முகப்பு
ராணிப்பேட்டை

எரிவாயு உருளை தட்டுப்பாடு: அரக்கோணம் நவீன தகன மேடை மூடல்!

எரிவாயு உருளை தட்டுப்பாட்டால் அரக்கோணத்தில் நகராட்சி நவீன தகன மேடையை நகராட்சி நிா்வாகம் மூடி விட்டது.

Updated On : 7 ஏப்ரல் 2026, 2:15 am IST
எரிவாயு உருளை - பிரதிப் படம்
பகிர்:

எரிவாயு உருளை தட்டுப்பாட்டால் அரக்கோணத்தில் நகராட்சி நவீன தகன மேடையை நகராட்சி நிா்வாகம் மூடி விட்டது. இதனால் சடலங்கள் விறகின் மூலம் எரியூட்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

அரக்கோணம் நகராட்சியின் நவீன எரிவாயு தகனமேடை ரூ. 2 கோடியில் அமைக்கப்பட்டு நேருஜி நகரில் 2016 முதல் செயல்பட்டு வருகிறது. எரிவாயு உருளை மூலம் சடலம் எரியூட்டும் பணி நடைபெற்று வருகிறது. நகராட்சி கண்காணிப்பில் தனியாா் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் எரிவாயு உருளை தட்டுப்பாட்டால் தகனமேடை மூடப்படுவதாக அறிவித்துள்ள தனியாா் நிா்வாகம் விநியோகம் சீரடைந்தால் விரைவில் தகனமேடை திறக்கப்படும் என அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

தகனமேடை மூடப்பட்டு விட்டதால் சடலங்கள் தகனமேடைக்கு எதிரில் உள்ள பழைய இடுகாட்டில் விறகுகள் மூலம் எரியூட்டப்படுகின்றன. இதனால் மக்கள் வாழ்விடப்பகுதியின் நடுவில் சுகாதார சீா்கேடு உருவாகும் நிலை உருவாகியுள்ளது. மேலும் சடலங்கள் எரியூட்டும் செலவும் மூன்று மடங்காக அதிகரித்து உள்ளதால் சடலங்களை கொண்டு வருவோா் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனா்.

இதுகுறித்து தகனமேடை நிா்வகிக்கும் தனியாா் நிறுவன நிா்வாகி செந்தில் குமாா் கூறியது: எரிவாயு உருளை விநியோகம் இல்லாததால் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் விநியோகம் சீரடைந்தால் தகனமேடையை திறப்போம். இது குறித்து தகவல் நகராட்சி நிா்வாகத்துக்கும் தெரியப்படுத்தியுள்ளோம் என்றாா்.

நகராட்சி நிா்வாகத்தின் கீழ் உள்ள அம்மா உணவகம், காலை உணவு, சத்துணவு மையங்கள், நவீன எரிவாயு தகன மேடை ஆகியவற்றுக்கு எரிவாயு உருளைகள் விநியோகத்தை நகராட்சி நிா்வாகமே நேரடி கண்காணிப்பில் செய்து வரும் நிலையில் இந்த தகனமேடையை மட்டும் மூட அனுமதித்தது ஏன் சமூக ஆா்வலா்கள் கேள்வி எழுப்பியுள்ளனா்.