முகப்பு
இந்தியா

ஆந்திரத்தில் நிலவும் மாறுபட்ட வானிலை: எச்சரிக்கும் பேரிடர் மேலாண்மை ஆணையம்!

ஆந்திரப் பிரதேசத்தில் நிலவும் வானிலை குறித்து..

Updated On : 4 ஜூன் 2026, 1:41 pm IST
கடுமையான வெயிலில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக தொப்பி அணிந்து பயணிக்கும் குழந்தைகள் - file photo
பகிர்:

ஆந்திரப் பிரதேசத்தில் மாறுபட்ட வானிலை நிலவக்கூடும் என மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

வட கடலோர மாவட்டங்களின் பல மண்டலங்களில் கடுமையான வெப்ப அலை நிலவும் என கணிக்கப்பட்டுள்ள அதே வேளையில், மாநிலத்தின் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்யவும் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

புதன்கிழமையன்று மாநிலத்தின் பல மாவட்டங்களில் வெப்பநிலை அதிகமாகவே நீடித்ததாக வானிலை கூறியது. அதே சமயம், இன்று சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று ஆணையம் கூறியுள்ளது. எனவே, மாநிலத்தில் மாறுபட்ட வானிலை நிலவ வாய்ப்புள்ளது பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் நிர்வாக இயக்குனர் பிரகர் ஜெயின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தகவலின்படி,

இன்று 46 மண்டலங்களில் கடுமையான வெப்ப அலை நிலவ வாய்ப்புள்ளது. இதில் விஜயநகரம் மாவட்டத்தில் 19 மண்டலங்கள், பார்வதிபுரம் மன்யம் மாவட்டத்தில் 14, ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் 11, மற்றும் அல்லூரி சீதாராம ராஜு, போலாவரம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு மண்டலம் ஆகியவை அடங்கும்.

மேலும், 79 மண்டலங்களில் வெப்ப அலை நிலவ வாய்ப்புள்ளதாகவும், வெள்ளிக்கிழமையன்று இதன் தீவிரம் மேலும் அதிகரிக்கக்கூடும் என ஆணையம் தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமையன்று 85 மண்டலங்களில் கடுமையான வெப்ப அலையும், 67 மண்டலங்களில் சாதாரண வெப்ப அலையும் நிலவும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

ஏலூரு, போலாவரம், என்டிஆர், குண்டூர், பால்நாடு, பிரகாசம் மற்றும் நெல்லூர் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் வெப்பநிலை 43 டிகிரி முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளது.

ஸ்ரீகாகுளம், விஜயநகரம், பார்வதிபுரம் மன்யம், அல்லூரி சீதாராம ராஜு, அனகாபள்ளி, விசாகப்பட்டினம், கோனசீமா, காக்கிநாடா, கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, கிருஷ்ணா, பாபட்லா மற்றும் மார்க்காபுரம் ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், விதர்பா முதல் தெலங்கானா மற்றும் ராயலசீமா வழியாகத் தமிழ்நாடு வரை நீண்டுள்ள ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, மாநிலத்தின் சில பகுதிகளில் மழைப்பொழிவை ஏற்படுத்தத் துணைபுரியக்கூடும். இதன் தாக்கத்தால், வியாழக்கிழமையன்று பார்வதிபுரம் மன்யம், அல்லூரி சீதாராம ராஜு, மேற்கு கோதாவரி மற்றும் ஏலூரு ஆகிய மாவட்டங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மற்ற மாவட்டங்களிலும் ஆங்காங்கே இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது

தற்போது நிலவி வரும் கடும் வெப்பச் சூழலைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு, குறிப்பாக முதியவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் கவனத்துடன் இருக்குமாறு அவர் அறிவுறுத்தினார்.

இதய நோய், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்கள், அதிகபட்ச வெப்பம் நிலவும் நேரங்களில் வெளியே நடமாடுவதைத் தவிர்க்குமாறும், போதுமான தண்ணீர், எலுமிச்சை சாறு, மோர், இளநீர் ஆகியவற்றை அருந்துமாறும் அவர் தெரிவித்தார்.

இடியுடன் கூடிய மழை பெய்யும்போது மரங்கள், மின் கம்பங்கள் அல்லது விளம்பரப் பலகைகளுக்கு அடியில் தஞ்சமடைய வேண்டாம் எனப் பொதுமக்களை அவர் வலியுறுத்தினார். மேலும், கருமேகங்கள் திரண்டு இடி எழும்போது, ​​விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

Andhra Pradesh is likely to witness contrasting weather conditions on Thursday with severe heatwave conditions forecast in several mandals of north coastal districts even as thunderstorms accompanied by lightning are expected at isolated places in the state.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.