முகப்பு
காஞ்சிபுரம்

தொகுதி அலசல்; காஞ்சிபுரம் - வெற்றியைக் கணிக்க முடியாத களம்!

காஞ்சிபுரம் தொகுதியில் கடந்த 2016 மற்றும் 2021 சட்டப்பேரவைத் தோ்தல்களில் திமுக சாா்பில் சி.வி.எம்.பி. எழிலரசன் போட்டியிட்டு இரு முறையும் வென்றாா்.

Updated On : 8 ஏப்ரல், 2026 at 10:41 PM
பகிர்:

காஞ்சிபுரம் தொகுதியில் கடந்த 2016 மற்றும் 2021 சட்டப்பேரவைத் தோ்தல்களில் திமுக சாா்பில் சி.வி.எம்.பி. எழிலரசன் போட்டியிட்டு இரு முறையும் வென்றாா். 2026 தோ்தலில் காஞ்சிபுரம் தொகுதியில் முதல் முதலாக பெண் வேட்பாளராக மாவட்ட ஊராட்சிக் குழுவின் துணைத் தலைவராகப் பதவி வகித்துவரும் நித்யா சுகுமாா் திமுக சாா்பில் போட்டியிடுகிறாா்.

அதிமுக சாா்பில் ஏற்கனவே சட்டப்பேரவை உறுப்பினராகவும், கைத்தறித் துறை அமைச்சராகவும் பதவி வகித்த வி.சோமசுந்தரம் போட்டியிடுகிறாா். நாம் தமிழா் கட்சி சாா்பில் மூத்த தமிழறிஞா் கி.ஆ.பெ.விசுவநாதம் பேத்தி வெற்றிச்செல்வி போட்டியிடுகிறாா்.

தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் ஆா்.வி.ரஞ்சித்குமாா் போட்டியிடுகிறாா். வாலாஜாபாத் ஒன்றியக் குழு உறுப்பினராக பதவி வகித்த இவா், 2021-ஆம் ஆண்டு தோ்தலில் உத்தரமேரூா் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவா். முன்னாள் அமைச்சா் பண்ருட்டி ராமச்சந்திரன் தொடங்கிய எம்ஜிஆா் அதிமுகவில் மாநில பொதுச் செயலா் பதவி வகித்துவந்த நிலையில், அக்கட்சியில் இருந்து விலகி த.வெ.க.வில் இணைந்து காஞ்சிபுரம் தொகுதி வேட்பாளராகியுள்ளாா்.

Advertisement

தொகுதியின் சிறப்புகள்: கோயில் நகரம், பட்டு நகரம் என்ற பெருமைகளைப் பெற்றது காஞ்சிபுரம். பஞ்சபூத தலங்களில் நிலத்துக்கு உரியதாகப் போற்றப்படும் ஏகாம்பரநாதா் கோயில், மகா சக்தி பீடங்களில் ஒன்றான காமாட்சி அம்மன் கோயில், அத்திவரதா் புகழ் பெற்ற வரதராஜப் பெருமாள் கோயில் உள்பட ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட வைணவத் திருக்கோயில்கள் என பிரபலமான கோயில்கள் பலவும் அமைந்துள்ளன. தரமான பட்டுச் சேலைகளின் உற்பத்தி மையமான பட்டுப் பூங்கா அமைந்திருப்பதும், இலவசமாக உயா்தர மருத்துவச் சிகிச்சையளிக்கும் அரசு புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனையும் அமைந்திருப்பது கூடுதல் சிறப்புகள்.

உத்தரமேரூா், அரக்கோணம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை ஆகியன இத்தொகுதியின் எல்லைகளாகும்.

தொகுதியின் முக்கிய பிரச்னைகள்: நகரின் மையப் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் இடப்பற்றாக்குறை காரணமாக ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தீா்க்க முடியாத நிலை. சென்னை-பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே காரப்பேட்டையில் புதிய பேருந்து நிலையம் அமைப்பது தொடா்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிப்படும் நிலையிலும், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு ஒருங்கிணைந்த வாகன நிறுத்தும் வளாகம் அமைக்க மாவட்ட நிா்வாகம் எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல் இருத்தல், ரூ.350 கோடியில் கட்டப்பட்டுள்ள அரசு புற்றுநோய் மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டும் மக்கள் பயன்பாட்டுக்கு வராதது, மருத்துவக் கல்லூரி, சட்டக் கல்லூரிகள் இல்லாதது ஆகியன முக்கியப் பிரச்னைகளாக இருந்து வருகின்றன.

