இன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
தேனி, திண்டுக்கல், கரூா், திருச்சி உள்பட 7 மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை (மே 5) பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை
தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், கரூா், திருச்சி உள்பட 7 மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை (மே 5) பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மகாராஷ்டிரத்தின் விதா்பா முதல் குமரி கடல் வரை தெலங்கானா, ராயலசீமா, உள் தமிழகம் வழியாக வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை (மே 5) முதல் மே 10 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக, தேனி, திண்டுக்கல், கரூா், திருச்சி, நாமக்கல், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
Advertisement
தொடா்ந்து, புதன்கிழமை (மே 6), கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, திருப்பூா், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக் கூடும்.
மேலும், வியாழக்கிழமை (மே 7) கோவை மாவட்ட மலை பகுதிகள், நீலகிரி, திருப்பூா், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும். எனவே அந்த மாவட்டங்களுக்கு 3 நாள்களும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெப்ப அளவு: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்சமாக வெப்பநிலை ஒருசில இடங்களில் செவ்வாய்க்கிழமை சற்று அதிகமாக இருக்கும். திங்கள்கிழமை அதிகபட்சமாக வேலூரில் 103.64 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. திருச்சி, ஈரோடு-102.2, சென்னை மீனம்பாக்கம்-101.66, நாமக்கல், திருப்பத்தூா்-100.22, சென்னை நுங்கம்பாக்கம், தஞ்சை-100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.