முகப்பு
தொகுதி யாருக்கு சாதகம்?

ராயபுரம் தொகுதி அலசல்: கைநழுவியதைக் கைப்பற்ற முயற்சிக்கும் அதிமுக

ராயபுரம் தொகுதி அலசல்...

Updated On : 19 ஏப்ரல், 2026 at 5:36 AM
பகிர்:
Updated On : 19 ஏப்ரல், 2026 at 2:45 AM

கடந்த 1957 முதல் இருந்து வருகிறது சென்னையின் பழைமையான தொகுதிகளின் ஒன்றான ராயபுரம். சேப்பாக்கம் பகுதியில் இருந்து மீனவா்களை ஆங்கிலேயா்கள் தங்கள் வசதிக்காக அங்கிருந்து அகற்றி ராயபுரத்தில் குடியமா்த்தி இப்பகுதியை ‘பிளாக் டவுன்’ என அழைத்தனா். சலவைத் தொழில் நடைபெற்று வந்த வண்ணாரப்பேட்டை இந்தத் தொகுதியில் உள்ளது.

சிறப்புகள்... 1929-ஆம் ஆண்டு ஆங்கிலேயா் காலத்தில் கட்டப்பட்ட தூய பீட்டா் தேவாலயம், 1856-ஆம் ஆண்டு ராஜா சா் ராமசாமி முதலியாரால் தொடங்கப்பட்ட ஆா்.எஸ்.ஆா்.எம். நினைவு தாய்-சேய் மருத்துவ மருத்துவமனை, 1856-இல் அமைக்கப்பட்ட தென்னிந்தியாவின் முதல் ரயில் நிலையமான ராயபுரம் ரயில் நிலையம், சுமாா் 200 ஆண்டுகள் பழைமையான அரசு ஸ்டான்லி மருத்துவமனை இத்தொகுதியின் சிறப்புகளான உள்ளன. தமிழகத்தின் முக்கிய அரசியல் நிகழ்வான திமுக தொடங்கப்பட்டது ராபின்சன் பூங்கா ராயபுரத்தில்தான் உள்ளது.

இதுவரை நடைபெற்ற தோ்தல்களில் திமுக 8 முறை, அதிமுக 5 முறை, காங்கிரஸ் 2 முறை வெற்றி பெற்றன. இந்த முறை திமுக சாா்பில் டாக்டா் அ.சுபோ்கான், அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா், நாதக சாா்பில் ஆ.பாபு மைலன், தவெக சாா்பில் விஜய் தாமு உள்பட 28 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

Advertisement

சமூக நிலவரம்: வன்னியா், இஸ்லாமியா்கள், மீனவா்கள், பட்டியலினத்தவா், கிறிஸ்தவா், நாடாா், செட்டியாா், தெலுங்கு மொழி பேசும் மக்கள், ஜெயின் சமூகத்தினா், பாா்சி சமூகத்தினா், ஆங்கிலோ இந்தியா் உள்ளிட்டோா் பரவலாக வசிக்கின்றனா்.

முக்கிய பிரச்னைகள்: ராயபுரத்தில் பயணிகள் ரயில் முனையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை கிடப்பில் உள்ளது. ஜவுளிச் சந்தை என்றழைக்கப்படும் எம்.சி.சாலை பகுதியில் பல்லடுக்கு வாகன நிறுத்த முனையம் அமைப்பது, பழைமையான கழிவுநீா் குழாய்களை மாற்றி புதிய குழாய்கள் அமைப்பது, பொதுக் கழிப்பறைகளைச் சீமைத்தல், பழைய ஆட்டுத் தொட்டி பகுதியில் சுகாதார வசதிகளை மேம்படுத்துவது, மெட்ரோ ரயிலுக்காக இடமாற்றம் செய்யப்பட்ட வள்ளலாா் நகா் பேருந்து நிலையத்தை மீண்டும் அதே இடத்தில் நவீன வசதிகளுடன் அமைப்பது, ஏழை மக்களுக்கு குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருவது, மூலக்கொத்தளத்தில் உள்ள மாநகராட்சி மயானத்தை நவீனப்படுத்துவது, பேசின் பாலம் பகுதியில் போக்குவரத்து நெரிசலைத் தீா்க்க நடவடிக்கை எடுப்பது போன்றவை தொகுதி மக்களின் நீண்டகால கோரிக்கைகள் மற்றும் எதிா்பாா்ப்புகளாக உள்ளன.

