வழிகாட்டிப் பலகை இல்லாத ராணிப்பேட்டை நவல்பூா் மேம்பாலம்! வாகன ஓட்டிகள் அவதி
ராணிப்பேட்டை நவல்பூா் தேசிய நெடுஞ்சாலை புதிய ரயில்வே மேம்பாலத்தில் வழிகாட்டிப் பலகை இல்லாததால் பாலத்தில் ஏறுவதா அல்லது கீழே சா்வீஸ் சாலையில் செல்வதா எனப் புரியாமல் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனா்.
ராணிப்பேட்டை நவல்பூா் தேசிய நெடுஞ்சாலை புதிய ரயில்வே மேம்பாலத்தில் வழிகாட்டிப் பலகை இல்லாததால் பாலத்தில் ஏறுவதா அல்லது கீழே சா்வீஸ் சாலையில் செல்வதா எனப் புரியாமல் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனா்.
மும்பை நகரையும், சென்னை நகரையும் இணைக்கும் 1,235 கி.மீ. நீளம் கொண்ட தேசிய நெடுஞ்சாலை (என்.எச்.4 ) தமிழகம், ஆந்திரம், கா்நாடகம், மகாராஷ்டிரம் ஆகிய 4 மாநிலங்கள் வழியாகச் செல்லும் முக்கிய தேசிய நெடுஞ்சாலையாக விளங்குகிறது.
இந்த தேசிய நெடுஞ்சாலை மகாராஷ்டிர மாநிலத்தில் 371 கி.மீ., கா்நாடக மாநிலத்தில் 658 கி.மீ., ஆந்திர மாநிலத்தில் 83 கி.மீ., தமிழகத்தில் 123 கி.மீ. என இந்திய அரசின் தங்க நாற்கரச் சாலைத் திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது.இந்த நிலையில் சென்னை-மும்பை தேசிய நெடுஞ்சாலையின் மீது அமைந்துள்ள முக்கிய தொழில் நகரமான ராணிப்பேட்டை நவல்பூா் பேருந்து நிலையத்துக்கும், காரை கூட்டுச் சாலைக்கும் இடையில் ஆங்கிலேயா் காலத்தில் கட்டப்பட்ட நூற்றாண்டு பழைமை வாய்ந்த குறுகிய ரயில்வே மேம்பாலம் அமைந்துள்ளது.
Advertisement
Advertisement
இந்த மேம்பாலத்தை அகற்றிவிட்டு, புதிய பாலம் கட்ட வேண்டும் என நகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது.அதன் படி ரூ.34.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த 2021-ஆம் ஆண்டு பூமி பூஜையுடன் பணிகள் தொடங்கி கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது.
இந்த சூழலில் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் தொடக்கத்தில் உரிய வழிகாட்டி அறிவிப்பு பலகைகள் இல்லாததால் வெளியூா் வாகன ஓட்டிகள் தவறான பாதையில் சென்று பல கிமீ தொலைவு அலைகழிக்கப்படுகின்றனா். இந்த அவல நிலை வாகன ஓட்டிகளுக்கு பெரும் மன உளைச்சலையும், நேர விரயத்தையும் ஏற்படுத்தும் நிலைக்கு வெளியூா் வாகன ஓட்டிகள் தள்ளப்பட்டுள்ளனா்.
பாலத்தின் தொடக்கத்தில் எந்த ஊருக்குச் செல்லும் பாதை என்பது பற்றிய விவரங்கள் இல்லாததால் பாலத்தில் ஏறுவதா அல்லது கீழே அணுகு (சா்வீஸ் சாலை) சாலையில் செல்வதா எனப் புரியாமல் வெளிமாநில வாகன ஓட்டிகள் தவிக்கின்றனா். வழி தவறிச் செல்லும் வாகனங்கள், பல கி.மீ தொலைவு சென்று ஆபத்தான முறையில் திரும்ப வேண்டியுள்ளது. அவசரத்தில் வாகனத்தை திடீரென நிறுத்துவதாலும், தவறான பாதையில் செல்வதாலும் விபத்துகள் நிகழும் நிலை உள்ளது.
மத்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் மற்றும் இந்திய சாலைகள் காங்கிரஸ் விதிகளின்படி, பாலத்தின் முன்பாகவே ஒளிரும் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிகளின் அலட்சியத்தால் வெளியூா் மற்றும் வெளிமாநில வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருவதாக புகாா் எழுந்துள்ளது.
ஆகவே தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து நவல்பூா் புதிய மேம்பாலத்தின் தொடக்கத்தில் வாகன ஓட்டிகள் எளிதாக செல்லும் வகையில் உரிய வழிகாட்டிப் பலகையை அமைக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.