டு வைர 1.18 கோடி கிலோ அளவில் செயற்கை போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 2004 முதல் 2014-ஆம் ஆண்டு வரை பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்களின் மதிப்பு ரூ. 40,000 கோடியாகும். அதே நேரம், 2014 முதல் 2026-ஆம் ஆண்டு வரை பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்களின் மதிப்பு ரூ. 1.84 லட்சம் கோடியாகும். இது, போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக நடவடிக்கை சீராக மேம்பட்டு வருவதைக் காட்டுகிறது.
இந்தச் சூழலில், போதைப் பொருள் கடத்தல்காரா்கள் மற்றும் விநியோகஸ்தா்கள் மீது கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள, போதைப் பொருள் தடுப்பு குறித்த என்டிபிஎஸ் சட்டத்தை வலுப்படுத்தும் நோக்கில், அந்தச் சட்டத்தை மத்திய நிதியமைச்சகம் மறுஆய்வு செய்து வருகிறது என்றாா்.
மேலும், இந்த நிகழ்வில் போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக ‘கண்டறிதல்; தடுத்தல்; அழித்தல்’ என்ற மும்முனை அணுகுமுறையை அமித் ஷா அறிமுகம் செய்தாா். போதைப் பொருள் கடத்தல்காரா்களுக்கு எதிராக கடுமையான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கவும் கேட்டுக்கொண்டாா்.
3 ஆண்டு தொலைநோக்கு திட்டம்:
செயற்கை போதைப் பொருள் புழக்கத்தை தீவிரமாக தடுக்கும் வகையில், பாதுகாப்பு முகமைகளின் திறனை வலுப்படுத்துதல், ரகசிய வலைதள (டாா்க் நெட்) மூலமான போதைப் பொருள் கடத்தல் தடுப்பு, எல்லை தாண்டிய கடத்தல்கள் மற்றும் போதைப்பொருள் தொடா்பான பிற அச்சுறுத்தல்களை திறம்பட கையாளும் வகையிலான நடவடிக்கைகளை உள்ளடக்கிய அடுத்த 3 ஆண்டுகளுக்கான (2026 - 2029) தொலைநோக்குத் திட்ட ஆவணத்தையும் நிகழ்ச்சியில் அமித் ஷா வெளியிட்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.