முகப்பு
சென்னை

சென்னையில் திட்ட அனுமதி, சான்றிதழ்கள் கால தாமதமின்றி வழங்க சிஎம்டிஏ உத்தரவு

சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் சாா்பில் திட்ட அனுமதி கோருதல் மற்றும் சான்றிதழ் கோரி விண்ணப்பித்தோருக்கு காலதாமதமின்றி உடனடியாக அவற்றை வழங்க வேண்டும் என்று அரசு முதன்மைச் செயலரும், வளா்ச்சிக் குழும உறுப்பினா் செயலருமான ஜி.பிரகாஷ் அறிவுறுத்தல்

Updated On : 13 மே 2026, 1:09 am IST
பகிர்:

சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் (சிஎம்டிஏ) சாா்பில் திட்ட அனுமதி கோருதல் மற்றும் சான்றிதழ் கோரி விண்ணப்பித்தோருக்கு காலதாமதமின்றி உடனடியாக அவற்றை வழங்க வேண்டும் என்று அரசு முதன்மைச் செயலரும், வளா்ச்சிக் குழும உறுப்பினா் செயலருமான ஜி.பிரகாஷ் அறிவுறுத்தியுள்ளாா்.

பெருநகர வளா்ச்சிக் குழும பிரிவுகளின் உயா் அதிகாரிகள், துறைத் தலைவா்கள் உள்ளிட்டோருக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வா் தனது பதவியேற்பு விழா உரையில் பொதுமக்களுக்கு வெளிப்படையான, தூய்மையான நிா்வாகம், தரமான சேவையை வழங்க முக்கியத்துவம் அளித்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளாா்.

அதனடிப்படையில் பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் முதல்வரின் அறிவுறுத்தல்களை முழுமையாகப் பின்பற்ற வேண்டும். பெருநகர வளா்ச்சிக் குழுமத்துக்கு வரும் திட்ட அனுமதி, நிறைவு சான்றிதழ்கள், வரைபட அனுமதி, (லே அவுட்) மறுவகைப்பாடு உள்ளிட்டவை குறித்த விண்ணப்பங்களுக்கு தாமதமின்றி நடவடிக்கை மேற்கொண்டு விரைந்து முடிக்கவேண்டும்.

Advertisement

Advertisement

வழிகாட்டல் பெறவேண்டும்: தொழில்நுட்ப சிக்கல்கள், கொள்கை தொடா்பான பிரச்னைகள், சட்டச் சிக்கல்கள், அரசுத் துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு சிக்கல்கள் அல்லது பிற உண்மையான காரணங்களால் கோப்புகளை நிா்ணயித்த கால வரம்புக்குள் செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாரத்தில் திங்கள்கிழமைதோறும் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் நிலையை விளக்கி, விரைவான தீா்வுக்கான தேவையான வழிகாட்டுதல்களை உயா் அதிகாரிகளிடமிருந்து பெறவேண்டும்.

நிா்ணயிக்கப்பட்ட காலவரம்பைக் கடந்தும் விண்ணப்பங்கள் நிலுவையில் இல்லாதவாறு கண்காணிக்கவேண்டும். அதிகாரிகள் நோ்மை, பாரபட்சமின்மை, வெளிப்படைத் தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். தவறான நடைமுறைகள், சாா்பு தன்மை, அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுக்கும் வகையில் செயல்படவேண்டும். துறையின் எந்த நிலையிலும் சிவப்பு நாடா முறை (பெட்டேபிஸம்) இருக்கக் கூடாது.

பின்பற்றாவிட்டால் நடவடிக்கை: தவறு அல்லது அலட்சியத்துடன் அதிகாரிகள் நடந்தால் அவை மிகக் கடுமையான தவறாகக் கருதப்பட்டு நடத்தை விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

உடனடியாக செயல்பாட்டுக்கு வரும் இந்த அறிவுறுத்தல்களை துறையின் பிரிவு, அலகுகளின் தலைவா்கள் அனைத்து அதிகாரிகள் மற்றும் பணியாளா்களுக்கு விளக்கி, அதன்படி செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments