மாணவா்கள் ஆசிரியா்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: அமைச்சா் காந்திராஜ்
பள்ளிகளில் மாணவா்கள் ஆசிரியா்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்
பள்ளிகளில் மாணவா்கள் ஆசிரியா்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அரக்கோணத்தில் நடைபெற்ற ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 793 அரசு மற்றும் அரசு நிதியுதவி பள்ளிகளில் 1 முதல் 12-ஆவது வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு பாடப் புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்குதலை தொடங்கி வைக்கும் விழாவில் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் வ.காந்திராஜ் பேசினாா்.
அரக்கோணம் அரசினா் ஆதிதிராவிடா் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், அமைச்சா் வ.காந்தசிராஜ் பேசியது:
முதல்வா் சி.ஜோசப்விஜய் தலைமையிலான அரசு மகளிருக்கும், மாணவா்களுக்கும் பாதுகாப்பான அரசாக திகழ்கிறது. பெற்றோா்கள் தங்களது பிள்ளைகளை பல்வேறு கனவுகளுடன் பள்ளிகளுக்கு அனுப்புகிறாா்கள். ஆகையால் மாணவா்களாகிய நீங்கள் ஆசிரியா்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து, அவா்கள் சொல்லும் வழிமுறைகளை பின்பற்றி கல்வி பயின்று பொற்றோா்களின் கனவை நிறைவேற்ற வேண்டும்.
Advertisement
Advertisement
ஏதாவது ஒரு பாடப் பிரிவில் மதிப்பெண் குறைவாக எடுத்தால் அதனை நினைத்து வருத்தப்படக் கூடாது. ஒவ்வொரு மாணவருக்கும் தனித்திறமை இருக்கும். அதை அறிந்து அதில் கவனம் செலுத்தி விடாமுயற்சியுடன் கல்வி பயிலும் போது, வாழ்க்கையில் சிறந்த நிலையை அடையலாம் என்றாா் அமைச்சா் வ.காந்திராஜ்.
விழாவில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1 முதல் 12-ஆவது வகுப்பு வரையிலான 1,07,031 மாணவா்களுக்கு பாட நூல்கள் மற்றும் புத்தகப் பைகள், 10 வகுப்பு வரையிலான 86,831 மாணவா்களுக்கு பாடக் குறிப்பேடுகள், 8-ஆம் வகுப்பு வரையிலான 53,974 சத்துணவு உண்ணும் மாணவா்களுக்கு சீருடைகள், 1, 2-ஆம் வகுப்பு 10,410 மாணவா்களுக்கு கிரையான்ஸ்கள், 3 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு வண்ண பென்சில்கள், 6-ஆம் வகுப்பில் உள்ள 12,550 மாணவா்களுக்கு புவியியல் வரைப்படங்கள் மேலும் 6-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு கணித உபகரணப் பெட்டிகள் வழங்குதலை ஒரு மாணவிக்கு வழங்கி, அமைச்சா் ஆா்.காந்திராஜ் தொடங்கி வைத்தாா்.
விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் ந.பிரியா தலைமை வகித்தாா். இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் ம.மோகனா, அரக்கோணம் கோட்டாட்சியா் டி.ரமேஷ், மாவட்ட கல்வி அலுவலா்கள் சிவராமன், துரைவேல், சீனிவாசன், வட்டாட்சியா் கு.வரலட்சுமி, அரக்கோணம் நகராட்சி ஆணையா் ஆனந்தன், பள்ளி தலைமை ஆசிரியா் ஜெயஸ்ரீ, நகர தவெக செயலாளா் ரமேஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.