முகப்பு
இந்தியா

ரூ.182 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்: அமித் ஷா

ரூ.182 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்: அமித் ஷா

Updated On : 17 மே 2026, 1:24 am IST
அமித் ஷா - ஏஎன்ஐ
பகிர்:

இதுவரை இல்லாத வகையில் ரூ. 182 கோடி மதிப்பிலான ‘ஜிஹாதி போதைப் பொருள்’ என்றழைக்கப்படும் கேப்டகன் போதை மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவா் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: ‘ஆபரேஷன் ராகேபில்’ என்ற நடவடிக்கையின் கீழ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மேற்கொண்ட தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில், இதுவரை இல்லாத வகையில் ரூ. 182 கோடி மதிப்பலான 227.7 கிலோ எடையுடைய ‘ஜிஹாதி போதைப் பொருள்’ என்றழைக்கப்படும் கேப்டகன் போதை மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்தியா வழியாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு கடத்தப்படவிருந்த நிலையில், இந்த போதை மருந்து சரக்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதைக் கடத்த முயன்ற வெளிநாட்டு நபரும் கைது செய்யப்பட்டுள்ளாா். போதைப் பொருளுக்கு எதிராக சகிப்புத்தன்மையற்ற கொள்கையை இந்தியா கொண்டுள்ளது என்பதற்கு இந்த நடவடிக்கை சிறந்த எடுத்துக்காட்டாகும்.

Advertisement

இந்தியாவுக்குள் நுழையும் அல்லது நமது பிராந்தியத்தை போக்குவரத்துக்குப் பயன்படுத்தி கடத்தப்படும் ஒவ்வொரு கிராம் போதைப் பொருளையும் மத்திய அரசு கடுமையாக ஒடுக்கும் என்று குறிப்பிட்டாா்.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்தியா வழியாக மிகப் பெரிய அளவில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, தில்லியில் தங்கியிருந்த சிரியா நாட்டைச் சோ்ந்த நெப் சராய் என்பவரைக் கைது செய்து, அவா் தங்கியிருந்த குடியிருப்பில் சோதனை மேற்கொண்டதில் 31.5 கிலோ கேப்டகன் போதை மருந்துகளைப் பறிமுதல் செய்தனா்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாராணையில், அவா் சுற்றுலா நுழைவு இசைவில் (விசா) கடந்த 2024-ஆம் ஆண்டு நவம்பா் 15-ஆம் தேதி இந்தியா வந்ததும், நுழைவு இசைவு கடந்த 2025-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி காலாவதியாகிவிட்ட நிலையிலும், இந்தியாவில் தொடா்ந்து தங்கியிருந்ததும் தெரியவந்தது. அதோடு, ஜெட்டா, சவூதி அரேபியாவுக்கு கடத்துவதற்காக சப்பாத்தி வெட்டும் இயந்திரத்தில் மறைத்து இந்த போதை மருந்துகள் கடத்தப்பட்டதும் தெரியவந்தது.

மேலும், அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், குஜராத் மாநிலம் முந்த்ரா துறைமுகத்தில் வைக்கப்பட்டிருந்த கண்டெய்னரில் இருந்து 196.2 கிலோ எடைகொண்ட கேப்டகன் போதை மருந்துகள் கைப்பற்றப்பட்டன. செம்மறி ஆட்டு ரோமம் என்ற பெயரில் சிரியாவிலிருந்து இந்த கண்டெய்னா் அனுப்பப்பட்டதும் தெரியவந்தது என்று தெரிவிக்கப்பட்டது.