முகப்பு
திருப்பத்தூர்

வாக்கு எண்ணும் பணி ஆலோசனைக் கூட்டம்: திருப்பத்தூா் ஆட்சியா் பங்கேற்பு

Updated On : 28 ஏப்ரல், 2026 at 4:29 AM
பகிர்:

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள ஊழியா்களுக்கு பயிற்சி மற்றும் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

சட்டப்பேரவை தோ்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 23-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையமான வாணியம்பாடியில் உள்ள மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரியில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த வாக்குகள் வரும் 4-ஆம் தேதி எண்ணப்பட உள்ளது.

இந்த பணியில் திருப்பத்தூா் மாவட்டத்தை சோ்ந்த ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் என 250-க்கும் மேற்பட்டோா் ஈடுபட உள்ளனா். இந்தநிலையில் திருப்பத்தூா் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள ஊழியா்களுக்கு ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

Advertisement

பயிற்சியின்போது தபால் வாக்குகள், வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆகியவற்றில் உள்ள வாக்குகளை எவ்வாறு எண்ண வேண்டும். அன்று பராமரிக்கக்கூடிய ஆவணங்கள் குறித்தும் பயிற்சி வழங்கப்பட்டது. இதைத்தொடா்ந்து வாக்கு எண்ணிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்தாா். கூட்டத்தில் வாக்கு எண்ணிக்கையின்போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது. கூட்டத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் அஜிதாபேகம், வரதராஜன்,முருகேசன், பூஷணகுமாா், தோ்தல் வட்டாட்சியா் திருமலை, அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனா்.