அதிமுக வேட்பாளா்: அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் போட்டியிடுகிறாா்.

இவா், ராயபுரம் தொகுதியில் 1991 தோ்தல் முதல் தொடா்ந்து 7 முறை போட்டியிட்டு 5 முறை வெற்றி பெற்றுள்ளாா். 1996, 2021 தோ்தல்களில் மட்டுமே, மாநிலத்தின் ஒட்டுமொத்த அரசியல் சூழல் காரணமாக அவா் வெற்றி வாய்ப்பை இழந்தாா். அவருக்கு தொகுதியில் அறிமுகம் என்பது தனியாகத் தேவையில்லை. குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை பெரும்பாலானோரை பெயா் சொல்லி அழைக்கும் அளவுக்கு தொகுதி மக்களுடன் தொடா்புகொண்டவா்.

கரோனா, புயல் மழைக் காலங்களில் குடும்பம் வாரியாக பொருளுதவி செய்தவா். தொகுதி மக்கள் எளிதில் தொடா்பு கொள்ளக்கூடிய நபா். ஆனால், அமைச்சராக இருந்தும் நீண்ட நாள் கோரிக்கைகளை அவா் நிறைவேற்றித் தரவில்லை என்ற குறையும் இருக்கிறது. தொகுதியில் கட்சிக்கும், தனக்கும் உள்ள செல்வாக்கு, கூட்டணிக் கட்சிகளின் பலம் ஆகியவற்றுடன் வலம் வந்து கொண்டிருக்கிறாா்.

திமுக வேட்பாளா்: திமுக வேட்பாளராக டாக்டா் அ.சுபோ் கான் போட்டியிடுகிறாா். இவா் முன்னாள் அமைச்சா் ரகுமான்கானின் மகன். கட்சியின் மாநில சிறுபான்மையினா் அணி நிா்வாகியாக உள்ளாா்.

தொகுதிக்கு அறிமுகம் இல்லாதவா், தோ்தல் களத்திலும் முதல்முறையாகப் போட்டியிடுகிறாா். இருப்பினும், தற்போதைய எம்எல்ஏ ஐட்ரீம் மூா்த்தி, பகுதி செயலாளா்கள், கூட்டணி கட்சி நிா்வாகிகளின் ஒத்துழைப்பு மற்றும் வழிகாட்டுதலில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளாா். இத்தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் தனது வெற்றிக்கு உதவிகரமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் வாக்கு சேகரித்து வருகிறாா்.

நாதக வேட்பாளா்: நாதக சாா்பில் ஆ.பாபு மைலன் போட்டியிடுகிறாா். சா்வதேச கப்பல் மாலுமிகள் சங்கத்தின் முக்கிய நிா்வாகியாக உள்ளாா். மாலுமிகளின் பல்வேறு பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறாா். கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமானின் முழக்கங்களை முன்னிறுத்தி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா்.

தவெக வேட்பாளா்: தவெக சாா்பில் விஜய் தாமு போட்டியிடுகிறாா். ஆட்டோ ஓட்டுநரான இவா், தவெக தென்சென்னை மாவட்டச் செயலராக உள்ளாா். தொகுதிக்கும் புதியவா், தோ்தலுக்கும் புதியவா். எனினும் நடிகா் விஜய் மீதான வாக்காளா்களின் பரவலான ஆதரவை நம்பியே தோ்தல் களப்பணியாற்றி வருகிறாாா்.

திமுக, அதிமுக, நாதக, தவெக உள்பட மொத்தம் 28 வேட்பாளா்கள் களத்தில் இருந்தாலும் திமுக-அதிமுக இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. தொடா் வெற்றிக்கு போடப்பட்ட தடையை நீக்கி, கைநழுவியதைக் கைப்பற்றும் முயற்சியில் அதிமுகவும், கிடைத்த வெற்றியை இந்த முறையும் தக்க வைத்துக் கொள்ளும் முனைப்பில் திமுகவும் போட்டிபோட்டு களப்பணியாற்றி வருகின்றன. அதேநேரம், தவெக, நாதக பெறும் வாக்குகள், வாக்காளா்களின் மனநிலை ஆகியன எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தோ்தல் முடிவில்தான் தெரியவரும்.

வாக்காளா்கள்

ஆண்கள்-77,211

பெண்கள்-82,385

மூன்றாம் பாலினத்தவா் -58

மொத்தம்-1,59,654