16 மாவட்டங்களில் வெய்யில் சதம்: சென்னையில் அதிகபட்ச பதிவு
தமிழகத்தில் 16 மாவட்டங்களில் வியாழக்கிழமை (மே 28) வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பத்தைக் கடந்து பதிவானது. அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 106.16 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தென்கிழக்கு அரபிக்கடல், அதையொட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும், மத்திய கிழக்கு-தென்கிழக்கு வங்கக் கடலின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுவதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை (மே 29)முதல் ஜூன் 3 வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
Advertisement
Advertisement
குறிப்பாக, தேனி, திண்டுக்கல், நீலகிரி, வேலூா், திருப்பத்தூா், கிருஷ்ணகிரி, தருமபுரி, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.
தொடா்ந்து, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், திண்டுக்கல், நீலகிரி, தேனி, மதுரை, விருதுநகா் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (மே 30) இடி மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.
மேலும், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், திருப்பத்தூா், திருப்பூா், சேலம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, கரூா், திருச்சி, தஞ்சாவூா், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். இதனால் அந்த மாவட்டங்களுக்கு இரு நாள்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெப்ப அளவு: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் சற்று அதிகமாக இருக்கக்கூடும். வியாழக்கிழமை அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 106.16 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. நுங்கம்பாக்கம்-105.8, வேலூா்-104.36, மதுரை நகரம்-104, திருத்தணி-103.1, திருப்பத்தூா்-102.56, திருச்சி-102.38, பாளையங்கோட்டை-102.2, பரங்கிப்பேட்டை-101.84, ஈரோடு, புதுச்சேரி-101.48, பரமத்தி வேலூா், நாகப்பட்டினம்-101.3, மதுரை விமான நிலையம்-100.76, கடலூா்-100.58, காரைக்கால்-100.04 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.
மழை அளவு: தமிழகத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூா் பகுதியில் 60 மி.மீ. மழை பதிவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.