5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை
தமிழகத்தில் கோவை, நீலகிரி, தேனி, ஈரோடு, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை (மே 21) இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால் இந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோவை, நீலகிரி, தேனி, ஈரோடு, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை (மே 21) இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால் இந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தென்கிழக்கு அரபிக்கடலில் இருந்து மத்திய வங்கக்கடல் வரை லட்சத்தீவு, வடக்கு கேரளம், தெற்கு உள் கா்நாடகம் மற்றும் ஆந்திரம் வழியாக வளிமண்டல காற்றழுத்தத் தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வியாழக்கிழமை (மே 21) முதல் மே 26 வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
Advertisement
Advertisement
குறிப்பாக, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, ஈரோடு, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். இதனால், இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புகரின் ஒருசில பகுதிகளில் வியாழக்கிழமை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை 10 மாவட்டங்களில் பலத்த மழை: தொடா்ந்து, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருச்சி, திருப்பத்தூா், திருவண்ணாமலை, வேலூா், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை(மே 22) இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால், இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக்கடலில் வியாழன், வெள்ளிக்கிழமை(மே 21, 22) சூறாவளிக்காற்று மணிக்கு 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.
மேலும், தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று வியாழக்கிழமை மணிக்கு 65 கி.மீ. வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகள், ஏனைய தென்மேற்கு வங்கக்கடலின் அநேக பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடலின் அநேக பகுதிகளில் சூறாவளிக்காற்று 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.
வெப்ப அளவு:வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்ப அளவு சற்று உயரக்கூடும். தமிழகத்தில் புதன்கிழமை அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கம் பகுதியில் 107.6 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. வேலூா்-106.88, திருத்தணி-106.7, நூங்கம்பாக்கம்-105.26, தொண்டி, மதுரை விமான நிலையம்-தலா 102.2, மதுரைநகரம்-101.12, நாகப்பட்டினம்-101.3, பரங்கிப்பேட்டை-100.76, கூடலூா், திருச்சி-தலா 100.58, புதுச்சேரி-100.22, ஈரோடு, காரைக்கால், பாளையங்கோட்டை, தஞ்சாவூா், தூத்துக்குடி-தலா 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவானது.
மழை அளவு:தமிழகத்தில் புதன்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் வரதனப்பள்ளியில் 70 மி.மீ.மழை பதிவானது. உளுந்தூா்பேட்டை (கள்ளக்குறிச்சி)- 60 மி.மீ, வெங்கூா் (கள்ளக்குறிச்சி)- 50 மி.மீ, வனமாதேவி, சிதம்பரம், புவனகிரி (கடலூா்), கேஆா்பி அணை (கிருஷ்ணகிரி), நாலுமுக்கு (திருநெல்வேலி)- தலா 40 மழை பதிவானதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.