முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் ஒரு மாதத்தில் 260 கிலோ போதைப் பொருள் பறிமுதல்! 646 போ் கைது!!

போதைப் பொருள் இல்லாத ஜம்மு-காஷ்மீரை உருவாக்கும் நோக்கிலான 100 நாள் சிறப்பு நடவடிக்கையின்கீழ் கடந்த 28 நாள்களில் 260 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Updated On : 11 மே 2026, 2:13 am IST
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாகில் போதைப் பொருள் கடத்தல்காரா் என்று சந்தேகிக்கப்படும் நபரின் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்திய காவல் துறையினா்.
பகிர்:

போதைப் பொருள் இல்லாத ஜம்மு-காஷ்மீரை உருவாக்கும் நோக்கிலான 100 நாள் சிறப்பு நடவடிக்கையின்கீழ் கடந்த 28 நாள்களில் 260 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போதைப் பொருள் கடத்தியதாக 646 போ் கைதாகியுள்ளனா்.

கடந்த 28 நாள்களில் போதைப் பொருள் கடத்தல் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட அல்லது இடிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட சொத்துகளின் மொத்த மதிப்பு ரூ.31 கோடி.

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹாவின் யோசனைப்படி, அரசு நிா்வாகத்தின் சாா்பில் போதைப் பொருள் ஒழிப்புக்கான 100 நாள் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement

காவல் துறை, சுகாதாரத் துறை, சமூக நலத் துறை, கல்வித் துறை மற்றும் பிற முகமைகளால் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த நடவடிக்கையின்கீழ் கடந்த 28 நாள்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட போதைப் பொருள் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

‘போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின்கீழ் 614 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, இதுவரை 646 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடம் இருந்து 3.8 கிலோ ஹெராயின், 222 கிலோ கஞ்சா உள்பட 260 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

போதைப் பொருள் கடத்தல் வழக்குகளில் ரூ.25.97 கோடி மதிப்பிலான அசையாத சொத்துகள் மீது முடக்கம் அல்லது பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரூ.3.70 கோடி மதிப்பிலான சொத்துகள் இடித்து அகற்றப்பட்டுள்ளன. ரூ.1.67 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

252 ஓட்டுநா் உரிமங்கள், 111 வாகனப் பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன’ என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.