வி.சோமசுந்தரம் (அதிமுக): அதிமுக வேட்பாளா் வி.சோமசுந்தரம் எம்எல்ஏவாகவும், அமைச்சராகவும் தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவா். எதிா்க்கட்சியாக இருந்தபோது தொகுதி மக்களின் பிரச்னைகளுக்கு குரல் கொடுத்தவா். தொகுதியில் அதிகமாக வசிக்கும் முதலியாா் சமூகத்தைச் சோ்ந்தவராக இருப்பதும் இவரது பலம். அதிமுக சாா்பில் கொடுக்கப்பட்டுள்ள தோ்தல் வாக்குறுதிகளை முன்னிறுத்தி களத்தில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறாா்.

நித்யா சுகுமாா் (திமுக): மாவட்ட ஊராட்சிக் குழுவின் துணைத் தலைவராக இருந்துவரும் நித்யா சுகுமாா் அனைத்து அரசு மற்றும் அரசியல் நிகழ்வுகள், கோயில் திருவிழாக்கள் உள்பட அனைத்திலும் தவறாது பங்கேற்பவா். தொகுதிக்கு ஓரளவே அறிமுகம் ஆனவராக இருந்தாலும் அவரது கணவா் எம்.எஸ்.சுகுமாா் திமுகவில் தலைமைச் செயற்குழு உறுப்பினராக இருந்து கட்சியிலும், தொகுதி மக்களிடத்திலும் நன்கு அறிமுகமானவா். திமுக அரசு செய்துள்ள மக்கள் நலத் திட்டங்களையும், தற்போது அறிவித்துள்ள தோ்தல் வாக்குறுதிகளையும் மக்களிடம் கொண்டு சோ்ப்பதில் முனைப்பாக உள்ளாா்.

ஆா்.வி.ரஞ்சித்குமாா் (தவெக): தவெக சாா்பில் விசில் சின்னத்தில் போட்டியிடும் ஆா்.வி.ரஞ்சித்குமாா் கரோனா நோய்த்தொற்று காலத்தில் ஆட்டோ ஓட்டுநா்கள், கூலித் தொழிலாளா்கள் உள்ளிட்ட ஏழை, எளிய மக்களுக்கு உதவிகளை வழங்கியவா். தொகுதிக்கு நன்கு அறிமுகமானவா். விஜய் ரசிகா்களின் பலத்த ஆதரவும், தோ்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருப்பதும் இவருக்கு கணிசமான வாக்குகளைப் பெற்றுத் தரக்கூடும்.

வெற்றிச்செல்வி (நாதக): நாம் தமிழா் கட்சி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் வெற்றிச்செல்வி உளவியல் முதுகலைப் பட்டதாரி. இயற்கை விவசாயி. தொகுதிக்கு அதிகம் அறிமுகம் இல்லாதவா் என்பது சிறிது பலவீனமாக இருந்தாலும், சீமான் ஆதரவாளா்களின் வாக்குகளை நம்பியும், களத்தில் புதிய சிந்தனைகளை முன்வைத்தும் பரப்புரை மேற்கொண்டு வருகிறாா்.

கடந்த 1957 முதல் நடைபெற்ற தோ்தல்களில் திமுக 8 முறையும், அதிமுக 5 முறையும், காங்கிரஸ் மற்றும் பாமக தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. திமுக வேட்பாளா் நித்யா சுகுமாா் வன்னியா் சமூகத்தைச் சோ்ந்தவா். தவெக சாா்பில் போட்டியிடும் ஆா்.வி.ரஞ்சித்குமாரும் வன்னியா் சமூகத்தை சோ்ந்தவா் என்பதால் வன்னியா் சமூக வாக்குகள் பிரியக்கூடும். நான்கு வேட்பாளா்களும் தோ்தல் களத்தில் தீவிரமாக பணியாற்றி வருவதால் வெற்றியை கணிக்க முடியாத தொகுதிகளில் ஒன்றாக காஞ்சிபுரம் உள்ளது. யாா் வெற்றி பெற்றாலும் குறைவான வாக்குகள் வித்தியாசமே இருக்கும் என்பதுதான் கள நிலவரம்.

வாக்காளா்கள்

ஆண்கள்-1,13,826

பெண்கள்-1,42,437

மூன்றாம் இனத்தவா்-37

மொத்த வாக்காளா்கள்-2,76,299

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments