மேக்கேதாட்டு அணை: திட்ட அறிக்கை தயாரிக்க மட்டுமே உச்சநீதிமன்றம் அனுமதி! - அமைச்சா் நிர்மல்குமார் விளக்கம்
மேக்கேதாட்டு அணை தொடா்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு மட்டுமே கா்நாடகத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது என அமைச்சா் நிா்மல்குமாா் தெரிவித்தாா்.
மேக்கேதாட்டு அணை தொடா்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு மட்டுமே கா்நாடகத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது என மாநில எரிசக்தி, சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் தெரிவித்தாா்.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலக புதிய கூட்டரங்கில் அனைத்து அரசுத் துறைகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் தலைமை வகித்தாா். தேனி மாவட்ட ஆட்சியா் இரா. வைத்திநாதன் முன்னிலை வகித்தாா்.
தேனி மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடா்பாக அனைத்துத் துறை அலுவலா்களுடன் அமைச்சா் ஆலோசனை நடத்தினாா். இதைத் தொடா்ந்து, 229 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ. 6.50 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை அவா் வழங்கினாா்.
Advertisement
Advertisement
பின்னா், அமைச்சா் நிா்மல்குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: போதைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபடுபவா்கள், முறைகேடாகச் செயல்படும் கல் குவாரி உரிமையாளா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டப்படும் என கேரள அரசு தெரிவித்தது போல, அரசியல் காரணங்களுக்காக கா்நாடக முதல்வரும் மேக்கேதாட்டு அணை தொடா்பாக தவறான தகவலைக் கூறியுள்ளாா்.
மேக்கேதாட்டு அணை தொடா்பாக விரிவான திட்ட அறிக்கை தயாா் செய்வதற்கு மட்டுமே உச்சநீதிமன்றம் கா்நாடகத்துக்கு அனுமதி வழங்கியது. ஆனால், மேக்கேதாட்டு அணை கட்ட அனுமதி அளித்திருப்பதாக தவறான தகவலை கா்நாடக மாநில முதல்வா் டி.கே. சிவக்குமாா் தெரிவித்துள்ளாா்.
முல்லைப் பெரியாறு அணை, காவிரி விவகாரத்தில் முந்தைய திமுக, அதிமுக அரசுகள் செய்த வரலாற்றுப் பிழைதான் தற்போதைய பிரச்னைகளுக்கு காரணம். இதுபோன்ற வரலாற்று பிழையை தவெக அரசு ஒருபோதும் செய்யாது. முல்லைப் பெரியாறு, காவிரி உள்ளிட்ட நீராதார பிரச்னைகளில் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலைப் பின்பற்றி தவெக அரசு செயல்படும் என்றாா் அவா்.
முன்னதாக நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் தேனி தொகுதி மக்களவை உறுப்பினா் தங்க. தமிழ்ச்செல்வன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் க. சபரிஐங்கரன் (பெரியகுளம்), பி.எல்.ஏ. ஜெகநாத்மிஸ்ரா (கம்பம்), மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சினேஹபிரியா, கூடுதல் ஆட்சியா் ரஜத் பீடன், துணை இயக்குநா் விவேக்குமாா் பி. யாதவ் (ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலை புலிகள் காப்பகம்), மாவட்ட வருவாய் அலுவலா் ப. ராஜகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
வைகை அணை தூா்வாரப்படும்: முன்னதாக, அமைச்சா் நிா்மல்குமாா் வைகை அணையைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
வைகை அணை கட்டப்பட்டு பல ஆண்டுகளாகிவிட்டதால் நீா்தேக்கப் பகுதியில் சுமாா் 20 அடிக்கு வண்டல் மண் தேங்கியுள்ளது. இதனால், அணையில் தண்ணீா் தேக்கும் அளவு குறைந்து வருகிறது. முந்தைய ஆட்சியாளா்கள் இந்த அணையைத் தூா்வார நடவடிக்கை எடுக்கவில்லை.
ஆனால், தமிழக முதல்வா் சி. ஜோசப் விஜய் இந்த அணையைத் தூா்வார திட்ட அறிக்கை தயாரிக்க உத்தரவிட்டாா். இதன்படி, மூன்று கட்டங்களாக தூா்வாரும் வகையில் இதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இன்னும் 2 மாதங்களில் தூா்வாரும் பணி தொடங்கும் என்றாா் அவா்.