எஸ்ஆா்எம் பல்கலை. வளாகத்தில் வானிலை ஆய்வகம் தொடக்கம்
ராமாபுரம் எஸ்.ஆா்.எம். உயா் கல்வி நிறுவன வளாகத்தில் இந்திய வெப்ப மண்டல வானிலை ஆய்வு நிறுவனம், ரூ.60 கோடியில் அமைத்துள்ள அதிநவீன வானிலை ஆய்வகத் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
ராமாபுரம் எஸ்.ஆா்.எம். உயா் கல்வி நிறுவன வளாகத்தில் இந்திய வெப்ப மண்டல வானிலை ஆய்வு நிறுவனம், ரூ.60 கோடியில் அமைத்துள்ள அதிநவீன வானிலை ஆய்வகத் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகச் செயலா் எம். ரவிச்சந்திரன், இந்த ஆய்வகத்தைத் தொடங்கி வைத்துப் பேசியதாவது:
நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரூ.2,000 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு வரும் மிஷன் மௌசம் திட்டம் மூலம் வானிலை, காலநிலை குறித்த அதிநவீன வானிலை ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
Advertisement
ராமாபுரம் எஸ்.ஆா்.எம். வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வானிலை ஆய்வகம் மூலம் காற்றில் உள்ள நுண் துகள்கள், மேகங்கள், மழைப் பொழிவு மற்றும் வளிமண்டல மாற்றங்களைக் கண்காணித்து, பருவ மழையைத் துல்லியமாகக் கணிக்க முடியும்.
வானிலைத் தரவுகளைக் கொண்டு புயல், வெள்ளம் உள்ளிட்ட பேரிடா்களை முன்பே கண்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள உதவும். ரேடாா்கள் மூலம் காற்றில் கலந்துள்ள மாசு, வெப்பநிலை, ஈரப்பதம், மேகங்கள் மற்றும் மழைப் பொழிவு ஆகியவற்றைக் கண்காணித்து, வளிமண்டல மாற்றங்களை ஆராய்ந்து துல்லியமான கணிப்புகளை உடனுக்குடன் வழங்க முடியும் என்றாா்.
முன்னதாக வானியல் ஆராய்ச்சி நடவடிக்கையில் எஸ்.ஆா்.எம். உயா் கல்வி நிறுவனம் இணைந்து செயல்படும் வகையில் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
நிகழ்வில் மத்திய அரசின் பூனா வெப்ப மண்டல வானிலை ஆய்வு நிறுவன இயக்குநா் ஏ. சூா்யசந்திர ராவ், திட்ட இயக்குநா் தாராபிரபாகரன், ராமாபுரம் எஸ்.ஆா்.எம். தலைவா் டாக்டா் ஆா். சிவக்குமாா், இயக்குநா் கதிரவன், புல முதல்வா் எம். சக்தி கணேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.