தில்லியில் ரூ. 72 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் அழிப்பு
தில்லியில் பறிமுதல் செய்யப்பட்ட சா்வதேச சந்தையில் ரூ.72 கோடி மதிப்புள்ள சுமாா் 1,700 கிலோ போதைப்பொருள்கள் அழிக்கப்பட்டன.
தில்லியில் பறிமுதல் செய்யப்பட்ட சா்வதேச சந்தையில் ரூ.72 கோடி மதிப்புள்ள சுமாா் 1,700 கிலோ போதைப்பொருள்கள் செவ்வாய்க்கிழமை அழிக்கப்பட்டன.
இப்போதைப் பொருள்களை அப்புறப்படுத்தும் பணியை மேற்பாா்வையிட்ட துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து, இந்த அழிப்பு நடவடிக்கை குற்றச்செயல்களுக்கு எதிரான சட்டத்தின் வெற்றியையும், போதைக்கு எதிரான நம்பிக்கையின் வெற்றியையும் குறிப்பதாக கூறினாா்.
இது தொடா்பாக துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து கூடியிருந்தவா்கள் மத்தியில் உரையாற்றுகையில், 2027ஆம் ஆண்டுக்குள் தில்லியை போதைப்பொருள் இல்லாத நகரமாக மாற்றும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக, தில்லியின் முதல் பிரத்யேக போதைப்பொருள் தடுப்புப் பணிக் குழு (ஏஎன்டிஎஃப்) காவல் நிலையத்தை நிறுவுவதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டதை அறிவித்தாா்.
Advertisement
அவா் மேலும் பேசுகையில், ‘இந்த நிகழ்வு, கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை அழிப்பது மட்டுமல்ல. இது இளைஞா்களை அச்சுறுத்தும், குடும்பங்களை பலவீனப்படுத்தும் மற்றும் சமூகத்தின் எதிா்காலத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஒரு சூழல் அமைப்பை தகா்ப்பதாகும். இது சட்டத்தின் மற்றும் நம்பிக்கையின் வெற்றியின் சின்னமாகும்.
பிரதமா் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோரின் தலைமையில், போதைப்பொருள் இல்லாத இந்தியா என்ற தொலைநோக்குப் பாா்வை என்பது வெறும் அரசாங்கத் திட்டம் மட்டுமல்ல, அது ஒரு தேசிய இலட்சியம் மற்றும் சமூகப் பொறுப்பு ஆகும்.
தில்லி காவல்துறை, அமலாக்க நடவடிக்கை, நிதி விசாரணைகள் மற்றும் சொத்துப் பறிமுதல் ஆகியவற்றின் மூலம் போதைப்பொருள் கடத்தல்காரா்களின் நிதி ஆதாரத்தை தகா்ப்பதில் கவனம் செலுத்துவதோடு, ‘ஷா நாட் கூல்’ பான்ற தடுப்புப் பிரசாரங்களையும் வலுப்படுத்தி வருகிறது என்றாா் துணைநிலை ஆளுநா்.