முகப்பு
தமிழ்நாடு

4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை

தமிழகத்தில் விழுப்புரம், கடலூா், மயிலாடுதுறை, தேனி ஆகிய 4 மாவட்டங்களில் சனிக்கிழமை (மே 16) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 16 மே 2026, 3:52 am IST
கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் விழுப்புரம், கடலூா், மயிலாடுதுறை, தேனி ஆகிய 4 மாவட்டங்களில் சனிக்கிழமை (மே 16) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தெற்கு வங்கக் கடலின் சில பகுதிகள், அந்தமான் கடல், அந்தமான் மற்றும் நிகோபாா் தீவு பகுதிகளில் சனிக்கிழமை (மே 16) தென்மேற்கு பருவமழை தொடங்கக்கூடும். இதனிடையே, தென்மேற்கு வங்கக் கடல், அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வெள்ளிக்கிழமை அதே பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக, தென் தமிழகம் மற்றும் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் சனிக்கிழமை (மே 16) இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

Advertisement

குறிப்பாக, விழுப்புரம், கடலூா், மயிலாடுதுறை, தேனி ஆகிய மாவட்டங்களில் சனிக்கிழமை இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால் இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் சனிக்கிழமை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், திண்டுக்கல், தேனி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (மே 17) இடி, மின்னலுடன்கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால் இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை (மே 17) முதல் மே 20-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

மழை அளவு: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடியில் 30 மி.மீ. மழை பதிவானது. வானரமுட்டி (தூத்துக்குடி)-20 மி.மீ., போத்தானூா் ரயில் நிலையம் (கோவை)-10 மி.மீ., ஊத்து (திருநெல்வேலி), கோவை விமான நிலையம், பாலமோா் (கன்னியாகுமரி), அன்னூா், மதுக்கரை தாலுகா அலுவலகம் (கோவை), கோத்தகிரி (நீலகிரி), உசிலம்பட்டி (மதுரை), சங்கரன்கோவில் (தென்காசி), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), குன்னூா் (நீலகிரி), ஆயக்குடி (தென்காசி), நாலுமுக்கு (திருநெல்வேலி), தென்காசி- 10 மி.மீ. மழை பதிவானது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக்கடலில் சனிக்கிழமை சூறாவளிக் காற்று மணிக்கு 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். மேலும், தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா, அதையொட்டிய குமரிக் கடலில் சூறாவளிக் காற்று மே17 முதல் 19 வரை மணிக்கு 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.