காஞ்சிபுரம் பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
காஞ்சிபுரம் மாவட்டம் பாலேஸ்வரம் செயின்ட் ஜோசப் கருணை இல்லத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட முதியவர்களை அதே இல்லத்தில் திரும்ப விட்டுச் செல்லவும், மாவட்ட சமூகநல அதிகாரி
காஞ்சிபுரம் மாவட்டம் பாலேஸ்வரம் செயின்ட் ஜோசப் கருணை இல்லத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட முதியவர்களை அதே இல்லத்தில் திரும்ப விட்டுச் செல்லவும், மாவட்ட சமூகநல அதிகாரி புதன்கிழமை (மார்ச் 28) நேரில் ஆஜராகவும் சென்னைஉயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, செயின்ட் ஜோசப் கருணை இல்லத்தின் நிர்வாக இயக்குநர் தாமஸ் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், 'காஞ்சிபுரம் மாவட்டம் பாலேஸ்வரத்தில் உள்ள எங்களது கருணை இல்லத்தில் தங்கியிருந்த முதியவர்கள் மர்மமான முறையில் இறப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதையடுத்து எங்களது இல்லத்தில் தங்கியிருந்த 294 முதியவர்களை வருவாய் துறை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். அவர்கள் தற்போது எங்கு உள்ளனர் என்பது தெரியவில்லை. எனவே, இல்லத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட முதியவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உத்தரவிட வேண்டும்' என கோரியிருந்தார்.
12 பேர் இறப்பு: இந்த வழக்கு நீதிபதிகள் சி.டி.செல்வம், என்.சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், 'கருணை இல்லத்தில் இருந்து 294 முதியவர்களை சமூகநலத் துறை அதிகாரிகள் அழைத்துச் சென்றுள்ளனர்.
இல்லத்தின் நிர்வாகி மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். உள்ளூர் அரசியல் பிரமுகர் மற்றும் ஒரு கட்டட ஒப்பந்ததாரரின் சுயலாபத்துக்காக கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் நல்ல முறையில் செயல்பட்டு வரும் இல்லத்துக்கு எதிராக தேவையற்ற பிரச்னையை கிளப்பிவிட்டுள்ளனர்.
இதனைச் சட்ட ரீதியாக சந்திக்கத் தயாராக உள்ளோம். இந்த விவகாரத்தில் அதிகாரிகள் தீர்க்கமாக விசாரிக்காமல், உரிய அனுமதி பெறாமலும் முதியவர்களை அலைக்கழித்துள்ளனர். மேலும் இல்லத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டவர்களில் பலர் முறையான பராமரிப்பின்றி இறந்துள்ளனர்' என வாதிட்டார். அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், 'கருணை இல்லத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டவர்களில் இதுவரை 12 பேர் இறந்துவிட்டதாகவும், மற்றவர்கள் பல்வேறு இல்லங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர' எனத் தெரிவித்தார்.
மீண்டும் அதே இல்லத்துக்கு: இதையடுத்து நீதிபதிகள், 'இறந்த 12 பேரின் உடல் முறைப்படி பிரேத பரிசோதனை செய்யப்பட்டதா, அப்படி செய்திருந்தால் அந்த அறிக்கை எங்கே, முதியவர்கள் விவகாரத்தில் கருணை இல்லம் செய்தது குற்றம் என்றால், அரசு செய்தது சரியா எனக் கேள்வி எழுப்பினர்.
மேலும் தற்போது உயிரோடு உள்ள 282 முதியவர்களையும் செவ்வாய்க்கிழமைக்குள் (மார்ச் 27) பாலேஸ்வரம் செயின்ட் ஜோசப் கருணை இல்ல நிர்வாகிகளிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும் முதியவர்கள் 12 பேர் இறந்தது தொடர்பாக மாவட்ட சமூகநலத் துறை அதிகாரி புதன்கிழமை (மார்ச் 28) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்' எனஉத்தரவிட்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.