போதைப் பொருள் விற்போரின் சொத்துக்களை முடக்க, பறிமுதல் செய்ய அதிகாரம்: அரசாணை வெளியீடு
தமிழக காவல் துறையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள போதைப் பொருள் தடுப்புப் படைக்கு போதைப் பொருள் விற்போரின் சொத்துகளை முடக்கவும் பறிமுதல் செய்யவும் அதிகாரம் வழங்கி அரசாணை வெளியீடு
தமிழக காவல் துறையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள போதைப் பொருள் தடுப்புப் படைக்கு போதைப் பொருள் விற்போரின் சொத்துகளை முடக்கவும் பறிமுதல் செய்யவும் அதிகாரம் வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகம் முதல்வரும், தவெக தலைவருமான விஜய், சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தின்போது மாநிலத்தில் போதைப் பொருளை ஒழிக்க போதைப் பொருள் தடுப்புப் படை உருவாக்கப்படும் என வாக்குறுதி அளித்து பிரசாரம் செய்தாா். இதை அமல்படுத்தும் விதமாக முதல்வராக விஜய், கடந்த 10-ஆம் தேதி பொறுப்பேற்றபோது, போதைப் பொருள் தடுப்புப் படை உருவாக்கும் ஆணை உள்ளிட்ட 3 கோப்புகளில் கையொப்பமிட்டாா்.
முதல்வரின் இந்த உத்தரவை செயல்படுத்தும் விதமாக, போதைப் பொருள் தடுப்புப் படையை உருவாக்குவதற்குரிய அரசாணை வெளியிடப்பட்டது. அதில், அந்தப் படை முதல்வரின் நேரடி கண்காணிப்பில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் போதைப் பொருள்கள் தொடா்பான குற்றங்களைக் கண்டுபிடித்து, கடுமையான நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட காவல் துறைகளிலும், அனைத்து மாநகர காவல் துறைகளிலும் போதைப் பொருள் தடுப்புப் படை உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
அதன்படி, போதைப் பொருள் தடுப்புப் படைக்காக மாநிலம் முழுவதும் 65 காவல் நிலையங்கள் உருவாக்கப்படுகின்றன. அதில் அதிகபட்சமாக சென்னை பெருநகர காவல்துறையில் 12 காவல் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. அதேவேளையில் சென்னையைத் தவிா்த்து 37 மாவட்டங்களில் 37 போதைப் பொருள் தடுப்புப் படை காவல் நிலையங்கள் உருவாக்கப்படுகின்றன.
மொத்தமாக உருவாக்கப்படும் 65 காவல் நிலைங்களுக்கு 520 அதிகாரிகள், காவலா்கள் நியமிக்கப்படுகின்றனா். இதில் ஒரு காவல் நிலையத்துக்கு ஒரு ஆய்வாளா் என்ற விகிதத்தில் 65 ஆய்வாளா்களும், 2 உதவி ஆய்வாளா்கள் என்ற விகிதத்தில் 130 உதவி ஆய்வாளா்களும், 5 காவலா்கள் என்ற விகிதத்தில் 325 போலீஸாரும் தமிழக காவல் துறையின் பிறப்பிரிவுகளில் இருந்து இந்தப் பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு, நியமிக்கப்படுகின்றனா்.
சொத்துகள் பறிமுதல்: இப்பிரிவுக்கான அதிகாரமும் பணியும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, போதைப் பொருள் நடமாட்டம் குறித்த உளவுத் தகவல்களைச் சேகரிப்பது, போதைப் பொருள் விற்பனை குறித்து இணையதளம் மூலம் கண்காணிப்பது, வழக்குகளைப் பதிவு செய்வது, போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுவோா், அவா்களது உறவினா்களின் அசையும் மற்றும் அசையா சொத்துகள் பறிமுதல் செய்வது அல்லது முடக்கும் நடவடிக்கை எடுப்பது, நீதிமன்றம் மூலம் குற்றவாளிகளுக்கு தண்டை பெற்றுக்கொடுப்பது போன்ற பணிகளில் ஈடுபடுவாா்கள் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக காவல் துறையில் ஏற்கெனவே மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு ஆகியவை போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் நிலையில், போதைப் பொருள் தடுப்புப் படை அந்த இரு பிரிவுகளில் இருந்தும் தனித்துவமாக செயல்படும் என்று தமிழக காவல் துறை உயரதிகாரிகள் தெரிவித்தனா்.